Thursday, September 16, 2021

இயேசுவின் உடனுழைப்பாளர்கள்

இன்றைய (17 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 8:1-3)

இயேசுவின் உடனுழைப்பாளர்கள்

மற்ற நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத ஒரு குறிப்பை லூக்கா நற்செய்தியாளர் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பதிவு செய்கின்றார். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார் என்று சொல்கின்ற லூக்கா, அவருடைய பணியில் பன்னிருவரும், பெண்கள் சிலரும் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கூறுகின்றது:

(அ) தனியாய் எவரும் சாதிப்பதில்லை

சாதனைகள் பெரும்பாலும் சாதிப்பவர்களால் மட்டுமே நடப்பதாக நாம் பார்க்கின்றோம். ஆனால், சாதிப்பவர்களுடன் இருக்கும் பலராலேயே சாதனை சாத்தியமாகிறது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுவது முதல், நம் வீட்டில் அடுப்பில் அரைப்படி அரிசியைச் சோறாக்கி இறக்கி வைப்பது வரை மற்றவர்களும் நம் சாதனையில் பங்கேற்கின்றனர். அடுப்பில் பொங்கும் சோறு நம் உழைப்புதான் என்றாலும், அரிசியை விளைவித்தவர், விற்றவர், வாங்கியவர், எரிவாயு, அடுப்பு என எல்லாவற்றிலும் மற்றவர்களின் உழைப்பு அடங்கியுள்ளது. இதை நன்றாக அறிந்தவர் இயேசு. ஆகையால்தான், தன் பணியில் தனக்கென உடனுழைப்பார்களாக திருத்தூதர்களை ஏற்படுத்துகின்றார். மற்றவர்களை மதிக்கும் திறன், மற்றவர்களுடன் பணிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வம், மற்றவர்களுடைய உடனிருப்பைக் கொண்டாடும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே உடனுழைப்பாளர்களைத் தங்களுடன் வைத்துக்கொள்வர்.

(ஆ) இறையாட்சிப் பணியில் சமத்துவம்

லூக்கா நற்செய்தி ஆண்-பெண் சமத்துவத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆணுக்கும் கதையாடல் பொருத்தமாக பெண் இருப்பார். சக்கரியாவுக்கும் மரியாவுக்கும் காட்சி, சக்கரியாவுக்கும் மரியாவுக்கும் ஒரு பாடல், காணாமல் போன ஆட்டைத் தேடும் ஆண் - நாணயத்தைத் தேடும் பெண் என எல்லாவற்றிலும் ஆண்-பெண் இணைவைப் பயன்படுத்துகின்றார் லூக்கா. அவ்வரிசையில் இயேசுவுடன் இருந்த பன்னிரு ஆண்களுக்கு இணையாக பெண்கள் சிலரைக் குறிப்பிடுகின்றார். பன்னிவரும் இயேசுவோடு உடனிருக்கின்றனர். பெண்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்

(இ) ஒவ்வொருவரும் தத்தம் நிலையில் தமக்குரியதைப் பகிர முடியும்

லூக்காவின் பட்டியலை ஆராய்ந்து பார்த்தால் அங்கே பலதரப்பினர் இருப்பதைப் பார்க்கின்றோம். இயேசுவால் பயன்பெற்றவர்கள், நலம் பெற்றவர்கள், அரண்மனையில் வேலை பார்ப்பவர்கள், பேய்கள் நீங்கியவர்கள் என இவர்கள் தாங்கள் பெற்றதற்கு நன்றிக்கடன் செலுத்தினார்கள். அல்லது இயேசுவின்மேல் கொண்ட தனிப்பட்ட அக்கறையினால் அவரைப் பின்தொடர்ந்தனர். இவர்கள் எத்தரப்பினராக இருந்தாலும் இவர்களின் இணைப்புப் புள்ளி இயேசு. தாம் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் அவர்கள் பணிவிடை செய்தனர்.

இன்று இறையாட்சிப் பணியில் நாமும் துறவுநிலையில் அல்லது பொதுநிலையில் பங்கேற்கின்றோம். நாம் நம் உடனிருப்பையும் உடைமையையும் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றோமா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 திமொ 6:2-12), 'பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்' என்கிறார் பவுல். ஆனால், பொருளை தீமையின் ஆணிவேர் என்று பார்க்காமல், அப்பொருளை இறையாட்சிப் பணிக்கான முதலீடாக மாற்றுகின்றனர் இயேசுவோடு உடனிருந்த பெண்கள்.

எப்படி அவர்களால் மாற்ற முடிந்தது?

அவர்கள் கொண்டிருந்த இறைப்பற்றினால்தான்.

'இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான். ஆனால், மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்' என்கிறார் பவுல். மனநிறைவுள்ளவர்கள் தங்களுக்கென எந்தப் பற்றுகளையும் கொண்டிருப்பதில்லை. ஏனெனில், பற்றற்றான் பற்றே அவர்களுடைய பற்றாக மாறிவிடுகிறது.


2 comments:

  1. சத்தான பல விஷயங்களைச் சொல்கிறது இன்றையப் பதிவு! பெரிய சாதனைகள் புரிந்துவிட்டு அதைத் தாங்களும் இரசிக்காமல்,!மற்றவரோடும் பகிர்ந்து கொள்ளத்தெரியாத சிலரைப் பார்த்து “ என்ன ஜென்மங்கள் இவர்கள்!” என்று மனம் புழுங்கியிருப்போம். “தட்டில் போட்ட சாதம் வாயைச் சென்றடையும் முன் நாம் நினைத்துப் பார்த்து நன்றி சொல்ல வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள்” என்ற உண்மையை, மற்றவர்களை… அவர்களின் உழைப்பை மதிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே அனுபவித்துப் பார்க்க முடியும் எனச் சொல்கிறது இன்றைய வாசகம்!
    “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது நம்மவரின் கூற்றாக இருப்பினும், நம்மிடம் உள்ளதைப்பிறருடன் பகிருகையில் மட்டுமே அப்பொருளுக்கு மதிப்பும், அர்த்தமும் கிடைக்கிறது. இயேசுவின் காலத்தில் நடந்த
    தும் இதுவே! ஆண்- பெண் பேதமின்றி அவர்கள் இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, இயேசுவை மையப்புள்ளியாக வைத்து வரைந்த ஒரு வாழ்வைத் தமதாக்கி வாழ்ந்தனர். தங்களுடமிருந்த பொருளைத் தங்களோடே வைத்துப் பூஜை பண்ணாமல், அவற்றை இறையாட்சிப் பொருளாக மாற்றி வாழ்ந்தால் நாமும் பற்றில்லா இறைவனைப் பற்றிக்கொள்வதும், நம்மிடமிருந்த அனைத்துமே நம்மை விட்டு அகலும் நிலை வந்தாலும், ஒரு ‘யோபு’ மன நிலைக்கு நாம் கடந்து செல்வதும் எளிதாகும்!

    வாழ்க்கையாக மாற்ற வேண்டிய சில வார்த்தைகள்! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete