I. விடுதலைப் பயணம் 22:21-27 II. தெசலோனிக்கர் 1:5-10 III. மத்தேயு 22:34-40
உம்மை அன்பு செய்கிறேன்
விவிலியத்தில், மனிதர்கள், கடவுளைப் பார்த்து, 'ஐ லவ் யூ' என்று சொல்லும் பகுதி இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்கு அமைந்துள்ளது. 'என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்' என்று தாவீது உள்ளம் உருகுவதோடு, 'ஆண்டவரே என் கற்பாறை, என் கோட்டை, என் மீட்பர்' என அறிக்கையிட்டு மகிழ்கின்றார்.
இயேசு எருசலேமுக்குள் நுழையுமுன் சந்தித்த நான்கு குழுக்களில் இரண்டாவது குழுவினரை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். தூய்மையானவர்கள் என்று தங்களையே 'ஒதுக்கிவைத்துக்கொண்ட' பரிசேயர்கள், 'போதகரே' என்று அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை, இயேசுவைக் கேலி செய்வது போல இருக்கிறது. ஏனெனில், கலிலேயாவின் சுற்றுப்புறங்களில் இருந்த வந்த, தச்சனின் மகன் இவர் திருச்சட்டம் அறியாதவர், என்ற எண்ணத்திலும், அல்லது இயேசுவின் அறிவைச் சோதிக்கும் நோக்குடனும் அவர்கள் இயேசுவிடம் வருகிறார்கள்.
ஆனால், இயேசு நேரிடையாகவே அவர்களுக்குப் பதிலிறுக்கின்றார். முதன்மையான கட்டளையாக, மோசேயின் திருச்சட்டத்தில் உள்ள, 'இஸ்ரயேலே கேள்' (இச 6:4) என்னும் இறைவாக்குப் பகுதியிலிருந்து கையாள்கிறார். 'ஆண்டவராகிய கடவுளிடம் முழுமையாக அன்பு செலுத்துவது' முதன்மையான கட்டளை என்பது எல்லா யூதர்களுக்கும் தெரிந்த ஒன்று என்பதால், அதையும் இயேசு முன்வைத்துவிட்டு, ஒரு புரட்சி செய்கின்றார். அது என்னவென்றால், 'உன் மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!' (காண். லேவி 19:18) என்று பிறரன்புக் கட்டளையையும் முதல் கட்டளைக்கு இணையாக்கிவிடுகிறார். இது இரண்டு நிலைகளில் பரிசேயர்களுக்கு நெருடலாக இருந்திருக்கும்: ஒன்று, பரிசேயர்கள் தங்களையே 'தூய்மையான நிலைக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டு' மற்றவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. இறைவனை அன்பு செய்தலே போதும்! என்ற மனநிலையில் இருந்தார்கள். இரண்டு, பிறரன்புச் செயல்களைவிட நோன்பு போன்ற தன்மைய ஆன்மீகத்தையே பரிசேயர்கள் கொண்டிருந்தனர்.
இறைவனை அன்பு செய்தல், 'முழு இதயம், உள்ளம், மனம்' என்ற மூன்று சொற்களோடு இணைத்துத் தரப்பட்டுள்ளது. 'இதயம்' என்பது உணர்வுகள் குடியிருக்கும் இடம் எனவும், 'உள்ளம்' என்பது நம் எண்ணங்களின் ஊற்று எனவும். 'மனம்' என்பது நன்மை-தீமையைப் பகுத்தாய்ந்து தெரிவு செய்யும் தளம் என்றும் இயேசுவின் சமகாலத்தவர் நம்பினர். ஆக, நம் உணர்வுகள், எண்ணங்கள், மற்றும் தெரிவறிவு மூன்றும் இறைவனை நோக்கியதாக இருக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 22:21-27), 'உடன்படிக்கைச் சட்டம்' என்று சொல்லப்படுகின்ற பகுதியில், அன்றைய சமூகத்தில் வாழ்ந்த மூன்றுவகை கையறுநிலை மனிதர்களை ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றார்: (அ) அந்நியர்கள், (ஆ) கைம்பெண்கள், அநாதைகள், மற்றும் (இ) ஏழைகள். இம்மூவருமே மூன்றுநிலைகளில் பிடுங்கப்பட்ட வேர்கள். நிலம் என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் அந்நியர்கள். அவர்களுக்கு என்னதான் உடைமைகள் இருந்தாலும் அவர்கள் நிற்கின்ற நிலம் அவர்களுடையது அல்ல. உறவு என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் கைம்பெண்கள் மற்றும் அநாதைகள். விவிலியம் பெரும்பாலும் இவ்விருவரையும் இணைத்தே சொல்கிறது. தந்தைவழிச் சமூகத்தில் மனைவியர் கணவரின் சொத்தாகக் கருதப்பட்டார்களே அன்றி, மனைவியர்களுக்கென்று சொத்துகள் எதுவும் இல்லை. மேலும், போர், நெடும்பயணம், ஆபத்துகள் போன்றவற்றால் நிறையக் குழந்தைகள் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்படும் நிலை அன்று இருந்தது. உறவு இருந்தால்தான் மற்றவை கிடைக்கும். இவ்விருவருமே உறவற்றவர்களாக இருந்தனர். (இ) ஏழைகள். பொருளாதாரம் என்னும் வேர் பிடுங்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் தேவைகளுக்காக மற்றவர்களிடமிருந்து வட்டிக்குப் பணம் வாங்கினர். இம்மூன்றுவகை கையறுநிலை மக்களையும் அரவணைத்துக்கொள்ளக் கட்டளையிடுகிறார் ஆண்டவராகிய கடவுள்.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 தெச 1:5-10), தெசலோனிக்க நகர் மக்களுக்கு நன்றி கூறி மகிழ்கின்ற பவுல், தொடர்ந்து, 'நீங்கள் எங்களைப் போலவும், ஆண்டவர் போலவும் நடக்கிறீர்கள்' என வாழ்த்துகிறார். முதலில், நான் யாரிடமாவது, 'என்னைப் போல இரு!' என்று சொல்ல வேண்டுமானால், அதற்கேற்ற தகைமையை நான் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால், 'உன்னைத் தெரியாதா! போடா!' என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், பவுலின் நாணயமும் நற்பண்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும், 'ஆண்டவரைப் போல' இருக்கிறீர்கள் எனச் சொல்கிறார். நாம் தேவையில் இருக்கும் போது யாராவது நமக்கு உதவினால், 'கடவுள் போல வந்து காப்பாற்றினாய்' என்று வாழ்த்துகிறோம். அதாவது, எந்தவொரு பதிலன்பும் பதிலும் எதிர்பார்க்காமல் முழுமையாக அடுத்தவர் நலனை மட்டுமே எண்ணுதலே 'ஆண்டவரைப் போல இருத்தல்.'
இறையன்பு, பிறரன்பு என்னும் இரண்டு கட்டளைகளுக்கு முன்னால், 'உன்னை அன்பு செய்வது போல' என்னும் சொற்றொடரில, 'தன்அன்பு' அடங்கியுள்ளது. தன்னை அன்பு செய்யாத ஒருவர் தனக்குப் பெரிய கடவுளையோ, அல்லது தனக்குச் சமமான பிறரையோ அன்பு செய்தல் அரிது.
இறையன்பு, தன்அன்பு, மற்றும் பிறரன்பு என்னும் மூன்று அன்பு நிலைகளை, ஒரு மரத்தின், 'வேர்,' 'தண்டு,' மற்றும் 'கிளை' என நாம் உருவகித்துக்கொள்ளலாம். இறையன்பு நமக்கு வேராக இருக்கின்றது. தன்அன்பில் நாம் ஒரு தண்டு போல வளர்கிறோம். எப்படி? ஓர் ஆடும் வளைத்துக்கொள்ளும் அளவுக்கு இருக்கின்ற ஒரு கொடி வளர்ந்துவிட்டால் யானையாலும் அதை வளைக்க முடிவதில்லை. ஏனெனில், அது தன்னையே உருவாக்கிக்கொள்கிறது. 'கிளை' என்பது நாம் இந்த உலகில் பலன் கொடுக்கும் நிலையைக் குறைக்கிறது.
கவ்ர் கோபால் தாஸ் என்னும் ஆன்மீக வழிகாட்டி, மூன்றுவை 'சி' ('C) பற்றிப் பேசுகின்றார். இம்மூன்றையும் நாம் எப்போதும் மனத்தில் வைத்திருக்க வேண்டும் என்கிறார் குரு: (அ) 'கனெக்ஷன்' (Connection) (தொடர்பு), (ஆ) 'கல்டிவேஷன்' (Cultivation) (வளர்ப்பு), மற்றும் (இ) 'கான்ட்ரிப்யூஷன்' (Contribution) (பங்களிப்பு). இம்மூன்றையும், நாம் மேற்காணும் மூன்று அன்புநிலைகளுக்கு ஒப்பிட்டால், நாம் இறையன்பின் வழியாக நம் கடவுளிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, தன்அன்பின் வழியாக என்னையே நான் உருவாக்கிக் கொண்டு, பிறரன்பின் வழியாக என் பங்களிப்பை நான் மற்றவர்களுக்குக் கொடுத்தால் என் வாழ்வு இனிய வாழ்வாகும்.
இன்று,
நான் இறைவனையும், என்னையும், பிறரையும் பார்த்து,
'நான் உன்னிடம் அன்புகூர்கிறேன்' என்று திருப்பாடல் ஆசிரியர் போலச் சொல்வதற்கு,
என் தொடர்பில் வேரூன்றவும்,
என் வளர்ப்பில் உறுதிப்படவும்,
என் பங்களிப்பில் கிளைபரப்புவும் வேண்டும்.
இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
நிறைய அன்பு சார்ந்த விஷயங்கள்! கண்டிப்பாக முழு மறையுரையையும் வாசித்தபின் மனத்தில் தோன்றுவது...தன்னையே அன்பு செய்யும் ஒருவனால் தன் அயலானையும் நேசிக்க இயலும்.அயலானை நேசிக்க முடிந்த ஒருவனால் இறைவனையும் நேசிக்க முடியும். தந்தையின் இறுதிவரிகளில் வரும் ‘என்’ எனும் வார்த்தையை நீக்கிவிட்டு ‘நம்’ எனும் வார்த்தையைப் போட்டால் கண்டிப்பாக இறைவன் இந்த அனைத்துலகோரையும் ஆசீர்வதிப்பார்.” அன்பே பிரதானம்; சகோதர அன்பே பிரதானம்” எதிரொலியாக வரும் தந்தையின் மறையுரைக்கு நன்றியும்......ஞாயிறு வணக்கங்களும்!!!
ReplyDelete