ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு
I. எசாயா 25:6-10 II. பிலிப்பியர் 4:12-14,19-20 III. மத்தேயு 22:1-14
நிரம்பி வழியும் பாத்திரம்!
மெல் கிப்ஸன் அவர்கள் இயக்கிய 'அபோகலிப்டோ' (2006) திரைப்படத்தில் ஒரு நிகழ்வு உண்டு. அந்நிகழ்வின்படி, ஒரு குறிப்பிட்ட மாலை வேளையில் காட்டில் வாழும் ஒரு குடியினர் வட்டமாக அமர்ந்து கதை சொல்லிக்கொண்டி ருப்பர். முதியவர் ஒருவர் கதை சொல்வார்:
'மனிதன் ஒருவன் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டில் உள்ள பறவைகளும் விலங்குகளும் அவனைச் சுற்றி நின்றன. 'நீ இப்படிச் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்க்க எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் கேள்!' ஒவ்வொரு விலங்கும் தன்னிடமுள்ள மேன்மையான ஒன்றை மனிதனுக்குக் கொடுக்கிறது. ஜாக்வார் தன் பலத்தைக் கொடுக்கிறது. கழுகு தன் கூர்மையான கண்களைக் கொடுக்கிறது. பாதாளத்தின் இரகசியங்களைப் பாம்பு அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது. 'இப்போது மனிதன் நம்மைவிட அதிக பலம் பெற்றுவிட்டான். அவனை யாரும் வெற்றிகொள்ள முடியாது' என்றது மான். அப்போது ஆந்தை சொன்னது, 'இல்லை! அவனது இதயத்தில் ஒரு ஓட்டை இருப்பதை நான் கவனித்தேன். அதை நிரப்ப அவன் இந்தப் பூமியையே அள்ளி உள்ளே போடுவான். ஆனால், பாவம்! அவனால் அந்த வெற்றிடத்தை நிரப்பவே முடியாது!''
இன்றைய பதிலுரைப்பாடலாக, திருப்பாடல் 23ஐ நாம் வாசிக்கிறோம்.
'எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது' (காண். திபா 23:5) எனத் தன் ஆயனாம் ஆண்டவர் முன்னிலையில் துள்ளிக் குதிக்கிறார் தாவீது அரசர்.
இந்த வரிகள் அவருடைய உண்மையான அனுபவமா?
அல்லது அவருடைய உள்மன ஆசையா?
தன் படைகள் முழுவதும் எதிரி நாட்டுடன் சண்டைக்குச் செல்ல, தாவீது மட்டும் தன் நகரத்தில் ஓய்ந்திருக்க, மாலை வேளையில் குளிக்கின்ற இளவல் ஒருத்தியைக் கண்டு, தழுவிக்கொள்ள அவர் முயன்ற போது, அவரின் உள்ளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.
அந்த இளவலைத் தழுவியபின், அந்த இளவலின் கணவன் உரியாவைக் கொல்ல முயன்றபோது அவருடைய உள்ளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.
'நீயோ எனக்கு ஆலயம் கட்டமாட்டாய்!' என்று கடவுள் தாவீதிடம் சொன்னபோது அவரது உள்ளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.
'என் மகனே என்னைக் கொல்லத் தேடுகிறான்!' என்று தாவீது தன் பணியாளர்களிடம் புலம்பிய போது, அவரது உள்ளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.
'உன் மகன் அதோனியா தன்னையே அரசனாக்கிக் கொண்டான். நம் மகன் சாலமோனை நீர் அரசராக்கும்' என்று முதிர் வயதில் இருந்த தன்னை பத்சேபா வலியுறுத்தியபோது அவரது உள்ளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.
'சும்மா குளித்துக் கொண்டிருந்தவளுக்கு வந்த வாழ்வு பார்த்தாயா? உன் ஒற்றை நொடி இச்சைநிறை பார்வை, உன் முதுமையிலும் உனக்கு நிம்மதி தரவில்லையே' என்று தாவீதின் மனச்சான்று அவரைக் கடிந்துகொண்ட போது அவரது உள்ளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.
இப்படி நிறைய வெற்றிட அனுபவம் தாவீதின் வாழ்வில் இருந்தாலும், 'எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது' என்று தாவீது அரசரால் எப்படிப் பாட முடிந்தது?
தன் வாழ்வின் வெற்றிடத்தில் இறைவனின் அருள் வழிந்ததை உணர்ந்தார் தாவீது.
இதையே புனித பவுல், 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' (காண். உரோ 5:20) என்கிறார். தன்னை அழிக்கத் துணிந்த சவுலுக்குத் தீங்கு நினைக்காமல் இருந்த பரந்த உள்ளம், தன்னைக் கடிந்துகொண்ட சிமியியைக் கண்டிக்காமல் விட்ட தாராள மனம், தன் குடும்பத்தை விட்டு வாள் நீங்காமல் இருந்தாலும் தன் பொறுமையை இழக்காத பெருந்தன்மை என தாவீதின் உள்ளம் அருளால் நிரம்பி வழியவே செய்தது.
ஆக, தாவீதின் வாழ்வில் ஒரு பக்கம் நிறைய வெற்றிடங்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் நிறைய அருள்நிலைகள் இருக்கவே செய்தன. தன் இருத்தல் மற்றும் இயக்கத்திற்கக் காரணம் இறைவனே எனச் சரணாகதி அடைந்தார். விளைவு, 'எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது' எனத் துள்ளிக் குதிக்கிறார்.
நம் மனத்தில் நிறைய வெற்றிடங்கள் இருந்தாலும், நாம் வலுவற்றவர்களாக இருந்தாலும், நம் இறைவன் நம் பாத்திரங்கள் நிரம்பி வழியச் செய்கிறார் என்று சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 25:6-10), பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த தன் மக்களை விடுவிக்க ஆண்டவர் திருவுளம் கொண்டிருக்கிறார் என்பதை, விருந்து உருவகமாக, இறைவாக்குரைக்கின்றார் எசாயா. மக்களின் துன்பம், சாவு, கண்ணீர், நிந்தை என அவர்கள் அனுபவித்த நான்கு வெற்றிட உணர்வுகளை அழிக்கின்ற கடவுள், 'சுவைமிக்க பண்டம், பழரசப் பானம், கொழுப்பான இறைச்சித் துண்டு, வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசம்' என்னும் நான்கு அருள்நிலைகளால் அவர்களது பாத்திரம் நிரம்பி வழியச் செய்கிறார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:12-14, 19-20), புனித பவுல், பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தை நிறைவு செய்கிறார். பவுல் தன் பணி வாழ்வில் தான் அனுபவித்த எல்லா அனுபவங்களையும் நினைவுகூர்ந்தவராகத் தன் கடிதத்தை நிறைவு செய்கிறார். ஒருநாள் நிறைவான உணவு, மறுநாள் பட்டினி, ஒருநாள் பஞ்சுமெத்தையில் தூக்கம், மறுநாள் மண்தரையில் உறக்கம், ஒருநாள் வெதுவெதுப்பு மறுநாள் குளிர், ஒருநாள் பாதுகாப்பு, மறுநாள் அச்சுறுத்தல், ஒருநாள் சிரிப்பு, மறுநாள் அழுகை என மாறி மாறி தான் கடந்து வந்த பாதையை நினைவுகூர்கிறார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதும்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அந்தச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோமோ அல்லது தலை துண்டிக்கப்படுவோமா என்பதே அவருக்கு உறுதியாக இல்லை. தனிமையிலும், நோயிலும், தூர நாட்டிலும் இருக்கும்போதுதான் மனம் இப்படி உறுதியற்ற நிலையில் பழையதை எண்ணிப்பார்த்துக் கொண்டே இருக்கும். சிறையின் தனிமை, வருத்தும் முதுமை, நோய், இன்னும் நிறையப் பணிகள் பாக்கி இருக்கின்றனவோ என்ற ஏக்கம் தரும் சோர்வு, தரையின் குளிர், கசையடிகளின் காயம் என அனைத்தும் வருத்தினாலும், 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்' எனப் பெருமிதம் கொள்கிறார். இந்தப் பயிற்சியைக் கொடுத்தது யார்? அல்லது அந்தப் பயிற்சிக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்தது யார்?
பவுலே தொடர்கிறார், 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.' தன் கடவுளை, 'வலுவூட்டுகிறவர்' என்ற தலைப்பு கொடுத்து அழைக்கிறார் பவுல். மேலும், தன் தேவையில் உடனிருந்த பிலிப்பி நகரத் திருஅவையினரைப் பாராட்டி, 'கடவுள் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்' என வாழ்த்துகிறார்.
நிறைவுமனம் கொண்டிருக்கிற ஒருவர்தான் மற்றவரும் நிறைவுடன் இருக்க வேண்டும் என வாழ்த்த முடியும். பவுலின் நிறைவுமனம் ஆண்டவரிடமிருந்து வருகிறது. ஆண்டவரால், 'பவுலின் கிண்ணம் நிரம்பி வழிகிறது.'
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 22:1-14), இயேசுவின் இன்னொரு உவமையை வாசிக்கிறோம்: திருமண விருந்து உவமை. அரசருடைய மகனுக்குத் திருமணம். திருமண நிகழ்வு என்பது நிறைவின் நிகழ்வு. ஏனெனில், அந்த நிகழ்வில்தான் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மற்றவரின் வெற்றிடத்தை நிறைவு செய்வதற்காகத் தங்களையே ஒருவர் மற்றவருக்குக் கையளிக்கின்றனர். தன் இன்னொரு பாதியைத் தேடிக்கொண்டிருந்த ஒரு பாதி திருமணத்தில் நிறைவு பெறுகிறது. இங்கே இளவரசனுக்குத் திருமணம் என்றால் அது ஊரின் திருவிழா. தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டு, ஊரெல்லாம் மகளிர் மாக்கோலம் இட, குழந்தைகள் துள்ளி மகிழ்ந்து விளையாட, வீதிகளில் தோரணங்கள் கட்டப்பட, பணியாளர்கள் இங்குமங்கும் பரபரப்பாக ஓட, 'எத்தன வண்டி! எத்தன மூடை அரிசி! எவ்ளோ காய்கறிகள்! எவ்ளோ எண்ணெய்! எவ்ளோ திராட்சை இரசம்! அங்க பாருடி! எவ்ளோ மலர்கள்! இங்க பாருடி! எவ்ளோ பெரிய வாழை மரம்!' என இங்குமங்கும் பெண்டிர் பேசிக்கொண்டே வழிநடக்க, எல்லாம் நிறைந்து வழிகிறது.
ஆனால், விருந்துக் கூடம் காற்றாடுகிறது.
அழைக்கப் பெற்றவர்கள் திருமண விருந்துக்கு வர விரும்பவில்லை. அவர்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். நினைவூட்டல் செய்த பணியாளர்களை இழிவுபடுத்திக் கொலை செய்தனர்.
விருந்துக் கூடம் வெறுமையாக இருக்கிறது! விருந்து பரிமாறுபவர்கள் வாசல் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர். யாரும் உள்ளே வரவில்லை.
அரசருக்கு கோபத்திற்கு மேல் கோபம் வருகிறது. 'அழைக்கப்பெற்றவர்களோடு தகுதியற்றுப் போனார்கள்' என்று சொல்லி, மாற்று ஏற்பாடு செய்கிறார். அழைப்பை அனைவருக்கும் விடுக்கின்றார். 'யாவரும் வருக!' என எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். விருந்துக்கூடம் நிரம்பி வழிகிறது. சற்று நேரத்திற்கு முன் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்த இடத்தில் இப்போது ஆள்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கூட்டத்திலும், திருமண ஆடை அணியாத ஒருவரை அடையாளம் காணுகிறார் அரசர். திருமண ஆடை என்பது அரசர் வழங்கும் பரிசு. அந்தப் பரிசை அவன் ஏற்க மறுத்துள்ளான். அந்த ஆடையை அணிய மறுத்துள்ளான். அது அரசரின் கண்களில் தவறு எனப் படுகிறது. அழைப்பை ஏற்பவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும். அரைமனது விருப்பம் அரசனுக்கு ஆகாது. உடனடியாக அவனை வெளியேற்றுமாறு கட்டளையிடுகிறார்.
இந்நிகழ்வில், அரசன் எல்லாருடைய பாத்திரங்களும் நிரம்பி வழியுமாறு செய்கிறார்.
ஆனால், இருவர் அதற்கு எதிராகச் செயல்படுகின்றனர். முதலில் அழைக்கப்பெற்றவர்கள், அரசரின் அழைக்கும் கரத்தைத் தட்டி விடுகின்றனர். இரண்டாவது அழைக்கப்பெற்றவர்களில் ஒருவன், தன் பாத்திரத்தை தானே கவிழ்த்துக்கொள்கிறான்.
ஆக,
முதல் வாசகத்தில், அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களின் பாத்திரம், இறைவன் தரும் விருந்தால் நிரம்பி வழிகிறது.
பதிலுரைப் பாடலில், வெற்றிடத்தில் உழன்ற தாவீது அரசரின் பாத்திரம், இறைவனின் இரக்கப் பெருக்கால் நிரம்பி வழிகிறது.
இரண்டாம் வாசகத்தில், சிறைப்பட்டுக் கிடந்த திருத்தூதர் பவுலின் பாத்திரம், இறைவன் இறைமக்கள் வழியாகச் செய்த உதவிகளால் நிரம்பி வழிகிறது.
நற்செய்தி வாசகத்தில், வழியில் சென்றுகொண்டிருந்தவர்களின் பாத்திரம், அரசரின் தாராள உள்ளத்தால் நிரம்பி வழிகிறது.
நம் பாத்திரமும் இன்று நிரம்பி வழிகிறது.
சிறைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்கள் போல, நாமும் நம் குறுகிய மனப்பான்மையில், ஆணவத்தில், பேராவலில், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படும் வாழ்வில் சிறைப்பட்டுக் கிடக்கிறோம்.
அல்லது, விருந்துக்கான அழைப்பை நிராகரித்தவர்கள் போல, தவறான முதன்மைகளைக் கொண்டிருக்கிறோம், அல்லது அரசன்மேல் (இறைவன்மேல்) கோபம் கொண்டிருக்கிறோம், அல்லது திருமண உடையை அணியாதவன் போல நம் விருப்பப்படி செயலாற்றிக்கொண்டிருக்கிறோம்.
விளைவு, நம் பாத்திரங்கள் காலியாக உருண்டுகொண்டிருக்கின்றன. இங்குமங்கும் காலால் எத்திவிடப்படுகின்றன. நிலையற்றுச் சரிகின்றன.
நம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் அனுபவம் பெறுவது எப்படி?
ரொம்ப எளிது!
பாத்திரங்களின்மேல் இருக்கும் நம் பார்வையைச் சற்றே அகற்றி, நம் கண்முன் நிற்கும் அரசரின், ஆயரின் முகம் பார்ப்பது. அவரின் கண்கள் வழியே உலகத்தைப் பார்த்தால், நம் முதன்மைகள் சரியாகவும், நம் வலுவின்மைகள் நம் வல்லமையாகவும், நம் வெறுமை விருந்தாகவும் தெரியும்.
'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன். ஐயனே! என் ஐயனே!
அத்தனை செல்வமும் உன்னிடத்தில் - நான்
பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? - வெறும்
பாத்திரம் உள்ளது என்னிடத்தில் - அதன்
சூத்திரமோ அது உன்னிடத்தில்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன்
அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய் - உன்
திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற'
(இளையராஜா, 'நான் கடவுள்', 2009)
பிச்சைப் பாத்திரம், 'அவரின் அருள்நலத்தாலும் பேரன்பாலும் நிரம்பி வழியும்' (காண். திபா 23:6,5).
23 ம் திருப்பாடலை நினைவுறுத்தும் “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” எனும் வரிகள். “போதும்” எனும் மனம் வந்துவிட்டாலே போதும்...நம் பாத்திரங்கள் நிரம்பி வழிய.மக்களின் சாவு,கண்ணீர் போன்றவற்றை அழித்து அவற்றிற்கு பதிலாக பழரசப்பானம்,இறைச்சி போன்ற அருள்நிலைகளஆல் நிரப்பி அவர்களின் பாத்திரங்களை வழியச்செய்கிறார் இறைவன், எனும் ஏசாயாவின் முதல் வாசகமும், தன்னோடிருந்த மக்களை வாயார வாழ்த்திய பவுலின் கிண்ணம் ஆண்டவரால் நிரம்பி வழிகிறது எனும் பிலிப்பியருக்கு பவுல் எழுதிய இரண்டாம் வாசகமும்,அரைமனது கொண்டவர்களைப் புறந்தள்ளி,தனக்குகந்தவரின் பாத்திரங்களை நிரம்பி வழியச்செய்த ஆண்டவர்,நம் பாத்திரங்களையும் பொங்கி வழியச் செய்கிறார் என்றுரைக்கும் நற்செய்தி வாசகமும் “ என் பாத்திரமும் கூட அவரின் அருள் நலத்தாலும்,பேரன்பாலும் நிரம்பி வழியும்” என அறுதியிட்டுக் கூறுகின்றன.இந்த வார்த்தைகளை வாழ்வாக்க நம் ஆயரின் வழியே உலகத்தைப்பார்ப்பதும், நம் முதன்மைகளை சரியாகத் தெரிவு செய்வதுமே என்கிறார் தந்தை. தாவீது அரசரின் பாத்திரம் காலியாகிப்போன ஒவ்வொரு வேளையிலும் இறைவன் அவரைப் போஷித்த விதத்தைக் கூறும் தந்தையின் நெகிழ்ச்சியான வரிகளும், “நான் கடவுளில்” வரும் இளையராஜாவின் உணர்ச்சிமிகு,உணர்வுமிகு வரிகளும் “ அவர் நம் பாத்திரத்தை நிரப்பிக்கொண்டேதான் இருக்கிறார்; அது காலியாகும் தருணங்கள் வருகையில் அதை மீண்டும் நிரப்புவது நம் கைகளில் தான் இருக்கிறது என்று கூறுகின்றன.அழகான...அர்த்தமுள்ள 23ம் திருப்பாடலின் பின்னனியில் தந்துள்ள தந்தையின் மறையுரைக்கு நன்றிகளும்! ஞாயிறு வாழ்த்துக்களும்!!!
ReplyDelete