Tuesday, October 20, 2020

மிகவும் கடையவன்

இன்றைய (21 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 3:2-12)

மிகவும் கடையவன்

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் சில வார்த்தைகள் பவுலின் நற்செய்தி ஆர்வத்தையும், அவருடைய மேய்ப்புப்பணி திட்டமிடுதலையும் நமக்கு உணர்த்துவதோடு, அவற்றை நம் முன் சவாலாகவும் நிறுத்துகின்றன.

(அ) 'கடவுளுடைய அருளின் பொறுப்பாளர்'

இங்கே 'ஒய்கோனோமியா' ('இல்ல மேலாண்மை') என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையிலிருந்துதான் ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும், 'எகானமி' என்ற சொல் வருகிறது. இதன் பொருள், 'இல்லத்தை ஒழுங்குபடுத்துதல்' அல்லது 'நிர்வகித்தல்.' தன்னை ஒரு பொறுப்பாளர் என முன்வைக்கிறார் பவுல்.

(ஆ) 'நற்செய்தியின் தொண்டன்'

தான் நற்செய்தி அறிவிக்கிற திருத்தூதர் என்றாலும், திருத்தூதர் என்ற உரிமையை எடுத்துக்கொள்ளாமல், தன்னை ஒரு தொண்டன், அல்லது பணியாளன், அல்லது அடிமை எனச் சற்றுத் தள்ளியே நிறுத்திக்கொள்கிறார்.

(இ) 'மிகவும் கடையவன்'

இயேசுவின் வெளிப்பாடு அருளிய காலத்தின் பின்புலத்தில், திருத்தூதர்கள் பெற்ற மறைபொருள் தனக்கு இறுதியாக வெளிப்படுத்தப்பட்டதால், தன்னை 'கடையவன்' என அழைக்கின்றார் பவுல்.

இவ்வாறாக, பவுல் கிறிஸ்துவின் நற்செய்தியின்மேல் கொண்டிருந்த ஆர்வத்தையும், தாகத்தையும், பொறுப்புணர்வையும், அச்சத்தோடும் நடுக்கத்தோடும் அம்மறைபொருளைக் கையாண்ட விதமும் நம் வாழ்க்கைப் பாடங்களாக அமைகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:39-48), இயேசுவும் பொறுப்புணர்வு பற்றியே பேசுகின்றார். 'தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்குரியய அறிவாளியாகத் திகழுமாறு' தன் சீடர்களை அறிவுறுத்தி, 'மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்' என்று அவர்களின் பொறுப்புணர்வை நினைவூட்டுகின்றார்.

2 comments:

  1. நன்று

    நன்றி🙏

    ReplyDelete
  2. பவுலடியாருக்கு விவிலியத்தின் அடிப்படையில் தந்தை கொடுத்திருக்கும் தலைப்புக்களோடு “ பாசக்காரர்” என்பதையும் சேர்க்க விரும்புகிறேன். அவர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகங்களில் இதைத்தெளிவாகக் காணலாம்.
    “ மிகுதியாக க் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்.மிகுதியாக ஒப்படைக்கப்படுவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” எனக்கு கொடுக்கப்பட்டிருப்பது மிகுதியா? குறைவா? இதை நிர்ணயிப்பது எனக்கும் மேலே உள்ளவரைப் பார்த்து அல்ல, எனக்கும் கீழே இருப்பவர்களைப் பார்த்து.”
    “ உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு.”..... எனும் பாடல் என் செவிகளைத் தொடுவது கேட்கிறது. அழகானதொரு வாழ்க்கைப்பாடம்; தந்த தந்தைக்கு நன்றிகள்.

    ReplyDelete