Thursday, October 15, 2020

நண்பர்களாகிய உங்களுக்கு

இன்றைய (16 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக்கா 12:1-7)

நண்பர்களாகிய உங்களுக்கு

யோவான் நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களை, தன் இறுதி இராவுணவில், 'நண்பர்கள்' என அழைக்கிறார். லூக்கா நற்செய்தியில், தன் போதனையைக் கேட்க, ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தபோது, தன் சீடர்களிடம், 'என் நண்பர்களாகிய உங்களுக்கு' என்று தொடங்கி ஓர் அறிவுரை பகர்கின்றார்:

'உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்'

'அஞ்ச வேண்டாம்' அல்லது 'அச்சம் வேண்டாம்' என்பதுதான் அறிவுரையின் முக்கியப் பகுதி. 'உடலைக் கொல்லும் அச்சம்' லூக்காவின் குழுமத்தில் அல்லது தொடக்கத் திருஅவையில் இருந்திருக்க வேண்டும். 

முதன்மையான மனித எதிர்மறை உணர்வுகள் என்று சொல்லப்படுகின்ற, பயம், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை என்னும் நான்கில், பயம்தான் முதலில் இருக்கிறது. பயம் அல்லது அச்சமே பற்ற எதிர்மறை உணர்வுகளைத் தூண்டி எழப்பவும் செய்கிறது. 

அச்சத்தில் என்ன நடக்கிறது? அல்லது அச்சம் கொள்ளும்போது நான் என்ன செய்கிறேன்?

எனக்கு என் மேல் உள்ள அதிகாரத்தையும் ஆற்றலையும் இன்னொருவர் அல்லது இன்னொன்றின் மேல் சுமத்தி நான் கையறுநிலையில் இருக்கும் ஓர் உணர்வே அச்சம்.

எடுத்துக்காட்டாக, என் அறையில் இருக்கும் பல்லியைக் குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். பல்லியைக் கண்ட அந்த நொடியில் நான் என் ஆற்றலை மறந்துவிட்டு, அல்லது அந்த ஆற்றலை பல்லியின்மேல் சுமத்திவிட்டு, பல்லிதான் என்னைவிட ஆற்றல் உள்ளது போல நினைத்துக்கொள்கிறேன்.

'உங்கள் மேல் ஆற்றலும் அதிகாரமும் கொண்டவர் ஆண்டவர் மட்டுமே. அவருக்கு அஞ்சுங்கள்' என்கிறார் இயேசு. பல்லியும் பாம்பும், அரசனும் அதிகாரியும் என் உடலைக் காயப்படுத்துவார்களே தவிர, ஆன்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. ஆக, அவர்களும் ஆற்றலற்றவர்களே. ஆற்றலற்ற ஒருவருக்கு ஆற்றல் இருப்பதாக நினைத்துக்கொண்டு என் ஆற்றலை நான் ஏன் அவரிடம் ஒப்படைக்க வேண்டும்?

இதை விளக்குவதற்கு இயேசு ஓர் உவமையும் சொல்கின்றார்:

'இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்கப்படுவதில்லையா? ... சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்'

மத்தேயு நற்செய்தியில், 'காசுக்கு இரண்டு குருவிகள் விற்கப்படுவதில்லையா?' எனக் கேட்கிறார் இயேசு. ஒரு காசுக்கு இரண்டு குருவிகள் என்றால், இரண்டு காசுக்கு நான்கு குருவிகள்தானே! 'ஐந்தாம் குருவி' எங்கிருந்து வந்தது? இதுவே 'கொசுறு' அல்லது 'இலவசக் குருவி.' இந்தக் குருவியின் மேல் விற்பவருக்கும் கடமையில்லை, வாங்குபவருக்கும் கடமையில்லை. அது வாழ்ந்தாலும், இறந்தாலும் யாரும் அதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை. ஏனெனில், அதற்கு எந்த விலையும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அந்தக் கொசுறு குருவிக்கும் கடவுள் உணவு தந்து பராமரிக்கிறார். ஆற்றல் குறைந்த ஓர் உயிரினமே தன் இருத்தலையும், எதிர்காலத்தையும் கண்டு அஞ்சாத போது, ஆற்றல் மிக்க நீங்கள், அதுவும், தலைமுடிகள் எல்லாம் எண்ணப்பட்ட நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்? என்பதே இயேசுவின் கேள்வி.

அச்சம் என்பது நமக்கு நாமே கட்டிக்கொள்ளும் சங்கிலி. அந்தச் சங்கிலி அகன்றால்தான் நம்மால் பறக்க முடியும்.

இன்று நான் கொள்கின்ற பயங்களை எல்லாம் பட்டியலிட்டு, எல்லாப் பயங்களையும் அகற்ற உறுதி எடுத்தல் நலம்.

ஏனெனில், (அ) நான் இயேசுவின் நண்பன், (ஆ) என் பயங்களுக்கு என்மேல் ஆற்றல் இல்லை, (இ) என் தலைமுடிகளை எண்ணி என்மேல் அக்கறை கொள்பவர் கடவுள்.

1 comment:

  1. ஆற்றலற்ற ஒருவருக்கு ஆற்றலிருப்பதாக நினைத்துக்கொண்டு என் ஆற்றலை நான் ஏன் அவரிடம் ஒப்படைக்க வேண்டும்? ஒரு கடப்பாரை கொண்டு மனத்தைக் கிழிப்பதாக அமைகிறது தந்தையின் கேள்வி.நம்மீது ஆற்றல் கொண்ட இயேசுவுக்கு மட்டுமே அஞ்சுவோம் என்பதை நம் நேசத்துக்குள்ளான சிட்டுக்குருவிகளை உதாரணமாக வைத்துக் காட்டுகிறார் தந்தை. நான் என்னையே கட்டிக்கொள்ளும் சங்கிலி எனும் பயத்தை அறுக்க முயற்சிப்பேன். ஏனெனில் இயேசுவின் நண்பியான என்மேல் என் பயங்களுக்கு ஆற்றல் இல்லை.என் தலைமுடிகளை எண்ணி என் மேல் அக்கறை கொள்பவர் என் கடவுள்.அழகான வரிகளுக்காக அருமையான தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete