Monday, October 5, 2020

அவர் பெயர் மார்த்தா

இன்றைய (6 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 10:38-42)

அவர் பெயர் மார்த்தா

திருச்சட்டத்தின் முதன்மையான கட்டளை என இறையன்பு மற்றும் பிறரன்புக் கட்டளைகளை அட்டவணைப்படுத்துகின்ற இயேசு, பிறரன்புக் கட்டளைக்கான எடுத்துக்காட்டாக நல்ல சமாரியனை முன்வைக்கின்றார். தொடர்ந்து, லூக்கா, மார்த்தா-மரியா நிகழ்வைப் பதிவு செய்து இறையன்புக் கட்டளையின் பொருளை நிறைவு செய்கிறார். 'தேவையானது ஒன்றே' என்று இறைவனைப் பற்றிக்கொள்வதே இறையன்பு.

இன்றைய நம் சிந்தனைக்கு மார்த்தாவை எடுத்துக்கொள்வோம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எங்களுக்கு மாத ஒடுக்க உரை வழங்க வந்த அருள்பணி. ஜோசப் ஆரோக்கியம், சே.ச. அவர்கள் மார்த்தா-மரியா நிகழ்வு பற்றிய தன் கருத்தைப் பதிவு செய்தார். அந்தக் கருத்தையே நான் இன்று பதிவிடுகிறேன்.

நிகழ்வின்படி, மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகின்றார்.

இதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால், பற்பல பணிகள் செய்யுமாறு இயேசு அவரைக் கட்டாயப்படுத்தவோ, மரியா அவரை வேண்டிக்கொள்ளவும் இல்லை.

மார்த்தா, தானாகவே முன்வந்து பற்பல பணிகள் செய்கிறார். ஆக, அவரே விரும்பி அவற்றைச் செய்கிறார். ஆனால், நாமே விரும்பிச் செய்யும் ஒன்றைப் பற்றி நாம் முறையீடு செய்யலாமா? முணுமுணுக்கலாமா?

இல்லை. மார்த்தா முறையீடு செய்கிறார், முணுமுணுக்கிறார்.

அவருடைய முறையீடு தனது தனிமை மற்றும் கவலையை மையப்படுத்தியதாக இருக்கிறது.

நாமும் பல நேரங்களில் பல வேலைகளை முன்னெடுத்துச் செய்கிறோம். ஆனால், அவற்றைக் குறித்து முறையிடுகிறோம்.

எடுத்துக்காட்டாக, நான் எனது வலைப்பூவில் இந்தச் சிந்தனையை எழுதுகிறேன். இதை நானாக விரும்பி எழுதுகிறேன். இதை நான் இங்கே எழுதுவதற்காக எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இதை நான் எழுத வேண்டும் என்று யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. இதை நான் எழுதினால் நாளை எனக்கு வேறு ஏதாவது கிடைக்கும் என்ற வாக்குறுதியும் இல்லை. நானாக விரும்பிச் செய்யும் இந்த நிகழ்வை முன் வைத்து, 'தினமும் எனக்கு இது பெரிய தொல்லையாக இருக்கிறது. நான் மட்டுமே உட்கார்ந்து எழுத வேண்டும். மற்றவர்கள் எல்லாரும் இந்த நேரத்தில் ஓய்வெடுக்கிறார்கள். யாரும் நான் கஷ்டப்பட்டு எழுதுவதை வாசிப்பதில்லை. சில நேரங்களில் என் எழுத்துகளில் குறைகண்டுபிடிக்கின்றனர்' எனப் புலம்பினால் எப்படி இருக்கும்?

'உன்னை யார் எழுதச் சொன்னா?' - இதுதான் என் புலம்பலைக் கேட்பவரின் பதிலிறுப்பாக இருக்கும். 

மார்த்தாவின் சகோதரி மரியா, தானாக விரும்பி ஒன்றைச் செய்கின்றார். அப்படிச் செய்யும் அவர் அதைக் குறித்துப் புலம்பவில்லை. 'நீயும் வந்து உட்கார்' என்று தன் சகோதரியைக் கடிந்துகொள்ளவில்லை.

இன்று, நாம் செய்யும் வேலைகளை எண்ணிப் பார்ப்போம். எத்தனை வேலைகளை நாம் விரும்பிச் செய்கிறோம்? விரும்பிச் செய்பவற்றைக் குறித்து நாம் புலம்புகிறோமா? கவலைப்படுகிறோமா?

இரண்டு, நாம் பரபரப்பாக இருந்தால்தான், அல்லது நாம் நிறைய வேலை செய்தால்தான் மற்றவர்கள் நம்மைப் பற்றி நல்ல எண்ணம் கொள்வார்கள் என்ற அடிப்படையில் பல நேரங்களில் நாம் நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறோம். அவற்றில் சிலவற்றைச் செய்ய இயலாமல் போவதால் மற்றவர்களின் அதிருப்தியையும் பெறுகின்றோம். ஆக, என் இருத்தல் அல்லது தான்மை என் செயல்களில் அல்ல என்பதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?

மூன்று, நம் பரபரப்பான வேலைகளை யாரும் செய்யலாம். அவற்றை யாரும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 'தேவையான அந்த ஒன்றை' நான் செய்யும்போது அதுவே என் நல்ல பங்காகிறது. அதை யாரும் என்னிடமிருந்து எடுக்க முடியாது. அந்த ஒன்றை நான் கண்டுகொள்கின்றேனா?

2 comments:

  1. “அவள் பெயர் மார்த்தா”..... தலைப்பே அழகு! பரவாயில்லை....இந்த மார்த்தா- மரியா நிகழ்வில் வரும் மார்த்தாவின் புலம்பலுக்குத் தந்தை தன்னையே மையப்படுத்தி கூறியுள்ள விளக்கம் நம் எல்லோருக்குமே பொருந்தக்கூடியதே! ஆனால் பல நேரங்களில் நமக்கு ஒரு வேலைசெய்ய மனமிருந்தும்....ஏன் வேலையை நிறைவாகச்செய்த பின்னும் மகிழ்ச்சிக்குப்பதில் ஒரு வெறுமை உணர்வை அடைகிறோம். அதற்கு நம் உடலின் இயலாமையே தவிர வேறு காரணம் இருக்குமென தோன்றவில்லை. மார்த்தாவின் புலம்பலுக்கும் அந்த ‘இயலாமையே’ காரணமாக இருந்திருக்கும். ஆனால் தந்தையின் வரிகளில்....’நாம் ஒரு செயலைச்செய்ய முடிவெடுக்கையில் யாரும் நம்மிடமிருந்து எடுக்க முடியாத...தேவையான ஒன்றை....மட்டுமே நம் கருத்தில் கொள்ள வரம் கேட்போம்.’ எத்தனையோ மரியாக்கள் விவிலியத்தில் வலம் வருகையில் கருவேப்பிலைக் கொத்துபோல வரும் ஒரே மார்த்தாவைப் பற்றிய பதிவுக்குத் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. மிக அருமை யேசு. அதற்கு நீங்கள் கொடுத்துள்ள உதாரணம் சிந்திக்க வைக்கிறது. தேவையானது எதுவோ அதை தேடத் தூண்டுவதாய் அமைந்துள்ளது. நன்றி.

    ReplyDelete