Friday, October 30, 2020

முதன்மை உணர்வு

இன்றைய (31 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 14:1,7-11)

முதன்மை உணர்வு

மனித உணர்வுகளில் அடிப்படையான உணர்வு பாலுணர்வு மற்றும் வன்முறை என்று உளவியல் கூறினாலும், இவ்விரண்டு உணர்வுகளையும் ஆட்டுவிக்கின்ற உணர்வுதான் 'முதன்மை உணர்வு.' நம் தொடக்கப் பெற்றோர் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படக் காரணமாக இருந்த உணர்வும் இந்த உணர்வே. கடவுளைவிடத் தங்களை முதன்மையானவர்கள் என அவர்கள் நினைத்துக்கொண்டனர். அல்லது கடவுளை விட முதன்மையான நிலையில் தங்களையே வைத்துக்கொள்ள நினைத்தனர்.

படைப்பு என்னும் விருந்தில், தங்களுக்கென முதல் இடத்தைப் பிடித்துக்கொள்ளுமாறு அலகை அவர்களை மயக்க, அவர்களும் மயங்கிப் போகிறார்கள். ஆகையால், அவர்களை விடப் பெரியவரான கடவுள் வரும்போது, அவர்கள் வெட்கப்பட்டு தோட்டத்திற்கு வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

நம் உடலில் உள்ள டி.என்.ஏ அல்லது ஜீன் அமைப்பும்கூட நம் முதன்மை நிலையைத் தக்கவைத்துக்கொள்ளவே போராடுகிறது. நம் இதயத்துக்கு அருகில் இருக்கும் ஒருவர் நம்மை முத்தமிடத் தங்கள் தலையை நம் அருகில் கொண்டு வந்தால், தன் கண்களுக்கு ஆபத்து வருவதாக எண்ணி, உடல் தன் கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறது. எந்த நேரத்திலும் தன்னை இழப்பதை, அல்லது தான் புறந்தள்ளப்படுவதை நம் உடலும் உள்ளமும் விரும்புவதில்லை.

விருந்தில் மக்கள் முதன்மையான இடங்களைப் பிடிப்பதைக் காணும் இயேசு, அந்த நிகழ்வின் பின்புலத்தில் தாழ்ச்சி பற்றிய போதனையை முன்மொழிகின்றார். எந்தவொரு இடத்திலும், 'நானே பெரியவன்' என்ற முதன்மை உணர்வு எழும்போது, 'இல்லை! என்னைவிடப் பெரியவர் ஒருவர் வருவார்' என்ற எண்ணம் நம்மில் தாழ்ச்சியை வளர்க்கும் என்பது இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், 'வாழ்வுக்கும் சாவுக்குமான இழுபறி நிலை பற்றி' பேசுகிறார். வாழ வேண்டும் என்ற முதன்மை உணர்வு அல்லது தன்முனைப்பு இருந்தாலும், இன்னொரு பக்கம், தன்னைவிடப் பெரியவரான கிறிஸ்துவோடு இணைந்துகொள்ளத் துடிக்கின்றார் பவுல்.

இன்று, தாழ்ச்சிக்கும் முதன்மை உணர்வுக்கும் இடையே நாம் படும் இழுபறி நிலையை எண்ணிப்பார்த்தல் நலம்.

1 comment:

  1. “ முதன்மை உணர்வு”... நாம் தெரிந்து,உணர்ந்து செய்யும் செயல்களை வைத்து, நமக்குத் தெரியாத விஷயத்தை அழகாக விளக்குகிறார் தந்தை.” நானே பெரியவன் எனும் எண்ணம் என்னில் தலை தூக்கும் போது ‘ இல்லை! என்னைவிடப்பெரியவர் ஒருவர் வருவார்’ என்ற எண்ணம் நம்மில் தாழ்ச்சியை வளர்க்கும்.உண்மை! முதன்மை உணர்வு எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பதில்லை.அவரவர் நிலையறிந்து அதற்கு ஏற்றார்போன்ற முதன்மை உணர்வைக் கண்டறிதல் விவேகம். கொஞ்சம் கடினம் தான்.ஆனால் முயன்றால் முடியாதது என்றுண்டோ? யோசிக்கத் தூண்டும் விஷயங்களைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete