இன்றைய (5 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 10:25-37)
அப்படியே செய்யும்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். 'நல்ல சமாரியன்' என்பது நாம் கொடுக்கும் தலைப்பே அன்றி, உவமையின் தலைப்பு அல்ல.
இந்த வாசகப் பகுதியில் நாம் காணும் சில சொல்லாடல்களின் பொருளைப் புரிந்துகொள்வோம்.
அ. 'ஆடைகளை உரிந்துகொண்டு'
கள்வர் கையில் அகப்பட்டவர் சாலையில் நிர்வாணமாகக் கிடக்கின்றார். கள்வர்கள் அவருடைய உடைமைகளைப் பறித்துக் கொண்டதோடு, அவருடைய உடைகளையும் பறித்துக்கொள்கின்றனர். அல்லது அவரிடம் இருந்ததே அவருடைய உடைகள் மட்டும்தான் என்பதால் ஆடைகளை உரிந்து எடுத்துக்கொண்டு செல்கின்றனர். மேலும், அவர் தடுக்கப்பார்த்ததால் காயப்படவும் செய்கிறார். அல்லது, கள்வர்களே அவர்மேல் காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆடைகள் உரியப்பட்டுக் கிடக்கும் ஒருவர் அடையாளங்கள் இல்லாதவர் ஆகிறார். அல்லது அவருடைய ஆடைகளை வைத்தாவது அவரை அடையாளம் கண்டிருப்பார்கள் மற்றவர்கள். ஒருவேளை ஒரு குரு அல்லது லேவியர் அவருடைய ஆடைகளோடு விழுந்து கிடந்தால், அல்லது நம் நாட்டுச் சொல்லாடலில், ஒருவர் பூணூல் அணிந்து விழுந்து கிடந்தால், அல்லது நெற்றியில் திருநீறு அணிந்திருந்தால், அல்லது கழுத்தில் சிலுவை அணிந்திருந்தால் யாராவது உதவியிருப்பார்கள். ஆனால், கதையில் விழுந்து கிடக்கும் நபர் எந்தவொரு அடையாளமும் இருக்கிறார். மேலும், ஆடைகளின்றிக் கிடப்பதால் அவருடைய அடையாளம் இன்னும் தெளிவாகவும் மற்றவருக்குத் தெரிந்திருக்கும். ஏனெனில், குருவும் லேவியும் விலகிச் செல்கின்றனர். ஒருவேளை விழுந்து கிடந்த நபர் விருத்தசேதனம் செய்யப்படாத புறவினத்தாராக அல்லது சமாரியராக இருந்திருக்கலாம். ஆக, விழுந்து கிடந்தவர் யூதர் அல்லாதவர் என்பதால் குருவும் லேவியரும் அவரை விட்டு விலகிச் சென்றிருக்கலாம்.
ஆ. 'தற்செயலாய் அவ்வழியே வந்தார்'
குரு மற்றும் லேவியரின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கிறது. தற்செயலாக வருகிறவர்கள் பெரும்பாலும் எந்தவொரு திட்டமும் இல்லாமல் வருபவர்கள். ஆக, அப்படி வருகின்ற இவ்விருவரும் நின்று உதவியிருக்க அவர்களுக்கு நேரம் அதிகமாக இருந்திருக்கும். இருந்தாலும் அவர்கள் கடந்து செல்கிறார்கள்.
இ. 'அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர்'
சமாரியர் ஒரு திட்டத்தோடு அவ்வழியே வருகிறார். அதாவது, பயணம் அவருடைய இலக்காக இருக்கிறது. இருந்தாலும், தன் இலக்கில் தான் காணும் சகபயணிக்காகத் தன் நேரத்தை இழக்கத் தயாராகின்றார்.
ஈ. 'பரிவு கொண்டார்'
நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில், 'உன் மீது நீ அன்புகூர்வது போல உன் அடுத்திருப்பவர்மேலும் அன்பு கூர்வாயாக!' எனக் கற்பிக்கிறார் இயேசு. இங்கே விழுந்துகிடக்கும் நிர்வாண நபரில் தன் நிர்வாணத்தைப் பார்க்கிறார் சமாரியர் பரிவு. எனக்கு மேலிருக்கும் ஒருவரில் என்னை நான் பார்த்தால் அது அன்பு. ஆனால், எனக்குக் கீழிருக்கும் ஒருவரில் என்னை நான் பார்த்தால் அது பரிவு. அண்ணாந்து பார்த்து அன்பு செய்வதை விட குனிந்து பார்த்துப் பரிவு காட்டுதல் கடினம். ஆனால், சமாரியர் அதைச் செய்யத் துணிகின்றார்.
உ. 'ஒருநாள் தங்குகின்றார்'
சமாரியர் தன் பயணத்தின் இலக்கை மாற்றுவதோடு, நிர்வாண நபரோடு சாவடியில் ஓர் இரவையும் கழிக்கின்றார். ஆக, அவர் நல்லவராக ஒற்றைச் செயலில் மட்டும் இல்லை. முழுக்க முழுக்க நல்லவராகவே இருக்கின்றார். அடுத்திருப்பவராக இருப்பது அவருடைய இயல்பாகவே இருந்தது.
ஊ. 'திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்'
இது அவருடைய தொடர் அக்கறைக்குச் சான்று பகர்கிறது. 'பரிவு கொண்டார்' என்னும் சொல்லாடலில் உவமை முடிந்துவிடுகிறது. ஆனால், சமாரியர் மூன்றாம் நாளையும் முன்பின் தெரியாத ஒருவனுக்காகச் செலவழிக்கத் தயாராக இருக்கின்றார்.
நிற்க.
நற்செய்தியின் தொடக்கத்தில், 'அப்படியே செய்யும், வாழ்வீர்!' என்று சொல்லும் இயேசு, உவமையின் இறுதியில், 'நீரும் போய் அப்படியே செய்யும்!' என்கிறார். ஏனெனில், நாம் போய் அப்படியே செய்வதன் நோக்கம் நம் செயல்தானே தவிர, நாம் பெறுகின்ற வாழ்வு அல்ல.
ஏனெனில், நான் வாழ்வு பெறுவதற்காக என் அடுத்திருப்பவருக்கு உதவினால் நான் அவரைப் பயன்படுத்தியவர் ஆகிவிடுவேன். மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப் பொருள்கள் அல்லர்.
இதுவே இயேசுவின் உச்சகட்ட பரிவுப் பாடம்.
“எனக்கு மேலிருக்கும் ஒருவரில் என்னை நான் பார்த்தால் அது அன்பு.ஆனால் எனக்குக் கீழிருக்கும் ஒருவரில் என்னை நான் பார்த்தால் அது பரிவு.அண்ணாந்து பார்த்து அன்பு செய்வதைவிடக்,குனிந்து பார்த்துப் பரிவு காட்டுதல் கடினம்.” பரிவுக்கும்,அன்புக்குமிடையே இத்தனை வேறுபாடா?
ReplyDelete‘நான் வாழ்வு பெறுவதற்காக அடுத்த்திருப்பவருக்கு உதவினால் அவரை நான் பயன்படுத்தியவராவேன்.மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப்பொருட்கள் அல்லர்’.உதவி செய்வதால் வாழ்வு பெறுகிறேனா? இல்லை வாழ்வு பெறவேண்டி உதவி செய்கிறேனா? கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஒருத்தருக்கு உதவி செய்வது என்பது ஒரு அனிச்சை செயலாக( reflex) இருக்க வேண்டுமேயொழிய இப்படி பரிவா? அன்பா? என்று என்று ஆற அமர யோசித்து செய்வதால் நேரவிரயமாகாதா? நாமெடுக்கும் முயற்சியும் வீணாகாதா?
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் புதிய கோணத்தில் யோசித்து இன்னும் அதை அர்த்தமுள்ளதாக்க உதவும் தந்தைக்கு என் நன்றியும்,வாழ்த்துக்களும்!!!