Monday, October 26, 2020

மறைபொருள் பெரிது

இன்றைய (27 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 5:21-23)

மறைபொருள் பெரிது

புனித பவுல் எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலின் இறுதிப் பகுதி அறிவுரைப் பகுதியாக அமைந்துள்ளது. அறிவுரைப் பகுதியின் தொடக்கமாக, 'கணவன்-மனைவி' உறவு பற்றி அறிவுறுத்துகின்றார். தொடர்ந்து, திருமண உருவகம், 'திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துகிறது' என்கிறார்.

கணவன்-மனைவி பற்றி எழுதும் பவுலின் வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை.

'பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்' 

'ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்'

ஆக, இங்கே, பெண்கள் ஆண்களிடம் காட்ட வேண்டியது பணிவு என்றும், ஆண்கள் பெண்களிடம் காட்ட வேண்டியது அன்பு என்றும் பவுல் குறிப்பிடுகின்றார்.

மேலும், 'கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார்' என்கிறார்.

'இருவரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்று அவர் பொதுவாகச் சொல்லியிருக்கலாமே?

'பெண்கள் தங்களது அன்பை பணிவு என்று காட்ட வேண்டும். ஒரு பெண் தன் கணவனிடம் தான் அவனை அதிகமாக அன்பு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவனுக்குப் பயப்படாமல் நடந்தால், அல்லது அவனை மதிக்கத் தவறினால் அவள் அவனை அன்பு செய்வதில்லை. மாறாக, அவள் பேசுவதெல்லாம் வெற்று வார்த்தைகளே. பெண்ணின் அன்பு அவளுடைய பணிவில் மட்டுமே வெளிப்பட முடியும்' என்கிறது பவுலின் சமகாலத்து கிரேக்க மெய்யியல். இந்தப் பின்புலத்தில் பவுல் எழுதியிருக்கலாம்.

ஆக, ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்பதற்கு நான் அடிக்கடிக் குறிப்பிடும் இறைவார்த்தை இதுவே. 'ஆணும் பெண்ணும் ஒருபோதும் சமமாக இருக்க முடியாது. மெழுகுதிரியும் குத்துவிளக்கும் சமம் அல்ல. இரண்டும் ஒளிதரக் கூடியவைதாம். ஆனால், இரண்டின் பயன்பாடுகள் வேறு. ஆணும் பெண்ணும் எதில் சமம்? இருவரும் பிறக்கிறார்கள், இருவரும் இறக்கிறார்கள், இருவரும் நோய்வாய்ப்படுகிறார்கள், இருவரும் நலம் பெறுகிறார்கள். நம் இருத்தல் நிலையில் நாம் சமமே அன்றி, நம் இயக்க நிலையில் நாம் ஒருபோதும் சமம் அல்ல' - இதுதான் என் புரிதல்.

இரண்டாவதாக, பவுல், 'இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது' என்று திருமணம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதாவது, இருவரும் ஒரே உடலாக இருப்பது என்பது பெரிய மறைபொருள். தலை சொல்லும் கட்டளைக்குக் கால் பணிந்தால்தான் உடல் இயக்கம் நடைபெற முடியும். இருத்தலும் இயக்கமும் இணையும் புள்ளிதான் மறைபொருள்.

இவ்வாறாக, ஒருபுறம் குடும்ப உறவில் திகழ வேண்டிய பண்புகளைப் பற்றிப் பேசினாலும், மற்றொரு புறம் அதை ஒரு மறைபொருள் என்று நிறுத்திக்கொள்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, இறையாட்சியைக் கடுகு விதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். சிறிய அளவில் இருப்பவை பெரிய மாற்றத்தின் காரணிகளாக மாறுகின்றன.

திருமண உறவின் அன்பும் அப்படியே!

2 comments:

  1. "பெண்ணின் அன்பு அவளுடைய பணிவில் மட்டுமே வெளிப்பட முடியும்"

    என்பதை யானும் 100℅ ஒத்துக்கொள்கிறேன், சகோதரரே.

    நன்றி🙏

    ReplyDelete
  2. “இருத்தலும்,இயக்கமும் இணையும் புள்ளிதான் மறைபொருள்.” பவுலடியார் கூற்றுப்படி தந்தை கூறும் பல விஷயங்கள் அவரின் காலகட்டத்தை மையப்படுத்தியிருக்கலாம்.”பணிவும்,பண்பும்” ஆண்,பெண் இருவரிடமுமே இருக்க வேண்டியது. பெண் பணிசெய்ய வற்புறத்தப்படுவதால் ,அவளே பணிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தங்கள் பல குடும்பங்களில்.மெழுகுதிரியும்,குத்துவிளக்கும்...இரண்டுமே ஒளிதருவதற்குத்தானே! இதில் என்ன வேறுபாடு? ஆணாலும் கடுகு விதைபோல...புளிப்பு மாவு போல சிறிய அளவில் உணரப்படும் மனைவியும் பெரிய மாற்றத்தின் காரணியாக இருக்கிறாள். ஒப்புக்கொண்ட தந்தைக்கு நன்றி! ‘ஆணியம்’ கொஞ்சம் தலை காட்டுவது போல் தெரிந்திடினும் பல உண்மைகளையும் இலைமறை,காய்மறைவாகச் சொல்லியிருக்கும் தந்தைக்கு ஒரு சலூய்ட்!

    ReplyDelete