ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் வாரம்
I. சாலமோனின் ஞானம் 1:13-15, 2:23-24
II. 2 கொரிந்தியர் 8:7,9,13-15
III. மாற்கு 5:21-43
இருவகை வாழ்க்கை
மனித குலம் தோன்றியது முதல் நாம் விடை தேடுகின்ற கேள்விகளில் ஒன்று, 'தீமை எங்கிருந்து வந்தது?' கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், தீமை எப்படி வந்தது? கடவுள் நல்லவர் என்றால், அவர் தீமையை ஏன் அனுமதிக்கிறார்? தீமை இந்த உலகில் இருக்கிறது என்றால் கடவுள் வலிமை அற்றவரா? - இப்படி நிறைய மெய்யியல் கேள்விகளை மனுக்குலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தீமைகளில் கொடிய தீமையாகக் கருதப்படுவது இறப்பு.
இறப்பை யாருக்கும் பிடிப்பதில்லை. பிறப்பு நமக்குப் பிடிப்பது போல இறப்பு பிடிப்பதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது போல, 'நீ இறந்தவுடன் விண்ணகத்திற்குச் செல்வாய்' என்று ஒருவரிடம் சொன்னாலும்கூட, அவருக்கு இறப்பதற்குப் பிடிப்பதில்லை. இந்த உலகை விட மறுவுலகம் நன்றாக இருக்கும் என்ற உறுதியைத் தந்தால்கூட இறப்பை யாரும் விரும்புவதில்லை. இந்த இறப்பு எப்படி வந்தது? என்ற கேள்விக்கு நிறைய இலக்கியங்களும் சமயங்களும் தத்தம் முறைகளில் விடை காண முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, கில்கமேஷ் என்ற சுமேரிய அக்காடிய இலக்கியத்தில், 'கடவுள் உலகைப் படைத்தபோதே இறவாமையைத் தனக்கென வைத்துக்கொண்டு இறப்பை நமக்குத் தந்துவிட்டார். ஆக, குறுகிய இந்த வாழ்க்கையில், நன்றாகக் குளி, நல்ல ஆடை அணி, நறுமணத் தைலம் பூசு, காதல் மனையாளைத் தழுவிக்கொள், அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளைப் பேணி வளர். அதுவே இறவாமை' என்று இறவாமைக்கு புதிய பொருள் தரப்படுகின்றது.
இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சாலமோனின் ஞானநூல் இறப்பு எப்படி வந்தது என்பதற்கான விடையைச் சொல்லும் பகுதியே இன்றைய முதல் வாசகம். கிறிஸ்து பிறப்பதற்கு மிகவும் சில மாதங்களுக்கு முன்பு வடிவம் பெற்ற நூல் இது. கிரேக்கமயமாக்கலின் பின்புலத்தில் எழுதப்பட்ட நூல் மனித இறப்பு பற்றி பேசுகின்றது. நூலின் ஆசிரியர் இறப்பு எப்படி வந்தது என்பதை மிக எளிமையாகப் பதிவு செய்கின்றார்: 'சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது.' அதாவது, படைப்பின் தொடக்கத்தில் ஆதாம்-ஏவாள் பாம்பால் சோதிக்கப்பட்ட நிகழ்வை, அலகையின் பொறாமை என்று மொழிகின்றார் ஆசிரியர். அலகை இருக்கிறதா? என்ற அடுத்த கேள்விக்கு நாம் சென்றுவிட வேண்டாம். மாறாக, அனைத்தும், அனைவரும் வாழ வேண்டும் என விரும்புகின்றார்.
நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். இருந்தாலும், நாம் வாழும் இந்த உலகில் வாழ்வை அழிக்கக் கூடிய முதல் காரணியாக அன்று இருந்தது நோய். இன்றும், நோய்தான் முதன்மையான காரணி. அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நாம் முன்னேறினாலும் இன்று நோய்தான் வெல்ல முடியாத எதிரியாக நம் முன் உள்ளது.
இரு வகை நோய்களால் துன்பப்பட்டவர்கள் எப்படி இயேசுவால் நலம் பெற்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன் நலம் பெறுகின்றார். தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இயேசு தொட்டவுடன் உயிர் பெறுகின்றார். இரண்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டது பற்றி நிறையக் கருத்துகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. பெண் 12 ஆண்டுகள் நோயினால் வருந்துகிறார். இளவலுக்கு வயது 12. இரத்தம் உயிர் சார்ந்தது. இளவல் உயிர் துறக்கின்றார். இரண்டு இடங்களிலும் கூட்டம் தடையாக இருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் நம்பிக்கை வலியுறுத்தப்படுகின்றது. இளவல் இறப்பதற்கான தளத்தை பெண் நிகழ்வு ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொழுகைக்கூடத் தலைவரின் அவசரத்தைக் குறைப்பதற்காக நிகழ்வு நடக்கிறது. கூட்டம், பெண், இயேசுவின் உரையாடல் என அனைத்தும் இளவல் உயிர் பெறுவாரா? என்ற கேள்வியை வாசகரில் எழுப்புகிறது.
நம் வாழ்க்கையில் துன்பம் உண்டு என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். நோய், முதுமை, இறப்பு போன்ற உடலியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது சோர்வு, தயக்கம், பயம், குற்றவுணர்வு, வெறுமை, தனிமை போன்ற உளவியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது பாவம், உடனடி இன்பம் போன்ற ஆன்மிகத் துன்பங்களாக இருக்கலாம். துன்பங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், துன்பங்களை நாம் இரண்டு முறைகளில் எதிர்கொள்ளலாம். அல்லது துன்பம் நிறைந்த இவ்வாழ்க்கையை நாம் இரண்டு முறைகளில் வாழலாம்.
ஒன்று, இரத்தப் போக்குடைய பெண் வாழ்ந்தது போல.
இரண்டு, தொழுகைக் கூடத் தலைவர் வாழ்ந்தது போல.
முதலில், இரத்தப் போக்குடைய பெண் போல எப்படி வாழ்வது?
நிகழ்வில் வரும் இந்தப் பெண் மூன்று நிலைகளில் துன்பம் அனுபவிக்கின்றார்: உடல்சார் துன்பம். உயிர் குடியிருக்கிறது என்று மக்கள் நம்பிய இரத்தம் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருக்க, இந்தப் பெண் வெளிறிப் போயிருப்பாள். இரண்டாவது, பொருள்சார் துன்பம். மருத்துவரிடம் தன் பணத்தை எல்லாம் செலவிட்டதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆன்மிகம்சார் துன்பம். உடலில் ஒழுக்கு இருப்பது தீட்டு எனக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பெண் கடவுளிடமிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்திருப்பார். உடல் வலி பொறுக்காமல், கையில் காசு இல்லாமல், கடவுளால் கைவிடப்பட்ட உணர்வில், தனக்கிருந்த இறுதி வாய்ப்பாக இயேசுவின் மேலாடையைப் பார்த்தார். தன் இயலாமையில், தன் இல்லாமையில் இயேசுவால் எல்லாம் இயலும் என்றும், அவர் வழியாகவே தன் இருத்தல் சாத்தியம் என்றும் உணர்ந்த அவர் கூட்டத்தை ஊடுருவுகின்றார். கூட்டம் இங்கே ஒரே நேரத்தில் தடையாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. கூட்ட மிகுதியால் இயேசுவை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் கூட்டம் இருந்ததால் தன் முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்துக்கொள்ளவும் இவரால் முடிந்தது. இயேசுவின் மேலாடையைத் தொட்ட அந்த நொடியில் தன் உடலில் மாற்றத்தை உணர்கின்றார் பெண். என்னே ஒரு ஞானம்! தன் உடலின் இயக்கத்தைத் தெளிவாக உணர்ந்தவராக இருக்கிறார். உடல் நலம் பெற்ற மகிழ்ச்சி சற்று நேரத்தில் களைகிறது. 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்வி இவளுடைய காதுகளில் விழுகிறது. இவ்வளவு நேரம் தன் உடல் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்ட அவள், இப்போது, 'மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற உள்ளப் போராட்டம் அனுபவிக்கின்றாள். இருந்தாலும், இயேசுவிடம் சரணடைகின்றார். தனக்கு நடந்தது அனைத்தையும் சொல்கின்றார். 'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என அனுப்புகிறார் இயேசு.
இந்தப் பெண், தன் பார்வையை இயேசுவின்மேல் பதிய வைத்தாள். தனக்கு முன் இருந்த கூட்டம் என்ற தடையை வாய்ப்பு எனப் பயன்படுத்தினார். இயேசுவிடம் சரணாகதி அடைந்தார். இயேசுவின் மேலாடைக்கும் நலமாக்கும் ஆற்றல் உண்டு என உணர்ந்தார். பாதியில் வந்தார். பாதியில் சென்றார். நலமற்று வந்தவர், உடலிலும் உள்ளத்திலும் நலம் பெற்றுச் செல்கின்றார்.
இரண்டாவதாக, தொழுகைக்கூடத் தலைவர் போல எப்படி வாழ்வது?
இயேசுவின் தொடுதல்தான் தன் மகளுக்கு நலம் தரும் என நம்புகிறார் தலைவர். இயேசு உடனடியாக அவருடன் செல்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது. ஆனால், வேகம் உடனடியாகக் குறைகிறது. கூட்டம் ஒரு தடையாக மாறுகிறது. பாதியில் வந்து நலம் பெற்ற பெண் தடையாக இருக்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வைக் கண்டவுடன் தலைவரின் நம்பிக்கை உறுதியாகியிருக்கும். ஆனால், சற்று நேரத்தில் வந்த மகளின் இறப்புச் செய்தி அவருக்குப் பயம் தருகிறது. 'அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!' என அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. வீட்டில் இருந்த கூட்டம் இன்னொரு தடை. அவர்கள் பேசிய கேலிப்பேச்சு மற்றுமொரு தடை. தடைகளைத் தாண்டிச் சென்றவர் தன் மகளை நலமுடன் பெற்றுக்கொள்கின்றார்.
இந்த நிகழ்வில், நம்பிக்கையில் இவர் நிலைத்து நிற்க கடவுளின் துணை தேவைப்படுகிறது. ஆனால், முதல் நிகழ்வில், நம்பிக்கையால் உந்தப்பட்டு அந்தப் பெண் வருகின்றார். அங்கே, நம்பிக்கை பாராட்டப்படுகிறது. தலைவர் நிகழ்வில் நம்பிக்கை அறிவுறுத்தப்படுகின்றது.
ஆக, இரத்தப் போக்குடைய பெண் போல நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது முதல் வகை.
தலைவர் போல கடவுள் நமக்கு நம்பிக்கை தந்தால்தான் அவருடன் பயணிப்பது இரண்டாவது வகை.
இன்னொரு வகையான வாழ்க்கை முறையும் இருக்கிறது. கூட்டத்தின் மனநிலை. இயேசுவின் உடனிருப்பும் நம்பிக்கை நிறைந்த சொற்களும் அவர்களுக்குக் கேலியாக இருக்கின்றன. வாழ்க்கையின் துன்பத்தைக் கண்டே பழகிப் போனவர்கள் விரக்தியாகச் சிரிக்கிறார்கள்.
இவர்களுக்கு வேலைக்காரர்கள் பரவாயில்லை. 'உம் மகள் இறந்துவிட்டாள். போதகரைத் தொந்தரவு செய்யாதீர்!' என எதார்த்தமாகச் சொல்கின்றனர். 'பால் கொட்டிவிட்டது! இனி அழுது புலம்பி என்ன செய்ய?' என்பது அவர்களுடைய மனநிலை. பல நேரங்களில் இதுதான் நம் மனநிலையாகவும் இருக்கிறது.
ஆக, பெண், தொழுகைக்கூடத் தலைவர், கூட்டம், வேலைக்காரர்கள் என நாம் நம் வாழ்க்கையை நான்கு நிலைகளில் எதிர்கொண்டாலும், நம்பிக்கையின் பாடங்களைக் கற்பிப்பவர்கள் பெண்ணும் தலைவரும். பெண் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கை இருந்தாலும், அங்கே சில சஞ்சலங்கள் எழவே செய்கின்றனர். இறைவனின் உடனிருப்பால் அதைத் தக்கவைக்கின்றார் தலைவர்.
நம்பிக்கை என்பது கொடை. கடவுள் கொடுத்தாலன்றி அதை எவரும் பெற்றுக்கொள்ள இயலாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளின் உடனிருப்பு மேலோங்கி நிற்கிறது. நாம் நோயுற்றாலும் இருந்தாலும் நாம் தொடும் தூரத்தில் கடவுள் இருக்கிறார், கடவுளின் மேலாடை இருக்கிறது.
இதுவே இயேசு கிறிஸ்துவின் அருள்செயல் என்று கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல்: 'அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்!'
இறுதியாக,
தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலும் நாம் நலம் பெறுவோம்!
இதையே திருப்பாடல் ஆசிரியர் (காண். 30), 'நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்!' என்று பாடுகின்றார்.