Saturday, October 3, 2020

காட்டுப் பழங்கள்

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

I. எசாயா 5:1-7 II. பிலிப்பியர் 4:6-9 III. மத்தேயு 21:33-43

காட்டுப் பழங்கள்

எங்கள் குருமடத்தில் பெரிய குளம் ஒன்று உண்டு. முற்றிலும் பாறைகள் நிறைந்திருக்கும் அந்தக் குளம் மழைநீர் சேகரிக்கவும் பயன்படுகிறது. இந்த ஆண்டு திருச்சியில் நல்ல மழை என்பதால் குளம் நிறைந்தே இருக்கிறது. அந்தக் குளத்தில் நிறைய ஆண்டுகளாக மீன்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் திடீரென சில மீன்கள் இறந்த மிதந்தன. ஓரிரு நாள்களாக இறப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது. 'இது பகைவனின் வேலை!' என்று சிலர் பேசினர். ஆனால், மீன் வளர்க்கிறவர்கள் ஆராய்ந்து பார்த்ததில், 'தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டதால் மீன்கள் இறந்துவிட்டன' என்றும், புதிய தண்ணீரின் வருகை பழைய தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவில் குறைபாட்டை ஏற்படுத்தி விட்டன' என்றும் சொல்லிவிட்டு, நீண்ட காலமாகத் தண்ணீர் தேங்கியிருந்ததால் அது தன் சத்துக்களை இழந்துவிட்டது என்றும் கூறினர். 

ஆக, நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருந்தால் நல்ல தண்ணீரும் கெட்ட தண்ணீராக மாற வாய்ப்புண்டு.

அல்லது, இன்று தண்ணீர் நல்ல தண்ணீராக இருப்பதால் அது என்றும் நல்ல தண்ணீராக இருக்கும் என்ற உத்திரவாதம் இல்லை.

மனிதர்களும் அப்படித்தான் என்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

நல்லவர்கள் காலப் போக்கில் கெட்டவர்களாக மாறுவதுண்டு என்றும், அப்படிக் கெட்டவர்களாக மாறுபவர்கள் திராட்சைக் கனிகளைத் தருவதற்குப் பதிலாக புளித்த கனிகளை அல்லது காட்டுப் பழங்களையே தருவர் என்றும் சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்திலும் (காண். எசா 5:1-7), நற்செய்தி வாசகத்திலும் (காண். மத் 21:33-43) திராட்சைத் தோட்டம் உருவகம் முன்வைக்கப்படுகிறது. நற்செய்தி வாசகத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, பிழிவுக் குழி வெட்டி, காவல் மாடமும் கட்டி தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விடுகின்றார். அவர் அப்படி குத்தகைக்கு விடும்போது அவர்கள் நல்லவர்களாகத் தெரிகின்றனர். அல்லது நல்லவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கென்று எந்தக் குறையும் இல்லாதவாறு தலைவர் பார்த்துக்கொள்கின்றார். ஆக, தலைவர் அளவுக்கு மீறி நல்லவராக இருக்கின்றார். அல்லது தாராளமாக இருக்கின்றார். 

அவரது தாராள குணத்தையும், நன்மைத்தனத்தையும் பணியாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். தங்கள் தலைவர் தங்களிடம் தாராளமாக இருக்கிறார், ஆகவே தாங்களும் தாராளமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அப்படியே அதற்கு எதிர்மாறாக நடக்கின்றனர். நம் வாழ்விலும் இதை நாம் பார்க்கலாம். நாம் யாரிடம் தாராளமாக இருக்கிறோமோ, அல்லது யாரிடம் நம் நன்மைத்தனத்தைக் காட்டுகிறோமோ அவர்கள்தாம் நம் முதல் எதிரிகளாக மாறுவர், அல்லது தங்களுடைய குறுகிய எண்ணத்தால் நம்மை வாட்டி வதைப்பர், அல்லது நம் அழிவை விரும்புவர். 

நல்லவர்களாக இருந்த அவர்கள் மூன்று நிலைகளில் தீயவர்களாக மாறுகின்றனர்:

(அ) தலைவருக்கு உரிய கனிகளைக் கொடுக்க மறுத்தனர். இது அவர்களுடைய பேராசையின் வெளிப்பாடு. ஆக, 'என்னுடையதும் என்னுடையது, உன்னுடையதும் என்னுடையது' என்ற மனப்பான்மை அவர்களிடம் வளர ஆரம்பிக்கிறது. இந்த மனப்பாங்குதான் திருட்டு மனப்பான்மை. 

(ஆ) தலைவரது பணியாளர்களுக்குத் தீங்கிழைக்கின்றனர். இது அவர்களுடைய தீய எண்ணத்தைக் காட்டுகிறது. அதாவது, தலைவன்மேல் உள்ள கோபத்தைத் தலைவன்மேல் காட்டுவதற்குப் பதிலாக, அப்பாவிகளான பணியாளர்கள்மேல் காட்டுகின்றனர். அவர்களது தீய எண்ணம் அவர்களுயை கோபத்தைவிடக் கொடுமையானது. அதிகம் கோபப்படுகிறவர்கள் அருகில் இருக்கக் கூடாது என்று விவிலியம் சொல்கிறது. ஏனெனில், கோபத்தில் அவர்கள் எப்படிச் செயலாற்றுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

(இ) தலைவரது ஒரே மகனைக் கொன்று போடுகின்றனா. இது அவர்களுடைய பொறாமை உணர்வைக் காட்டுகிறது. 'என்னிடம் இல்லாத ஒன்று அவனிடம் இருக்கிறது' என்று எண்ணுகின்ற அவர்கள், திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன், தலைவரது ஒரே மகனை அழிக்கத் துணிகின்றனர். இங்கேயும் அப்பாவி ஒருவன்மேல்தான் அவர்கள் செயலாற்றுகின்றனர்.

ஆக, நல்லவர்களாக இருந்த பணியாளர்கள் தங்களது பேராசை, தீய எண்ணம், பொறாமை ஆகியவற்றால் தலைவருக்குத் தீங்கிழைத்ததோடல்லாமல் தங்களுக்கும் தீங்கிழைத்துக்கொள்கின்றனர். ஏனெனில், தலைவர் அவர்களை ஈவிரக்கமின்றி ஒழித்து தோட்டத்தை வேறொரு குழுவினருக்குக் கொடுக்கின்றார். 

தலைவர் தாராள உள்ளம் கொண்டவராக இருந்தாலும் கண்டிப்புடன் செயலாற்ற வேண்டிய நேரத்தில் கண்டிப்புடன் செயலாற்றவே செய்கின்றார். 

யாரும் எதிர்பாராத ஒன்றைத் தலைவர் செய்கின்றார்?

ஒதுக்கப்பட்டுக் கிடந்த பணியாளர்கள் கையில் தலைவர் தனது தோட்டத்தைக் கொடுக்கின்றார். தலைவரை அழித்துவிடலாம் என எண்ணியவர்கள் அழிந்து போகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்திலும் ஏறக்குறைய இதே நிகழ்வுதான் நடக்கிறது. 'என் அன்பரின் திராட்சைத் தோட்டம் பற்றிக் கவி பாடுவேன்' என்று எசாயா இறைவாக்கினர், தன் ஆண்டவராகிய கடவுளை, 'அன்பர்' என அழைக்கிறார். இங்கே, திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. இஸ்ரயேல் மக்கள், பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் குடியேறியவுடன், ஒரு வகையான தேக்கநிலையை அடைகின்றனர். கடவுளது நன்மைத்தனம் அவர்களுக்குப் புளித்துப்போய்விடுகிறது. ஆகையால், அவர்கள் தங்களுக்கென வேறு கடவுளர்களைத் தேடிக்கொள்ளத் தொடங்குகின்றனர். தங்களுடைய சிலைவழிபாட்டால் வேசித்தனம் செய்ததால் ஆண்டவர், அவர்களை அசீரியப் படையெடுப்புக்கும், பாபிலோனியப் படையெடுப்புக்கும் உட்படுத்துகிறார். நற்கனிகள் தருவதற்குப் பதிலாக, காட்டுப் பழங்களைத் தந்ததால், இஸ்ரயேல் நாட்டின் வேலி பிடுங்கி எறியப்பட்டு, நாடு தீக்கிரையாகிறது. நீதி விளையுமென ஆண்டவர் காத்திருக்க, அங்கே இரத்தப்பழி விளைகிறது. நேர்மைக்குப் பதிலாக முறைப்பாடு அல்லது முணுமுணுத்தல் விளைகிறது.

இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:6-9), பிலிப்பி நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலை நிறைவு செய்கின்ற பவுல், இரண்டு அறிவுரைகளை வழங்குகின்றார்: ஒன்று, 'அறிவெல்லாம் கடந்த இறை அமைதி அவர்கள் உள்ளத்தில் குடிகொள்ளுமாறு அவர்கள் நடக்க வேண்டும்.' இரண்டு, 'உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை, பாராட்டுதற்கு உரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை போன்றவற்றை அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.' ஆக, தங்களுக்கும் இறைவனுக்கும், தங்களுக்கும் பிறருக்கும் உள்ள உறவை நேர்மையானதாக்கிக்கொள்ள வேண்டும் என அவர்களை அறிவுறுத்துகிறார் பவுல்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் சவால்கள் எவை?

1. வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டம்

நம் வாழ்க்கை என்பது கடவுள் நம் கைகளில் குத்தகைக்குக் கொடுத்திருக்கும் திராட்சைத் தோட்டம். நாம் அதன் மேற்பார்வையாளரே அன்றி, உரிமையாளர் அல்ல என்பதை மனத்தில் இருத்துதல் நலம். இரவல் கொடுத்தவன் திரும்பக் கேட்பான் என்ற மனப்பான்மையில் நாம் வாழும்போது, திராட்சைத் தோட்டத்தைக் கனிதரச் செய்வதோடு, உரிய காலத்தில், திராட்சைக் கனிகளை நம் தலைவருக்குக் கொடுத்தவர் ஆவோம்.

2. நல்லது செய்வதும் பழக்கமே

நல்லது செய்வது அல்லது நல்லவராய் இருப்பது நம் இயல்பு எனினும், அந்த இயல்பை நாம் தக்கவைக்கவில்லை எனில், நாமும் பேராசை, தீய எண்ணம், மற்றும் பொறாமை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும் அபாயம் இருக்கிறது. தண்ணீர் நல்ல தண்ணீராக இருந்தாலும் அந்த நன்மைத்தனம் மற்றவர்களுக்குப் பயன்படவில்லை என்றால், அதுவே விஷமாக மாறவும் வாய்ப்பு இருப்பதால், நல்லது செய்வதையும், நல்லவராய் இருப்பதையும் நம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

3. அறிவெல்லாம் கடந்த அமைதியுடன் வாழ்வது

அறிவு இருக்கின்ற இடத்தில் அமைதி குறையும். அறிவைக் கடக்கின்ற ஒருவர்தாம் அமைதி பெற முடியும். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அறிவினால் தேக்கநிலையை அடைந்தனர். அறிவு அங்கலாய்க்கும் அல்லது அலை பாயும். ஆனால், அறிவைக் கடந்த நிலை வந்துவிட்டால் இறைஅமைதி குடிகொள்ளும்.

இறுதியாக,

'இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!' (காண். திபா 80:14) என நாம் தோட்டத்தின் உரிமையாளரிடம் மன்றாடுவோம். ஏனெனில், நாளின் இறுதியில் அவரே நம்மைத் தீக்கிரையாக்கவும், நம்மைத் தழுவிக்கொள்ளவும் வல்லவர்.

1 comment:

  1. அடிக்கடி நாம் கேள்விப்பட்ட திராட்சைத்தோட்ட உவமைதான். நாம் கேட்டுப்பழகிய விஷயங்களோடு தந்தையின் பார்வையில் வைக்கப்படும் விஷயங்கள் அவற்றின் முக்கியத்துவத்தைக் கூட்டுகின்றன. நன்மையே உருவான இறைவனுக்கு, அவர் நம்மேல் காட்டும் தாராள உள்ளத்திற்கு நம் நன்மைத்தனத்தைத் திருப்பித்தரமுடியவில்லை என்றாலும் தீய விஷயங்களைத் திருப்பித்தராமல் இருக்கவேண்டுமென முதல் வாசகமும், உண்மையானவை,கண்ணியமானவை போன்ற நல்ல விஷயங்களால் தங்களுக்கும் இறைவனுக்கும் மட்டுமன்றி தங்களுக்கும் பிறருக்கும் உள்ள உறவை நேர்மையானதாக்க வேண்டுமென பவுல் அடிகள் கூறும் இரண்டாம் வாசகமும், நம் கையில் திணிக்கப்பட்டிருக்கும் வாழ்வு எனும் திராட்சைத்தோட்டம் உரியவருக்கு ஒருநாள் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டமெனும் நினைப்புடன் வாழவேண்டுமென எடுத்துக்கூறும் நற்செய்தியும் இறைவன் இன்று நம்மிடமிருந்து எதிர்பார்ப்பவை. நம்மிடமுள்ள தோட்டத்தை தந்தை குறிப்பிடும் மீன்கள் வாழத்தகுதியற்ற குளமாக வைத்துள்ளோமா? இல்லை நம் இறை- பிறர் நற்செயல்களால் வாழத்தகுந்த...கண்களுக்கு விருந்தளிக்கும் காயும்,கனியும் பூத்துக்குலுங்கும் தோட்டமாக வைத்துள்ளோமா? யோசிப்போம்.
    திராட்சைத்தோட்ட உவமையைத் தங்கள் குருமட குளத்துடன் தந்தை ஒப்பிட்டிருப்பது அழகு. நன்றியும்! ஞாயிறு வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete