இன்றைய (3 அக்டோபர் 2020) முதல் வாசகம் (யோபு 42:1-3,5-6,12-17)
யோபுவின் புதல்வியர்
யோபு நூல் மிகவும் இனிதே நிறைவு பெறுகிறது. 'முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் யோபுவுக்கு அதிகமாக ஆசி வழங்கினார்' என நிறைவு பெறுகிறது நூல். ஆனால், இதை ஆண்டவர்தாம் அருளினார் என்பது யோபுவுக்குத் தெரியாது. எதற்காக தன் செல்வம் பறிக்கப்பட்டது என்றும், எதற்காக தனக்கு மீண்டும் அதிகமாகக் கிடைத்தது என்பதும் யோபுவுக்குத் தெரியாது.
யோபு நூலில் மூன்று வகை ஞானம் இணைந்து கிடக்கிறது.
முதலில், யோபுவின் ஞானம். யோபு பல கேள்விகள் கேட்கிறார். தன் நண்பர்களோடு வாதிடுகிறார். கடவுளை எதிர்கொள்கிறார். கடவுளோடு சண்டையிடுகிறார். கடவுளிடம் சரணாகதி ஆகின்றார்.
இரண்டாவதாக, வாசகரின் ஞானம். கடவுளின் வாதங்கள், நண்பர்களின் வாதங்கள், யோபுவின் கேள்விகள் என நூலோடு உடன் பயணிக்கிறது வாசகர்களாகிய நம் ஞானம்.
மூன்றாவதாக, கடவுளின் ஞானம். இது யோபுவுக்கும் நமக்கும் மறைவாக இருக்கிறது.
மேற்காணும் மூன்று ஞானமும் யோபுவின் மூன்று புதல்வியர் என்னும் உருவகங்களாக உள்ளதாக நாம் எடுத்துக்கொள்வோம்.
யோபுவுக்கு மூன்று புதல்வியர் பிறக்கின்றனர்: (அ) எமிமா, (ஆ) கெட்டிசியா, (இ) கெரேன் அப்பூக்கு. 'எமிமா' என்றால் 'புறா' என்றும், 'கெட்டிசியா' என்றும் 'மணம் தரும் மரம்' என்றும், 'கெரேன் அப்பூக்கு' என்றால் 'நறுமணத் தைலம் வைக்கும் பெட்டி' என்றும் பொருள். இவர்களில், 'எமிமா' மிகவும் அழகானவர் என்று சொல்லப்படுகின்றார். மேலும், யோபு தன் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை அளிக்கிறார்.
யோபுவுக்கு அனைத்தும் கிடைக்கப்பெறுவதை எப்படி புரிந்துகொள்வது?
(அ) நாம் இழந்தவற்றை மீண்டும் பெறுவோம் என்பது எதிர்நோக்கே அன்றி உத்திரவாதம் இல்லை என்பதை நாம் எப்போதும் மனத்தில் இருத்த வேண்டும்.
(ஆ) இங்கே காணப்படும் அனைத்து எண்களும், '7', '3', '144' நிறைவைக் குறிக்கின்றன. ஆக, யோபு குறைவின்றி இருந்தார் என்பது இங்கே அடிக்கோடிடப்படுகிறது.
(இ) யோபு தன் வாழ்வை வித்தியாசமாக வாழ்கின்றார். தன் சமகாலத்து மனிதர்கள் செய்யாத செயலையும் - பெண்களுக்குச் சொத்தில் பங்கு கொடுப்பது - அவர் செய்கின்றார்.
'வலி மறைந்து போகும். அழகு நிலைத்து நிற்கும்'
இதுவே யோபு நூலின் இறுதிப் பகுதி தரும் செய்தியாக இருக்கிறது.
உள்ளத்தின் அழகு நிலைக்க, உள்ளம் நிறையவே அழ வேண்டும்!
என்னதான் சோகத்தின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக இருப்பினும் “ யோபு” நூலின் சோகத்திலும் அங்கங்கே ஒரு சுகமிருப்பதை நான் கண்டேன்..... பாலைவனத்தில் அங்கங்கே தெரியும் ‘ஒயாசிஸ்’ போல. தந்தை குறிப்பிட்டிருக்கும் மூவகை ஞானத்தில் நான் யோபுவின் பக்கமே!கேள்விகள் கேட்பதும்,வாதிடுவதும்,கடவுளை எதிர்த்து நிற்பதும்,சண்டையிடுவதும்,பின் கடவுளிடமே சரணாகதியாவதும் ஒரு பக்தனுக்கே உரிய குணங்கள்.சரணாகதியில் முடியும் அத்தனையும் அலங்கோலத்தில் ஆரம்பித்தால் கூட அது தப்பில்லை. ஏனெனில்.....
ReplyDelete“ வலி மறைந்து போகும்; அழகு நிலைத்து நிற்கும்”
ஆகவே நிலைத்து நிற்கப்போகும் அழகிற்காக அழுவதில் தப்பில்லை!
அழகும்,அழுகையும்,சோகமும்,சரணாகதியுமான ஒரு கூட்டாஞ்சோற்றிற்காகத் தந்தைக்கு நன்றிகள்! அழுவோர் ஆறுதலடைவார் என்கிறது விவிலியம்.....