அவர் பணிவிடை செய்வார்
'விழிப்பாய் இருங்கள்' என்று தன் சீடருக்கு அறிவுறுத்துகின்ற இயேசு, எப்படி விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உருவகமும் சொல்கின்றார்.
இயேசு சொல்லும் உருவகத்தில் ஒரு புரட்சி இருப்பதால் கொஞ்சம் கவனமாய் ஆராய்தல் நலம்.
திருமண விருந்துக்கு ஒரு தலைவர் சென்றிருக்கின்றார். இயேசுவின் சம காலத்தில் திருமண விருந்து ஏழு நாள்கள், ஏழு வாரங்கள், ஆறு மாதங்கள், ஓராண்டு என அவரவர் வசதியைப் பொருத்து நடப்பதுண்டு. ஒரு நீண்ட விருந்துக்குப் போகும் தலைவர், தன் பணியாளர்களிடம் அனைத்தையும் விட்டுச் செல்கின்றார். நீண்ட பயணம் செல்பவர்கள் அப்படிச் செய்வது வழக்கம். ஏனெனில், பாலைவனப் பயணத்தில் வீடு திரும்பாதவர்கள் நிறையப் பேர். இப்போது, பணியாளர்கள் அனைவரும் பொறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். அவர்கள் இடையை வரிந்து கட்டிக் கொண்டு, தலைவருக்குக் கதவைத் திறந்து வைப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். விழித்திருக்கும் பணியாளர்களைக் காண்பதில் தலைவருக்கு மகிழ்ச்சி.
அப்படி விழித்திருக்கும் பணியாளர்களைக் கண்டவுடன், தலைவர், தன் பயணக் களைப்பையும் பொருட்படுத்தாமல், பணியாளர்களுக்குப் பணிபுரியத் தொடங்குகிறார். என்ன ஓர் ஆச்சரியம்!
இந்த உருவகத்தில் முன்வைக்கப்படும் தலைவர் இயேசுவே என்பதில் ஐயமில்லை. திருமண விருந்துக்குச் செல்வது என்பது அவருடைய உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்தைக் குறிக்கிறது. அவரது வருகைக்காக விழித்திருப்பவர்களுக்கு அவரே பணிவிடை செய்கின்றார், விருந்து படைக்கின்றார்.
விழித்திருத்தல் எப்போது சாத்தியம்?
எதிர்நோக்கு இருந்தால்தான் விழித்திருக்க முடியும்.
எதிர்நோக்கை அணையாமல் வைத்திருக்கச் செய்வது நம்பிக்கை.
ஆக, நம்பிக்கை, எதிர்நோக்காக மலர்ந்து, அன்புச் செயல் என்னும் விழித்திருத்தலாகக் கனிகிறது.
விளைவாக, கடவுள் அங்கே நமக்குப் பரிமாறத் தொடங்குகின்றார்.
நம் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் கடவுளே பரிமாறுகிறார் என அறிவதே ஓர் உன்னதமான விழிப்புநிலை.
முதல் வாசகத்தில் (காண். எபே 2:12-22), எபேசு நகரத் திருஅவையை, இசைவாகக் பொருந்திய கட்டடம் எனச் சொல்லிப் பெருமைப்படுகின்றார். வளர்ந்து வரும் இந்தக் கட்டடத்தின் வளர்ச்சியைச் சாத்தியமாக்குவது எதிர்நோக்கே.
இன்று, நாம் தலைவரின் நன்மதிப்பைப் பெற விழித்திருத்தல் அவசியம்.
“நம் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தையும் கடவுளே பரிமாறுகிறார் என அறிவதே ஒரு உன்னதமான விழிப்பு நிலை” என்கிறார் தந்தை. கடந்த மூன்று நாட்களாக இரவு முழுக்க உறக்கம் வராமல், செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தேன். அதுவும் ஒரு விழிப்பு நிலைதானே! ‘ஆம்’ எனில் இயேசு எனக்கு விசேஷமாக ஏதோ பரிமாறுகிறார் என அர்த்தமா? தெரியவில்லை...ஒன்றும் புரியவில்லை. நம் தலைவரின் நன்மதிப்பைப் பெற விழித்திருத்தல் அவசியம் எனில் என் ‘ விழித்தலைக்’கூட மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் ஒரு வாசகத்தின் மேல் கட்டப்பட்ட பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!
ReplyDelete