Friday, October 16, 2020

அகக்கண்கள் ஒளியூட்டப்பெற

இன்றைய (17 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 1:15-23)

அகக்கண்கள் ஒளியூட்டப்பெற

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், எபேசு நகரத் திருஅவை இறைமக்களின் ஆன்மீக ஞானத்திற்காக இறைவேண்டல் செய்கிறார். அவர்கள் இயேசு கிறிஸ்துவின்மேல் கொண்டிருக்கிற நம்பிக்கையைப் பாராட்டுகிற பவுல், தொடர்ந்து, 'அவர்கள் அகக்கண்கள் ஒளியூட்டப்பெறுவனவாக!' என வாழ்த்துகிறார், செபிக்கிறார்.

கிரேக்கப் பாடத்தில், 'இதயத்தின் கண்கள்' என்று உள்ளது.

'இதயத்தின் கண்கள்' திறக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை அவரே வரையறுக்கிறார்:

(அ) கடவுளுடைய அழைப்பு தரும் எதிர்நோக்கு

(ஆ) இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு

(இ) அவரிடம் நம்பிக்கைகொள்பவர்களில் செயலாற்றும் இறைவல்லமை

ஆகிய மூன்றையும் ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.

'அறிதலில்', கண்களின் பங்கு மிக முக்கியம். கிரேக்க இலக்கியங்களில், 'காண்பதால் வருவது அறிவு' என்ற பழமொழியும் உண்டு. ஆனால், எபிரேய இலக்கியங்களில், 'கேட்பதால் வருவது அறிவு' என்று காணக்கிடக்கிறது. தமிழ் மரபிலும், 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்றே வள்ளுவர் அறிவை வரையறுக்கிறார்.

பவுலின் எழுத்துகளில் காணப்படும் இன்னொரு அழகான செய்தி என்னவென்றால், அவர் நம் ஊனக்கண்களால் காண முடியாதவை பற்றி அதிகம் பேசுகிறார். அல்லது நம் உடலின் கண்கள் தங்களிலேயே வலுவற்றவை என்றும், கண்களைத் திறப்பதால் அல்ல, நம் கண்களை மூடி, இதயத்தின் கண்களைத் திறப்பதால்தான் நாம் அறிவு பெறுகிறோம் என்பது அவரது புரிதல்.

'நாங்கள் காண்பவற்றை அல்ல. நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) எனக் கொரிந்து நகரத் திருஅவைக்கு பவுல் எழுதும் வார்த்தைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆங்கிலத்தில், 'இன்ஸைட்' ('insight') என்ற ஒரு வார்த்தை உண்டு. தமிழில் இதை, 'உட்பார்வை' அல்லது 'நுண்ணறிவு' என வரையறுக்கலாம். அதாவது, நம் வாழ்வின் பிரச்சினைகளுக்கு திடீரென்று நம் மூளை ஒரு தீர்வைக் காணும். அது திடீரென வரும். தூங்கும்போது, குளிக்கும்போது, நடக்கும்போது, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எனச் சில நேரங்களில் நம் மனக்கண் திறந்து, வாழ்க்கை தெளிவாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:8-12), 'தொழுகைக்கூடங்களுக்கும், ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத்தருவார்' என்கிறார் இயேசு.

தூய ஆவியார் கற்றுத்தருதலை நம் நுண்ணறிவு அல்லது உட்பார்வை அல்லது இதயத்தின் கண்கள் அறியும்.

இன்று கண்களைத் திறந்து பார்க்கும் நம் வாழ்க்கை, சில நேரங்களில், நமக்கு அச்சத்தையும், ஏமாற்றத்தையும் தரலாம். அந்த நேரத்தில், நம் புறக்கண்களை மூடிவிட்டு, சற்றே அகக்கண்களைத் திறந்தால், 'கடவுள் நம் வாழ்விற்கு வைத்துள்ள எதிர்நோக்கு,' 'அவர் நம்மேல் கொண்டாடும் உரிமை,' மற்றும் 'நம்மில் செயலாற்றும் அவரது வல்லமை' ஆகியவை தெளிவாகும்.

இதயத்தின் கண்கள் திறக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?

(அ) உடலின் கண்கள் மூடப்பட வேண்டும் (ஆனால், தூங்கிவிடக் கூடாது).

(ஆ) நம் உள்ளத்தின் பரபரப்பும் விறுவிறுப்பும் அடங்க வேண்டும்.

(இ) தூய ஆவியாரின் அருள் வேண்டும்.

1 comment:

  1. ‘நம் உடலின் கண்கள் தங்களிலேயே வலுவற்றவை என்றும், கண்களைத் திறப்பதால் அல்ல, கண்களை மூடி இதயத்தின் கண்களைத் திறப்பதால் தான் நாம் அறிவு பெறுகிறோம்’ என்பதும் பவுலின் போதனை எனில், ‘நம் புறக்கண்களை மூடிவிட்டு, சற்றே அகக் கண்களைத் திறந்தால், ‘கடவுள் நம் வாழ்விற்கு வைத்துள்ள எதிர்நோக்கு’, ‘அவர் நம்மேல் கொண்டாடும் உரிமை’, மற்றும் ‘ நம்மில் செயலாற்றும் அவரது வல்லமை’ ஆகியவை தெளிவாகும்’ என்பது தந்தையின் அனுபவம். உடல்,உள்ளக் கண்களை மூடுவோம்...தூய ஆவியாரின் அருள் பெறுவோம்.
    கொஞ்சம் புறக்கண்களை மூடி, அகக் கண்களைத் திறந்தால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete