Tuesday, October 27, 2020

புனித யூதா ததேயு

யூதா ததேயுவின் படம் அல்லது திருஉருவத்தை நாம் கண்டிருப்போம். பச்சைநிற மேலாடை அணிந்து, ஒரு கையில் கையில் கோல், இன்னொரு கையில் சுருள், உச்சந்தலையில் நெருப்புத் துண்டு எனக் காட்சியளிக்கிறார் இப்புனிதர்.

இப்புனிதரின் பக்தி முயற்சி அமெரிக்காவில், குறிப்பாக இஸ்பானியம் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில், மிகவும் பிரபலமானது. பல மணி நேரங்கள் செலவழித்து மக்கள் இப்புனிதரை நாடிச் செல்வர். இஸ்பானிய மக்கள் பத்திரமாக அமெரிக்காவில் கால் பதிக்க இவர் உதவியிருக்கலாம்.

புனித யூதா ததேயு இயேசுவின் உறவினர். அவருடைய ஒன்றுவிட்ட அண்ணன் அல்லது தம்பியாக இருந்திருக்க வேண்டும். இவர் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர் என்ற குறிப்பைத் தவிர, விவிலியத்தில் வேறு எந்தக் குறிப்பும் இவரைப் பற்றி இல்லை. பாரம்பரியத்தில், கானாவூரில் தண்ணீர் திராட்சை ரசமாக மாறிய திருமண நிகழ்வின் மணமகன் யூதா ததேயு என்பது பலரின் கருத்து.

புனித யூதா ததேயுவின் கையில் இருக்கும் சுருள் பற்றிய கதையாடல் ஒன்றும் பாரம்பரியத்தில் உண்டு. அதன்படி, எதேஸ்ஸா நாட்டைச் சார்ந்த (இன்றைய துருக்கி) அரசர் அப்கார் என்பவர் தனது தொழுநோயைப் போக்க இயேசு வருமாறு அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். எதேஸ்ஸாவுக்குச் செல்ல மறுக்கின்ற இயேசு, தன் முகத்தை ஒரு சுருள்துணி ஒன்றில் பதித்து, அதை யூதா ததேயுவிடம் கொடுத்தனுப்புகிறார். அந்த முகத்தைக் கொண்டு அரசரின் தொழுநோயைப் போக்குகின்றார் புனிதர்.

பெந்தகோஸ்தே திருவிழாவுக்குப் பின், மத்திய கிழக்கு நாடுகளில் மறைப்பணி செய்கின்ற புனிதர் அங்கேயே மறைசாட்சியாக இறக்கின்றார். இவருடைய எலும்புகள் உரோமைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புனித பேதுருவின் கல்லறைக்கு அருகில் வைக்கப்படுகின்றன. 

புனித ப்ரிஜித் மற்றும் புனித பெர்நார்துக்குத் தோன்றுகிற இயேசு, 'கைகூடாதவற்றைக் கைகூடச் செய்பவர் புனித யூதா ததேயு' என வெளிப்படுத்துகிறார். அன்றுமுதல், கைவிடப்பட்டவர்களின், கையறுநிலையில் இருப்பவர்களின் காவலராக இருக்கின்றார் புனித யூதா ததேயு.

இவர் நமக்கு இன்று மூன்று வாழ்வியல் பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வையுங்கள்

புனித யூதா ததேயு எழுதிய கடிதம் ஒன்று நம் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றது. மிகச் சிறிய புத்தமாக அது இருந்தாலும் மிகப் பெரிய கருத்துகளைத் தாங்கியுள்ளது. யூதா திருமுகம் ஒட்டுமொத்த விவிலிய வரலாற்றையும் ஒரே அதிகாரத்தில் சொல்லி, இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ள அழைக்கிறது. 'தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்' (காண். வ. 20). மேலும், 'நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்' (காண். வ. 22) என்று நம்பிக்கையில் தளர்பவர்களையும் ஏற்றுக்கொள்ள அழைக்கின்றார். நம் வாழ்வில் வரும் எதிர்பாராத இழப்பு, சோர்வு, நம்பிக்கையின்மை ஆகிய நேரங்களிலும் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டுகிறார் என்பது இவருடைய புரிதல்.

(ஆ) இயேசுவுக்கு அருகில் இருங்கள்

திருத்தூதர்களில் ஒருவராக இயேசுவோடு எப்போதும் உடனிருக்கும் யூதா ததேயு, தன் உடனிருப்பில் இறுதிவரை நிலைத்திருக்கின்றார். இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் இறைவனோடு நாம் உடனிருத்தல் அவசியம்.

(இ) கடவுள் உன்னை அனுப்பும் இடத்திற்குச் செல்லத் தயாராக இரு!

கடவுள் தன்னை அனுப்ப விரும்பிய நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் யூதா. நம் இருத்தலிலும், நம் இயக்கத்திலும் இறைவனோடு இணைந்து கனிதருகிறோம். எனவே, அவர் அனுப்பும் இடத்துக்குச் செல்லத் தயாராக இருத்தல் நலம்.

நிற்க.

புனித யூதா ததேயுவை நோக்கிச் செபம்

மாட்சிக்குரிய திருத்தூதர் புனித யூதா ததேயுவே!
இயேசுவின் திருஇருதயத்தின் நிழலில் நின்றுகொண்டு 
நான் உமக்கு வணக்கம் செய்கிறேன்.
உம்மேல் கடவுள் பொழிந்த அளவற்ற இரக்கப் பெருக்கிற்காக, 
இயேசுவின் திருஇருதயத்தின் வழியாக, கடவுளைப் போற்றிப் புகழ்கிறேன்.
அவரின் அன்பிரக்கத்தின் வழியாக என்மேல் நீர் இரக்கம் காட்டுவீராக!
என் எளிய வேண்டுதலைப் புறக்கணியாதேயும்!
என் நம்பிக்கை உழன்றுபோக விடாதேயும்!
கைவிடப்பட்டவர்களின் காவலராகக் கடவுளால் நியமிக்கப்பெற்றவரே!
என் அருகில் வாரும்!
அதனால், நான் கடவுளின் இரக்கப் பெருக்கைப் புகழ்ந்து பாடுவேன்.
என் வாழ்வு முழுவதும் உமக்கு நன்றி சொல்லும் நான்,
விண்ணகத்தில் உம்மைக் கண்டும் உமக்கு நன்றி பகர்வேன்!

ஆமென்.

புனித யூதா ததேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
உம் துணையை நாடும் அனைவருக்கும் துணைவராய் இரும்!

2 comments:

  1. அருமை 👌நண்பரே.

    நன்றி🙏

    Extra thanks for the prayer towards St.Jude Thaddeus.

    He is the patron of our home.

    ReplyDelete
  2. ‘ யூதா ததேயு”.... என்று இந்த புனிதர் இயேசுவின் உறவினரென எனக்குச் சொல்லப்பட்டதோ,அன்றிலிருந்து எனக்கும்,என் பிள்ளைகளுக்கும் நெருக்கமாகிப் போனவர். கைகூடாததைக் கைகூடச்செய்பவர்..எனக்கு மட்டுமல்ல...என்னைச்சார்ந்த பலருக்கு.என் மகள் அமெரிக்காவிலிருந்தபோது அநேக மைல்கள் பயணம் செய்து ஒவ்வொரு வியாழனும் அவர் ஆலயம் சென்றுள்ளோம். கையறு நிலையில் உள்ள அனைவரும் தாங்கள் நினைத்த விஷயங்கள் கைகூட, அவரின் பக்தியைப் பரப்ப முயற்சி செய்து,அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது எனக்குக் கிடைத்த வரம்.
    துருக்கி அரசருக்கு தொழுநோய் நீங்க இயேசுவின் முகத்தை எடுத்துச் சென்றவரே! உம்மை நாடிவரும் அனைவரையும் இயேசுவிடம் எடுத்துச் செல்வீராக!

    அருமையானதொரு புனிதர் குறித்த அழகான பதிவிற்காகவும்,அவரைக்குறித்த செபத்திற்காகவும் தந்தைக்கு நன்றிகள்! திருவிழா வாழ்த்துக்கள்! தங்களின் உள்ளத்தின் அனைத்து ஏக்கங்களையும் அவர் நிறைவேற்றிவைக்க என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete