இன்றைய (8 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 11:5-13)
டு நாட் டிஸ்டர்ப்
தொலைபேசியிலிருந்து நாம் அலைபேசிக்கு கடந்து வந்த பாதை நமக்குக் கொடுத்திருக்கும் ஒரு வசதி, 'டு நாட் டிஸ்டர்ப்' என்பது.
அது என்ன 'டு நாட் டிஸ்டர்ப்'?
நம் வீடுகளில் நாம் தொலைபேசி பயன்படுத்திய காலத்தில், நம் வீட்டை விட்டு நாம் தூரமாகச் செல்லும்போது, நம் வீட்டில் உள்ள தொலைபேசி வயரை எடுத்துவிட்டுச் செல்வது வழக்கம். நாம் நம் வீட்டிலேயே இருந்துகொண்டு, தொலைபேசி அழைப்பை நாம் ஏற்க விரும்பவில்லை என்றால், 'ரிஸீவரை' எடுத்து வெளியே வைப்பதுண்டு.
அலைபேசியில் இந்த வசதி மூன்று நிலைகளில் வளர்ந்துள்ளது. முதலில், 'ஸ்விட்ச் ஆஃப்' வசதி. அலைபேசிகள் வந்த புதிதில், நம் எண்ணை அணைத்து வைக்கலாம் என்பது பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அலைபேசி, செயல்திறன் பேசியாக வளர்ந்த போது, 'ஏர் ப்ளேன் மோட்' என்று வந்தது. இதன்படி, அலைபேசி இயக்கத்தில் இருக்கும். ஆனால், அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் தடைப்படும். இப்போது, அது வளர்ந்து, 'டு நாட் டிஸ்டர்ப் மோட்' என்ற ஒரு வசதி உள்ளது. இதன்படி, நாம் குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த அழைப்பு வந்தாலும் நமக்கு அறிவிக்கப்படாது. புதிய எண்களிலிருந்து யாரும் தொடர்புகொள்ள முடியாது. ஆனால், ஒரே எண்ணிலிருந்து மூன்று முறைக்கு மேல் அழைப்பு வந்தால், ஆபத்தான அழைப்பு என்ற நிலையில் நம் அலைபேசி ஒலிக்கும். அதையும் நம்மால் தடுக்க முடியும்.
ஸ்விட்ச் ஆஃப், ஏர் ப்ளேன் மோட், மற்றும் டு நாட் டிஸ்டர்ப் மோட் நமக்குச் சொல்வது என்ன? அல்லது இவற்றின் வழியாக நாம் மற்றவர்களுக்குச் சொல்வது என்ன?
'நான் உனக்கு அவெய்லபில் இல்லை!' அதாவது, 'என் இருத்தல் உனக்கு இல்லை!'
கடவுளின் கைபேசியில் ஸ்விட்ச் ஆஃப், ஏர் ப்ளேன் மோட், மற்றும் டு நாட் டிஸ்டர்ப் மோட் இல்லை என்று சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
அல்லது, கடவுளின் இருத்தல் நமக்கு எப்போதும் இருக்கிறது என்று சொல்கிறது.
இதை ஓர் அழகிய உவமையாகச் சொல்கிறார் இயேசு: 'நள்ளிரவில் நண்பன்'
ஒருவன் தன் நண்பனிடம் போய் நள்ளிரவில் அப்பம் கேட்கிறான். அவனுக்காகக் கேட்கவில்லை. மாறாக, அவனிடம் வந்த ஒரு வழிப்போக்கனுக்காகக் கேட்கிறான். இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் விருந்தோம்பல் என்பது மிகப்பெரிய நற்பண்பாகக் கருதப்பட்டது. விருந்தினர்களுக்காக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள். மேலும், விருந்தினர்கள் மனம் நோகக் கூடாது என்பதில் மிகவும் கருத்தாய் இருந்தனர். வழிப்போக்கனுக்கு விருந்தோம்பல் செய்யும் எண்ணத்தில் இவன் தன் நண்பனிடம் போய் அப்பம் கேட்கிறான்.
இவன் கையறு நிலையில் இருக்கிறான். அதற்கு மூன்று காரணங்கள்: ஒன்று, இரவாகிவிட்டது. இரண்டு, வீட்டில் அப்பம் இல்லை. மூன்று, வழிப்போக்கன் பசியாக இருக்கிறான்.
இந்தக் கையறுநிலையில் அவன் நினைவிற்கு வந்தவன் அவனது அண்டை வீட்டு நண்பன்தான். அந்த நண்பனே நம்பிக்கைக் கீற்றாக ஒளிர்ந்த அந்த நொடியில், இவன் வீட்டை விட்டு எட்டிப் பார்க்கிறான். நண்பனின் வீட்டில் விளக்கு எரியவில்லை. பாவம்! நம்பிக்கை ஒளிர்ந்த அந்த நொடியில் வேகமாக அணைந்துவிடுகிறது.
விளக்கு எரியவில்லை என்றாலும், தன் நண்பன் தூங்கியிருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில், அவனது இல்லத்தைத் தட்டுகிறான் இவன். 'எனக்கு தொல்லை கொடுக்காதே!' - இதுதான் நண்பனின் முதல் வார்த்தைகள். மேலும், 'கதவு பூட்டியாயிற்று, பிள்ளைகள் படுத்திருக்கிறார்கள். நான் தர முடியாது' எனத் திரும்பிப் படுத்துக்கொள்கிறான். எழுந்த விளக்கை ஏற்றினால் விளக்கின் வெளிச்சத்தில் பிள்ளைகள் எழுவார்கள். கதவைத் திறந்தால் அதன் ஓசை அவர்களை எழுப்பிவிடும். 'பிள்ளைகளா?' அல்லது 'நண்பனா?' என்ற குட்டி பட்டி மன்றத்தில், 'பிள்ளைகளே' வெற்றி பெறுகிறார்கள். ஆனால், தட்டியவனின் மனத்தில் இன்னொரு குட்டி மன்றம் ஓடுகிறது: 'நண்பனா?' அல்லது 'விருந்தினனா?' 'விருந்தினன்' வெற்றி பெற்றதால் தொடர்ந்து தட்டுகிறான் கதவை.
அலைபேசியில், புதிதாக வரும் எண் திரும்பத் திரும்ப வந்தால், நாம் எடுத்துப் பேசுவது போல, தட்டிக்கொண்டே இருந்த நண்பனின் தொல்லையின் பொருட்டு எழுந்து அப்பம் கொடுக்கிறான் நண்பன்.
ஆக, 'என் இருத்தல் உனக்கு இல்லை' என்று சொன்ன நண்பன், தொல்லையின் பொருட்டு இவனுக்குத் தன் இருத்தலை இருத்தல் ஆக்குகிறான்.
ஆனால், கடவுள் அப்படி அல்ல. எப்போதும் இருத்தலில் இருக்கிறார்.
நாம் நம்முடைய கையறுநிலையில், நம்பிக்கை என்னும் திரியை ஏற்றிக் கொண்டு அவர் முன் நின்றால், அவர், 'நண்பனா?' 'பிள்ளைகளா?' என்று குட்டி மன்றம் நடத்துவதில்லை. உடனே எழுந்து பதில் கூறுகின்றார். தன் இருத்தலை நமக்கு உறுதி செய்கின்றார்.
இதுவே நம் கடவுளின் நல்லுள்ளம்.
இந்த உவமை நமக்கு கற்பிப்பது என்ன?
(அ) கையறு நிலையில் கடவுளிடம் செல்வது.
(ஆ) தொல்லையின் பொருட்டு அல்ல, நட்பின் பொருட்டு நம் இருத்தலை மற்றவர்களுக்குக் கொடுப்பது.
(இ) விடாமுயற்சியுடன் தட்டிக்கொண்டே இருப்பது.
‘நண்பனா?’ அல்லது ‘பிள்ளைகளா?’ எனும் பட்டிமன்றம் வீட்டுக்கார ரின் மனத்தில் ஓட, ‘நண்பனா?’ அல்லது ‘ விருந்தினனா?’ எனும் பட்டிமன்றம் கதவைத் தட்டியவனின் மனத்தில்.’ என் இருத்தல் உனக்கு இல்லை’ என்ற காரணமா இல்லை தந்தை பட்டியலிட்டுள்ள காரணங்களா? எது வீட்டுக்காரன் உதவுவதிலிருந்து அவனைத்தடுத்திருந்தாலும் இறுதியில் அவன் உதவுகிறான்...அது தொல்லையின் நிமித்தமாகவே இருந்திருப்பினும் கூட.இந்த இடத்தில் அந்த வீட்டுத்தலைவனை நான் ‘ கையறு நிலையில் கரங்கள் நீட்டிய கடவுளாகவே’ பார்க்கிறேன்...காரணம் கடவுளும் பல சமயங்களில்,பல காரணங்களுக்காக நம் தேவைகளைக் காலம் தாழ்த்தியே நிறைவேற்றுவதையும் பார்க்கிறோம். ஆனாலும் இறுதியில் தந்தையின் “ கையறு நிலையில் கடவுளைத்தேடவும், நம்மிடம் உதவி நாடி வருபவர்களுக்கு தொல்லையின் பொருட்டல்ல.....நட்பின் பொருட்டு உதவி செய்யவும், நமக்கு கதவு திறக்காத கையறு நிலையிலும் நாம் கதவை விடாமல் தட்டிக்கொண்டிருப்பதும்” எனும் விஷயங்கள் இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.கடவுள் காலம் தாழ்த்தினாலும் அது நமது நன்மைக்காக இருக்குமேயன்றி நம்மைத் தொல்லையாக நினைப்பதால் அல்ல.ஏனெனில் நம் கடவுளின் உள்ளம் ‘நல்லுள்ளம்’ எனும் தந்தையின் வார்த்தைகள் அழகாக நிறைவு செய்கின்றன இந்தப்பதிவை.
ReplyDeleteஆனாலும பதிவின் ஆரம்பத்தில் நமக்கு வரும் தொலைபேசி அழைப்பை தொல்லையாக நினைப்பவர்கள் எப்படியெல்லாம் அதைத் தட்டிக்கழிக்கலாம் என்பதற்கான பல வழிகள் என்னைப்போல விஷயம் தெரியாதவர்களுக்குக்கூட “ ஓ! இப்படியெல்லாம் கூட இருக்குமோ?” என்று ஒரு நெருடலைத்தருகிறது. கதவைத் திறந்தால் தானே தெரியும் தட்டுபவர் வந்தது தொல்லை தரவா இல்லை துணை நிற்கவா என்று! நம் உள்ளத்தையும் கூட கொஞ்சம் திறந்த வீடாகவே வைத்திருக்கும் உள்ளம் கேட்போமே இறைவனிடம்!
நிறைய விஷயங்கள்....நிறைய குழப்பங்கள்.....இறுதியில் தெளிவான கருத்துக்கள்.தந்தைக்கு நன்றிகளும்! பாராட்டும்!!!