இன்றைய (9 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 11:15-26)
பின்னைய நிலைமை
புனித அகுஸ்தினார் தன் ஒப்புகை நூலில், தனது மனமாற்றத்தின் பேறுகால வேதனை பகுதியில், திடமான விருப்பம் தனக்கு இல்லை என்று சொல்லி வருந்துகிறார்.
அது என்ன திடமான விருப்பம்?
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு விருப்பம் வேண்டும். இதையே ஆங்கிலத்தில் 'வில் பவர்' என்கிறோம். 'வில்' என்பதை 'விருப்பம்' என்று தற்காலிகமாக மொழிபெயர்த்துக்கொள்வோம்.
'என் கண் இருக்கிற பேனாவைப் பார்க்கின்றன என் கண்கள். 'பேனாவை எடு!' என்று என் மூளை சொன்னவுடன், என் கை பேனாவை எடுக்கிறது. கொஞ்ச நேரம் கழித்து, என் மனத்தில் இச்சைநிறை எண்ணம் ஓடுகிறது. 'அப்படி நினைக்காதே!' என்று என் மூளை சொல்கிறது. இருந்தாலும், மூளை தொடர்ந்து இச்சை நிறை எண்ணங்களை ஓட விடுகிறது. மூளை, உடலுக்குச் செய்யும் கட்டளை உடனடியாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால், மூளை, தனக்கே இடும் கட்டளையைச் செயல்படுத்த இயலவில்லை. இதுவே திடமற்ற விருப்பம்'
- இப்படியே அகுஸ்தினார் விருப்பத்தை வரையறுக்கிறார்.
நமக்கு நாமே கொடுக்கின்ற வாக்குறுதிகள், 'விருப்பத்திலிருந்து' வருகின்றன. நாம் ஒவ்வொரு வாக்குறுதியிலிருந்தும் தவறும்போதும், நம் விருப்பம் தன் திடத்தை இழந்துகொண்டே வருகிறது. எடுத்துக்காட்டாக, மதியம் 20 நிமிடங்கள் தூங்குவதற்கு அலார்ம் வைத்துவிட்டு, நான் 40 நிமிடங்கள் தூங்கி விடுகிறேன். மாலையில் ஒரு மறையுரைக்குச் செல்லும்போது, என் மூளை என்னிடம், '20 நிமிடம் தூங்குகிறேன் எனச் சொல்லிவிட்டு 40 நிமிடங்கள் தூங்கி விட்டாய். நீ எப்படி நன்றாக மறையுரை வைப்பாய்? சின்னச் சின்ன வாக்குறுதிகளைக் கடைப்பிடிக்காத உன் விருப்பம் எப்படி திடமாக இருக்கும்?' என்று கேட்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், தனக்கு எதிராக வைக்கப்படும் 'பெயல்செபூல்' குற்றச்சாட்டுக்குப் பதிலிறுக்கும் இயேசு, 'திடமான விருப்பம்' பற்றி இரண்டு நிலைகளில் பேசுகிறார்:
(அ) தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் அரசும் வீடும் விழுந்துவிடும்.
(ஆ) ஒருவரை விட்டு வெளியேறுகிற தீய ஆவி மீண்டும் அவனது வீட்டுக்கு, தன்னைவிட பொல்லாத ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டு வரும்.
முதலில், 'தனக்கு எதிராகத் தானே பிளவுபடுதல்' என்பது நமக்குள்ளே எழும் போராட்டம். எடுத்துக்காட்டாக, இரவில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதைவிட முக்கியமாக எனக்கு தேர்வு தயாரிப்பு இருக்கிறது. 'தேர்வுக்கு நான் படிப்பேன்' என என் மனம் மாலை 6 மணிக்கு முடிவெடுக்கிறது. ஆனால், இரவு 9 மணி ஆனவுடன், அது தொலைக்காட்சியை நோக்கிச் செல்கிறது. இதுதான், தனக்கு எதிராகத் தானே பிளவுபடுதல். 9 மணிக்கு டிவி பார்க்குமாறு என்னை யாரும் தடுக்கவில்லை. எனக்கு நானே விருப்பப்பட்டு, 'நான் டிவி பார்ப்பதில்லை' என்று ஒரு முடிவெடுக்கிறேன். பின், அதே முடிவை நானே மீறுகிறேன். இப்படிச் செய்வது என் திடமான விருப்பத்தை நெகிழச் செய்கிறது.
இரண்டாவதாக, சிறிய பேய் என நினைத்து அதை வெளியேற்றிவிட்டு, கொஞ்சம் கவனமில்லாமல் இருந்தால், அந்தப் பேய் அல்லது அந்தத் தீமை இன்னும் நிறைய தீமைகளைக் கொண்டுவந்து விடும். தொடர் பயிற்சி இல்லாத போது விருப்பம் வலுவிழந்துவிடும். துறவற இல்லங்களில் தினமும் செபங்களும், திருப்பலிகளும் இருக்கக் காரணம் என்ன? ஒரு நாளைக்கு ஐந்து மணிக்கு எழுந்தவர், ஒவ்வொரு நாளும் ஐந்து மணிக்கு எழக் காரணம் என்ன? இடத்தைத் தூய்மையாக வைப்பதற்கு பயிற்சி தேவை. பயிற்சி இல்லை என்றால், ஒரு நாள் விரட்டப்படுகின்ற சோம்பல், அடுத்த நாள், அதைவிடக் கேடான தீமைகளைக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். கலா 3:7-17), கலாத்திய திருஅவையினரின் வலுவிழந்த விருப்பத்தைத் தொடர்ந்து கண்டித்துக்கொண்டே வருகின்றார் பவுல்.
திடமான விருப்பம், திடமான தன்மதிப்பைத் தரும். திடமான தன்மதிப்பு என் வாழ்வை மேன்மையாக்கும்.
எனக்கு நானே பிளவுபட்டுக் கிடக்கும் இடத்தை, நேரத்தை அறிந்து, என்னைச் சரி செய்தல் நலம்.
விருப்பம் என்பதே நாம் தெளிந்து,தெரிந்து எடுப்பதால் அதில் திடமாகத்தான் இருப்போம். ‘அதிலும் “ திடமான” விருப்பமெனில் அது கண்டிப்பாகத் தன்மதிப்பைத் தரும்.திடமான தன்மதிப்பு என் வாழ்வை மேன்மையாக்கும்.’ “ஆகவே எனக்கு நானே பிளவு பட்டுக்கிடக்கும் இடத்தை,நேரத்தை அறிந்து என்னை சரி செய்தல் நலம்.”
ReplyDeleteதந்தையின் மனசாட்சி மட்டுமின்றி,வாசிக்கும் அனைவரின் மனசாட்சியும் இப்படி நினைக்க வேண்டும். கொஞ்சமல்ல...ரொம்பவே கடினமான காரியம். முயன்றால் முடியாததொன்றுண்டோ!.
புனித அகுஸ்தினாரின் திடமான விருப்பத்தை மேற்கொள்ள அவர்பட்ட கஷ்டங்களை விவரிக்கத் தந்தை பயன்படுத்தும் ‘ மனமாற்றத்தின் பேறுகால வேதனை’.......நம்மையும் சேர்த்தே கஷ்டப்பட வைக்கிறது. தந்தையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!
ஆமென்!
ReplyDelete