Thursday, October 1, 2020

காவல் தூதர்கள்

இன்றைய (2 அக்டோபர் 2020) திருநாள்

காவல் தூதர்கள்

தூதர்கள் என்பவர்கள் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட உயிரிகள். ஆகவே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக அவர்கள் செயல்படுகிறார்கள். இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 23:20-23), ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு தூதர்களை அனுப்புகிறார். அவர்கள் இரண்டு பணிகளைச் செய்கின்றனர்: (அ) வழியில் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், (ஆ) கடவுள் அவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றனர். நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:1-5,10), சிறு பிள்ளைகளுக்கு இடறலாக இல்லாமலிருப்பது குறித்து எச்சரிக்கின்ற இயேசு, 'இவர்களது வானதூதர்கள் என் தந்தையின் திருமுன் எப்போதும் இருக்கிறார்கள்' எனச் சொல்கிறார்.

காவல் தூதர்களின் உடனிருப்பு என்பது நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவம்.

விபத்திலிருந்து நாம் காப்பாற்றப்பட்டது, நம் தேர்வு பயம் நீங்கியது, நாம் சரியான முடிவு எடுக்க முடிந்தது என பல நிகழ்வுகளை நம் காவல் தூதர்களோடு நாம் இணைத்துப் பார்க்கிறோம்.

நம் உள்ளத்தில் ஒலிக்கும் குரலாகவும் காவல் தூதர் இருக்கிறார்.

இதையே எசாயா, 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி. இதில் நடந்துசெல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (காண். எசா 30:21).

நமக்குக் காவல் தூதர்கள்போல வாழ்வில் வருகின்ற நம் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், மற்றும் பணியாளர்களை நினைத்து நன்றி நவில்வதோடு, நாமும் மற்றவர்களுக்குக் காவல் தூதர்கள்போல இருந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரலாம்.

1 comment:

  1. ‘நீங்கள் வலப்புறமோ,இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும்,’ இதுதான் வழி.இதில் நடந்து செல்லுங்கள்’ எனும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.’ஏசாயாவின் இவ்வார்த்தைகளை வாசிக்கும்போது நம் நினைவில் வரும் காவல் தூதர்கள் அந்த வரிகள் நம் கண்பார்வையிலிருந்து மறைவதற்குள் மறைந்து விடுகின்றனர். நான் ஒவ்வொரு முறை சிறிய,பெரிய ஆபத்துக்களின் பிடியில் சிக்கும்போது ‘ நான் என் காவல்தூதரைத்துணைக்கு அழைக்கவில்லையோ’ எனும் குற்ற உணர்வு இருப்பினும் மீண்டும்,மீண்டும் செய்வது அதே தவறைத்தான்.இனியாவது அத்தவறை சீர்செய்ய வேண்டுமென சொல்கிறது என் உள்மனம்.
    தந்தையின் கூற்றுப்படி நம் கண்களால் காண இயலா வானுலக காவல்தூதர்களை விட,நம் கண்களால் காண முடியும் காவல் தூதர்கள் எத்தனையோ பேர் நம்மைச்சுற்றி இருக்கிறார்கள்; நம்மைக்கரம் பற்றி நடத்துகிறார்கள். அவர்களை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறுவதையும் தாண்டி, நாமும் நம்மைச்சுற்றியுள்ள சிலருக்கேனும் காவல்தூதர்களாக மாறுவோம்.என்னுள் உறையும் காவல்தூதரை வெளிக்கொணர்ந்த தந்தைக்கு என்நன்றிகள்!!!

    ReplyDelete