ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி (பெரிய வியாழன்)
I. விடுதலைப் பயணம் 12:1-8,11-14 II. 1 கொரிந்தியர் 11:23-26 III. யோவான் 13:1-15
இறுதி வரை அன்பு
ஒரு கணவன் மனைவி. கணவன்மேல் அந்த மனைவிக்கு நிறைய மதிப்பு உண்டு. கணவனும் அவரை மிகவே அன்பு செய்தார். உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்ற ஒரு நாளில் கணவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது என அறிகிறார்கள். இருவருக்குமே கவலை. கணவரின் உறவினர்கள் நடுவில் யாராவது ஒருவர் சிறுநீரக தானம் செய்வார்களா எனப் பார்க்கிறார்கள். யாருமே முன்வரவில்லை. ஒரு கட்டத்தில், மனைவி கணவருக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று தன் சிறுநீரகம் பொருந்துமா என்பதை அறிகின்றார். பொருந்தும் என்று தெரிந்தவுடன் தானே சிறுநீரக தானம் செய்ய முன்வருகிறார். தன் உடலின் ஒரு பகுதி குறைந்தாலும், தான் இதற்காக நிறைய மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் தன் கணவன்மேல் கொண்ட மதிப்பினால் அந்த மனைவி அவருக்காகத் துன்பம் ஏற்கின்றார். தன் கணவரை 'இறுதி வரை' - சிறுநீரகம் தானம் கொடுக்கும் அளவுக்கு - அன்பு செய்கிறார்.
அவர் ஒரு மகன். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். திடீரென தாய்க்கு உடல்நலம் சரியில்லை எனக் கேள்விப்பட்டு, வீட்டிற்கு வருகின்றார். தன் தாயின் அருகிலிருந்து அவர் கவனித்துக்கொள்கிறார். தாய் இறக்கும் வரை அவரோடு உடனிருக்கிறார். தாயை அவருடைய 'இறுதி வரை' - இறப்பு வரை - அன்பு செய்கிறார்.
மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோர் நாட்டில் சான் சால்வடோர் உயர்மறைமாவட்டத்தில் பேராயராக இருந்தவர் ஆஸ்கர் ரொமேரோ. சால்வடோர் குடியுரிமைப் போர் நடந்த போது சாதாரண மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார். 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அன்று திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அவரை எதிர்த்தவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோகின்றார். தன் நாட்டின் மக்களை அவர் 'இறுதி வரை' - தன் இறப்பு வரை - அன்பு செய்கிறார்.
இன்றைய நாள் நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:
ஒன்று, இந்த இரவில்தான் இயேசு, 'இது என் உடல், இது என் இரத்தம்!' என்று சொல்லி, நற்கருணையை ஏற்படுத்துகின்றார்.
இரண்டு, 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்துகின்றார்.
மூன்று, 'இதை நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று தன் சீடர்களின் பாதங்கள் கழுவி பணிபுரியும் தலைமைத்துவத்தைக் கற்றுக்கொடுக்கின்றார்.
நான், 'நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்று அன்புக் கட்டளையை புதிய கட்டளையாக வழங்குகின்றார்.
இந்த நான்கு முக்கியத்துவங்களையும், 'அவர் இறுதிவரை அன்பு செய்தார்' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் சொல்லாட்சி வழியாகச் சிந்திப்போம்.
முதலில், 'அவர் இறுதிவரை அன்பு செய்தார்' என்னும் வாக்கியத்தின் பொருள் என்ன?
இங்கே, 'அன்பு' என்பதற்கு, யோவான் நற்செய்தியாளர், 'அகாபே' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். கிரேக்க மொழியில் அன்பைக் குறிக்க நான்கு சொற்கள் உள்ளன. முதல் சொல், 'ஈரோஸ்' என்பது. இது உடல்சார்ந்த ஈர்ப்பால் வரும் அன்பைக் குறிக்கிறது. இதை 'காதல்' எனலாம். இனிமைமிகு பாடல் நூலில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் இத்தகைய அன்பைப் பற்றியே பாடுகின்றன. நம் தமிழ் இலக்கியத்தில் உள்ள அகநானூறு மற்றும் குறுந்தொகை நூல்களும் இத்தகைய பாடல்களைத்தான் கொண்டிருக்கின்றன. இரண்டாம் சொல், 'ஃபிலியா' என்பது. இது உள்ளத்து ஈர்ப்பால் வரும் அன்பைக் குறிக்கிறது. இதை 'நட்பு' எனலாம். விவிலியத்தில் நாம் காணும் யோனத்தான்-தாவீது அன்பு இத்தகையது. மூன்று, 'ஸ்டார்கே'. இது உடன்பிறப்புகள் மற்றும் இரத்த உறவுக்குள் நிகழும் அன்பு. எடுத்துக்காட்டாக, தன் சகோதரன் லோத்துக்கு எதிராகப் பகைவர்கள் புறப்பட்ட போது அவர்களை எதிர்கொண்டு தன் சகோதரனைக் காப்பாற்ற ஆபிரகாம் விரைந்து சென்றது இத்தகைய அன்பால்தான். நான்காவது சொல், 'அகாபே.' இரத்த உறவு, திருமண உறவிலும், அவ்விரு உறவுகளையும் தாண்டி, முழுக்க முழுக்க தன்னையே பிறருக்குக் கையளிக்கின்ற உடன்படிக்கை அன்பு இது. கிரேக்கர்கள் பெரும்பாலும் இதைக் கடவுள் அல்லது பிரபஞ்சம் மனிதர்களை அன்பு செய்வதைக் குறிக்கப் பயன்படுத்தினர். அதாவது, மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் கதிரவன் அனைவர்மேலும் தன் ஒளியை அள்ளி வீசுகிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் மழை யாவருக்கும் பொழிகிறது. கதிரவனும், கடவுளும், மழையும் அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளாமல், தங்களிடம் உள்ளதை அப்படியே எந்தவொரு நிபந்தனையும் இன்றி வழங்குகின்றார்கள். ஆக, 'அகாபே' என்பது நிபந்தனையற்ற, தற்கையளிப்பு செய்யும் அன்பு. இன்றைய நற்செய்தி வாசகத்தில், யோவான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இயேசுவின் தற்கையளிப்பைக் காட்டுவதற்கே. இதே தற்கையளிப்பையே நாம் முதலில் சொன்ன மூன்று எடுத்துக்காட்டுகளில் - கணவன் மனைவி, மகன் தாய், ஆஸ்கார் ரொமேரா மக்கள் - பார்க்கின்றோம்.
அடுத்ததாக, 'இறுதி வரை' (கிரேக்கத்தில், 'எய்ஸ் டெலோஸ்') என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. 'இறுதி' என்பது மூன்று பொருளைக் குறிக்கிறது. ஒன்று, நேரம் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் இறுதி வரை தேர்வு எழுதினான் என்று சொல்லும்போது, அவன் 10 முதல் 1 மணி வரை எழுதினான். இடையில் எழுந்து செல்லவில்லை என்பது பொருள். இரண்டு, இடம் அல்லது தூரம் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, நான் பேருந்து இல்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என்னைத் தன் காரில் ஏற்றிக்கொண்டவர் இறுதி வரை வந்தார். இதில், இறுதி வரை என்பது நாம் செல்ல வேண்டிய இடம் அல்லது கடக்க வேண்டிய தூரத்தைக் குறிக்கின்றது. மூன்று, நிறைவு அல்லது முழுமை சார்ந்தது. பிறந்த நாள் கொண்டாடுகிறோம். கேக் வெட்டுகிறோம். அழைக்கப்பட்டவர்கள் மிகக் குறைவு, ஆனால் கேக் பெரியதாக இருக்கிறது. அங்கிருந்த ஓர் இளவல் அந்த கேக்கை இறுதிவரை உண்கின்றார். அதாவது, முழுமையாக உண்கின்றார்.
'இறுதிவரை இயேசு அன்பு செய்தார்' என்பதை நாம் மேற்காணும் மூன்று பொருள்களிலும் எடுத்துக்கொள்ளலாம். தன் வாழ்வின் இறுதி நேரம் வரை அன்பு செய்தார். கலிலேயாவில் தொடங்கிய தன் பயணத்தின் இலக்கான எருசலேம் வரை அன்பு செய்தார். முழுமையாக, எந்தவிதக் குறையுமின்றி, 'தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு' அன்பு செய்தார்.
இயேசு யாரை அன்பு செய்தார்?
'உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர்' என எழுதுகிறார் யோவான்.
யோவான் நற்செய்தியில், 'உலகம்' என்றால் 'கடவுளுக்கு எதிரான நிலை' என்றும், 'கடவுள் இயங்கும்தளம்' என்றும் பொருள். இங்கே, இரண்டாவது பொருளில்தான் நாம் இந்த வார்த்தையை எடுக்க வேண்டும். 'தமக்குரியோர்' என்றால் அது திருத்தூதர்களையோ, தனிப்பட்ட யூத இனத்தையோ மட்டும் குறிக்கவில்லை. மாறாக, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட அனைவரையும் - அதாவது, எல்லாரையும் - குறிக்கிறது. ஆனால், இந்த நிலை ஒரு சிறப்புரிமை மட்டுமல்ல. மாறாக, ஒரு பொறுப்புணர்வும் கூட. இந்தச் சிறப்புரிமையைப் பெறுபவர்கள் அதற்கேற்றாற் போல வாழ்ந்த அந்த நிலையைத் தக்கவைக்க வேண்டும். யோவான், தன் நற்செய்தியின் தொடக்கத்தில், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' எனப் பதிவு செய்கின்றார். இங்கே, மக்கள் தங்களிடம் வந்தவருக்குச் செய்த எதிர்மறையான பதிலிறுப்பையே நாம் காண்கின்றோம்.
நாம் எல்லாருமே அவருக்கு உரியவர்கள். நம் அனைவரையும் அவர் இறுதி வரை அன்பு செய்கிறார்.
அவர் நம்மை இறுதி வரை எப்படி அன்பு செய்கின்றார்?
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் கொண்டாட வேண்டிய முதல் பாஸ்கா விருந்து அல்லது விழா பற்றி மோசே மற்றும் ஆரோன் வழியாக கடவுள் வழங்கும் அறிவுரையைக் கேட்கின்றோம். விருந்து எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் எனச் சொல்கின்ற ஆண்டவராகிய கடவுள் தொடர்ந்து, 'இது ஆண்டவரின் பாஸ்கா. ஏனெனில், நான் இன்றிரவே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்கு வரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்' என்று சொல்கின்றார். ஆக, ஆண்டவராகிய கடவுள் கடந்து செல்வதையும், அவருடைய கடந்து செல்தலால் தீமை அழிவதையும், கடவுளின் வல்லமை எதிரிகளின் முன் வெளிப்படுவதையும் நாம் காண்கின்றோம். ஆக, தீமையை அழிப்பவராக கடவுள் நம் முன் கடந்து சென்று நம்மை அன்பு செய்கின்றார்.
இரண்டாம் வாசகத்தில், கொரிந்து நகரில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் நடுவே, அப்பம் பிட்குதல் நிகழ்வில் நடந்த பிறழ்வுகளை - ஏற்றத்தாழ்வுகளை, ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு மற்றவர் தள்ளப்படுவதை, உணவு மற்றும் குடிவெறியை - கடிந்துகொள்கின்ற பவுல், இந்த அப்பம் பிட்குதலின் தோற்றுவாய் ஆண்டவராகிய இயேசு என்றும், இந்த வெளிப்பாடு தான் பெற்றுக்கொண்டது என்றும், இதற்கு ஓர் இலக்கு இருக்கிறது என்பதையும் முன்மொழிகின்றார். 'பெற்றுக்கொண்டேன் - ஒப்படைக்கின்றேன்' என்று சொல்வதன் வழியாக, இந்த மரபு வாழையடி வாழையாகத் தொடர வேண்டும் என்கிறார் பவுல். இயேசு ஏற்படுத்திய நற்கருணை புதிய உடன்படிக்கை ஆகும். ஆக, இது உறவைக் குறிக்கின்றது. அப்பம் பிட்குதலின் இலக்கு என்னவென்றால், 'ஆண்டவருடைய சாவை - தற்கையளிப்பை - அவர் வரும் வரை அறிக்கையிடுவது. ஆக, கடவுள் நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டு, நமக்காகத் தன்னையே கொடையாகக் கொடுத்து நம்மை அன்பு செய்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில், பாஸ்கா விழாவுக்கு முந்தைய நாளில் - யோவான் நற்செய்தியில் நாள் முரண்பாடு உள்ளது - தம் சீடர்களோடு உணவருந்துகின்ற இயேசு, அப்பமும் இரசமும் கொண்டு நற்கருணையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தண்ணீரும் துண்டும் கொண்டு 'பணிவிடை நற்கருiணையை' ஏற்படுத்துகின்றார். இது ஒரு பெரிய இடறலாக இயேசுவின் சீடர்களுக்கு இருந்திருக்கும். ஓர் அடிமை செய்கின்ற வேலையை, தங்களில் யாரும் அதைச் செய்வதற்கு முன் வராத நிலையில், தங்கள் தலைவர் அச்செயலைச் செய்தது குறித்து அவர்கள் பதறிப் போனார்கள். 'உங்களை நான் பணியாளர்கள் என்றல்ல, மாறாக, நண்பர்கள் என அழைத்தேன்' என்று சொன்ன இயேசு, நட்பின் அடையாளமாக பணிவிடையைக் கையில் எடுக்கின்றார். அவர் நமக்குப் பணிவிடை செய்து நட்பு பாராட்டினால் அன்றி, நாம் யாருக்கும் பணிவிடை செய்யவோ, யாரிடமும் நட்பு பாராட்டவோ முடியாது. ஆகையால்தான். தன் பாதங்களைக் கழுவ பேதுரு அனுமதிக்காதபோது, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' என்கிறார் இயேசு. ஆக, நமக்குப் பணிவிடை செய்வதன் வழியாக, பணிவிடை வழியாக, நம்மை நண்பர்கள் நிலைக்கு உயர்த்துவதன் வழியாகக் கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.
நாம் அன்றாடம் அல்லது அடிக்கடி நற்கருணை கொண்டாடுகின்றோம். அருள்பணி நிலையில் பணிக்குருத்துவத்திலும், பொதுநிலையில் பொதுக்குருத்துவத்திலும் பங்கேற்கின்றோம். இரண்டிலும் நாம் கற்க வேண்டியது ஒன்றே: 'அன்பு செய்தல்', குறிப்பாக, 'இறுதிவரை அன்பு செய்தல்.'
இறுதிவரை அன்பு செய்தல் என்பது, (அ) தீமைகளை அழித்து நாம் அன்பு செய்பவரோடு உடன் செல்வது, (ஆ) ஒருவர் மற்றவரோடு உடன்படிக்கை செய்துகொண்டு, உடன்படிக்கையின் உரிமைகள் மற்றும் கடமைகளை உணர்ந்து, நம்மையே கொடையாக மற்றவருக்குக் கொடுப்பது, மற்றும் (இ) ஒருவர் மற்றவருக்குக் கீழ் நம்மையே நிறுத்தி நம் முகம் உயர்த்தி அவரின் முகம் பார்ப்பது என்னும் மூன்று நிலைகளில் நம் வாழ்வில் வெளிப்படலாம்.
இந்த மூன்று நிலைகளையும் அடைய சில தடைகள் இருக்கின்றன: (அ) நாம் அன்பு செய்பவர்களுக்கே நாம் சில நேரங்களில் நாம் தீங்கு நினைக்கிறோம். அவர்களைத் தவறாகப் புரிந்துகொள்தல், புரிந்துகொள்ள மறுத்தல், நம் எதிர்பார்ப்புகளை அவர்கள்மேல் சுமத்துதல், குற்றங்காணுதல், பொறுப்புணர்வு துறத்தல், போன்றவற்றின் வழியாக, நாம் அவர்களுக்குத் தீங்கிழைப்பதோடு, அவர்களோடு உடன்செல்ல மறுக்கின்றோம். இறுதிவரை இருக்க வேண்டிய உடனிருப்பு இவ்வாறாக பாதியிலேயே முடிந்துவிடுகிறது. (ஆ) உடன்படிக்கையின் கடமைகளை மறந்து உரிமைகளை மட்டும் பிடித்துக்கொள்வது இரண்டாவது தடை. திருமண உறவின் உரிமையை நாம் விரும்புவது போல கடமையையும் உணர வேண்டும். அருள்பணி நிலையிலும் அவ்வாறே. உரிமையை முன்னிறுத்தி, கடமையை மறுக்கும்போது நாம் நம்மை நமக்குள்ளே வைத்துக்கொள்கின்றோம். மற்றும் (இ) மற்றவருக்குக் கீழ் அமர்ந்து அவரின் முகம் பார்ப்பதை விடுத்து, அவருக்கு மேல் அமர்ந்து அவரைப் பார்க்க விரும்புகின்றோம். கீழிருந்து மேல் பார்வையில் கண்கள் சந்திக்கும். கண்கள் சந்திக்க அங்கே உறவு உண்டாகும். நம் விருந்தி மேசையிலிருந்து எழுவதும், நம் ஈகோ என்னும் மேலாடையைக் களைவதும், அமர்வதும் கடினமே. ஆனால், கடினமானவையே வாழ்வின் இனிமையானவையாக மாறுகின்றன.
இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (116), 'ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரின் பெயரைத் தொழுவேன்' என்கிறார் ஆசிரியர். ஆண்டவர் நம்மை இறுதிவரை அன்பு செய்து நமக்கு நன்மை செய்தார். அவரைத் தொழுவது என்றால், அவரின் கிண்ணத்தைக் கையில் ஏந்துதல் என்றால் அவரைப் போல நாமும் இறுதி வரை அன்பு செய்ய முன்வருதலே.
இறுதி வரை அன்பு செய்தல் நலம்!