சிம்சோன் புதினமும் புதிரும்
விடை
வானதூதர், மீண்டும் ஒருமுறை, குழந்தையின் பிறப்பிற்காக தாய் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும், கடவுளின் நாசீரை வளர்ப்பதற்கான வழிமுறைகளையும் கற்பிக்கின்றார். ஆனால், வானதூதர், மனோவாகிடம் மிகவும் தயக்கமாகவே பேசுகிறார். அவன் கையலாகதவன் என்றும், மனைவியின் அளவுக்கு அவன் புத்திசாலி அல்லன் என்றும் அவர் எண்ணுவதாகவே அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன: 'நான் இப்பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் அவள் கவனமாய்க் கடைப்பிடிக்கட்டும்.' 'நாங்கள் இருவரும் பேசியது, அவளுக்கும் எனக்கும் உள்ளது. நீ இதில் தலையிடாதே!' என்று மனோவாகை எச்சரிப்பதுபோல இருக்கின்றன வானதூதரின் வார்த்தைகள். அல்லது, 'நாங்கள் பேசிக் கொள்வது உனக்குப் புரியாது. அது என்னவென்று எடுத்துச் சொன்னாலும் உனக்குப் புரியாது!' என்று மனோவாகின் 'தாமதத்தை,' 'புரிந்துகொள்வதில் இயலாமையைச்' சுட்டிக்காட்டுவதாக உள்ளன.
மேலும், 'திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது. திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது. தீட்டான எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும்' என்கிறார் வானதூதர். வானதூதரின் இந்த வார்த்தைகள், அவர் ஏற்கனவே 'வந்தபோது' அல்லது 'தோன்றியபோது' சொன்ன வார்த்தைகளைவிடக் குறைவாகவே உள்ளன. 'பையனின் மேல் சவரக்கத்தி படக்கூடாது' என்னும் வாக்கியமும், 'அவன் இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்' என்னும் வாக்கியமும் மறுபடியும் மறைந்து போகின்றன. மனைவி தன் கணவனிடமிருந்து மறைத்த அதே வார்த்தைகளை, இப்போது வானதூதர் மனோவாகிடமிருந்து மறைக்கக் காரணம் என்ன? ஒருவேளை ஓடி வந்த பதற்றத்தில் மனைவி, தன் கணவனிடமிருந்து அவற்றை மறைத்திருக்கலாம். ஆனால், நின்று நிதானமாகப் பேசிக்கொண்டிருக்கும் வானதூதர் அவற்றை மறைப்பது ஏன்? சிம்சோனின் பலவீனம் அவனுடைய தலைமுடியிலும், அந்தத் தலைமுடி மழிக்கப்படுவதிலும்தான் இருந்தது. இதுவே இறுதியில் அவனுக்கு இறப்பை வருவித்தது. மகனுடைய இந்தப் பலவீனத்தை அவனுடைய தந்தையிடமிருந்து மறைக்க, மனைவியும் வானதூதரும் நினைத்தார்களோ? 'பிறக்கப் போகும் குழந்தையின்' வாழ்வில் மிக அடிப்படையாக இருக்கப்போகின்ற இந்த இரகசியத்தை மனோவாகு அறிந்தால், அவன் அந்த இரகசியத்தைக் காப்பாற்ற இயலாமல் போய்விடும் என்று நினைத்தார்களோ? அல்லது இரகசியத்தைக் காப்பதில் 'ஆண்' நம்பத்தகாதவன் என நினைத்தார்களோ? அல்லது இரகசியத்தைக் காப்பதில் 'மனோவாகு' நம்பத்தகாதவன் என நினைத்தார்களோ?
இங்கே நாம் சிம்சோன் கதையாடலில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைக் கொஞ்சம் முன்கூட்டியே ஓடவிடுவோம். திமினாவில் திருமண விருந்தில் சிம்சோன் விடுக்கும் புதிரின் விடை முப்பது ஆண்களுக்கு மறைக்கப்பட்டு, மணப்பெண்ணுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது. அதுபோல, சோரேக்குப் பள்ளத்தாக்கில், சிம்சோனின் பலம் அல்லது பலவீனம் பற்றிய இரகசியம், பெலிஸ்தியச் சிற்றரசர்களுக்கு மறைக்கப்பட்டு, தெலீலாவுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது. இரகசியங்கள் ஆண்களுக்கு மறைக்கப்படுவது ஏன்? என்னும் கேள்வி அவிழாத முடிச்சாகவே சிம்சோன் கதையாடலில் இருக்கிறது.
(தொடரும்)
தொடர்கிறார் வானதூதர்….ஆயினும் மனோவாகுடனான வானதூதரின் மௌனம் அவன் கையாலாகாதவன் என்றும்,கேட்ட இரகசியத்தைக் காக்க இயலாதவன் என்றும் சொல்வது போன்றே உள்ளது. மனோவாகுவின் மனைவிக்கும்,வானதூதருக்குமிடையேயான ஒரு விஷயம் மனோவாகிற்கு மறைக்கப்படுகிறது. இரகசியம் காப்பதில் ஆண்கள் நம்பத்தகாதவர்களோ! என்ற கேள்வி தந்தைக்கு மட்டுமல்ல…நம் மனத்திலும் எழுகின்றது.திமினாவின் திருமணவிருந்தில் ஆண்களுக்கு மறைக்கப்பட்ட இரகசியம் போல்… தெலீலாவிற்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்டு, சிற்றரசர்களுக்கு மறைக்கப்பட்ட சிம்சோனின் பலம் / பலவீனம் பற்றிய இரகசியம் போல்…..வானதூதர் மனோபாகுவிடம் கூறிய இரகசியமும் அவிழாத முடிச்சாக உள்ளதைப் பார்க்கையில் பெண்களை எப்பொழுதுமே “ஓட்டை வாயர்களென” விமரிசிக்கும் ஆண்களை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது.
ReplyDeleteசீரியஸான கதையுடன் கொஞ்சம் காமெடியையும் சேர்த்துக்கொடுக்கும் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!