Tuesday, October 6, 2020

செபமாலை அன்னை

இன்றைய (7 அக்டோபர் 2020) திருநாள்

செபமாலை அன்னை

இன்று அன்னை கன்னி மரியாளை நாம், 'செபமாலை அன்னை' என்று கொண்டாடி மகிழ்கிறோம். 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 1:12-14), 'திருத்தூதர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா.

இங்கே, இறைவனிடம் வேண்டுவது என்பது மரியாளின் செயலாக இருக்கிறது.

இறைவேண்டலின் மாலையே செபமாலை. இந்த மாலையில், நாம் திருஅவையின் நம்பிக்கை அறிக்கை தொடங்கி, இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல், கபிரியேல் மற்றும் எலிசபெத்து ஆகியோரின் வாழ்த்தொலிகள், மூவொரு இறைவன் புகழ், இப்போதும் இறப்பின் வேளையிலும் நினைவுகூர்தல் என விண்ணப்பம் என்று நாம் இறைவேண்டல் செய்கிறோம்.

செபமாலையின் மணிகள் நகர்வது, நம் வாழ்க்கையும் ஒவ்வொரு மணியாக நகர்ந்துகொண்டே போகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

செபமாலை என்பதை நாம் வெறும் அணிகலனாக, அல்லது ஆபத்து நீக்கும் அருள்கருவி எனப் பார்க்காமல், நாம் செய்யும் இறைவேண்டல்கள் நம் வாழ்க்கையின் பண்புகளாக மாற வேண்டும் எனவும், நாம் செபிக்கும் மறையுண்மைகள் நம் வாழ்வின் இறையனுபவங்களாக மாற வேண்டும் எனவும் செபித்தல் நலம்.

1 comment:

  1. “செபமாலையின் மணிகள் நகர்வது, நம் வாழ்க்கையும் ஒவ்வொரு மணியாக நகர்ந்து கொண்டே போகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.” நம் கண்களில் ஒற்றிக்கொள்ளத்தூண்டும் வரிகள்.ஒரே மாலைதான்; ஆனால் அது எத்தனை விதமான மலர்களைத் தன்னுள் அடக்கியுள்ளது என்பதைத் தந்தை அழகாகப் பட்டியலிட்டுள்ளார். “ அருள் நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!” உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் நம்மையும் இப்படி வாழ்த்தும் எத்தனை ‘ கபிரியேல்களை’ சந்திக்கிறோம்.நாம் அடுத்தவருக்கு கபிரியேலாக மாறுவது எப்போது? அழகாகச் சொல்கிறார் தந்தை. இந்த செபமாலையைக் கிளிப்பிள்ளை போல் சொல்லாமல் “நம் இறைவேண்டல்கள் வாழ்க்கையின் பண்புகளாகவும், இறையனுபவங்களாகவும் மாற்ற வேண்டுமென்று.” தாயின் மடிதான் உலகம்; அவள் தாளைப் பணிந்திடுவோம்”....எனும் வரிகள் எங்கோ ஒலிப்பது கேட்கிறது. தந்தைக்குத் திருவிழா வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete