Saturday, October 17, 2020

அதிகார வரையறை

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

I. எசாயா 45:1,4-6
II. 1 தெசலோனிக்கர் 1:1-5
III. மத்தேயு 22:15-21

அதிகார வரையறை

நம் தமிழகத்தில் கோவித்-19 பெருந்தொற்று உச்சத்தைத் தொட்டுக்கொண்டு, தொற்று மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகிக்கொண்டிருந்த நாள்களில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், 'கொரோனா எப்போது முடிவுக்கு வரும்?' என்ற கேள்வி, நம் முதல்வர் அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அது கடவுளுக்குத்தான் தெரியும்!' என்றார் அவர்.

'அது கடவுளுக்குத்தான் தெரியும்!'

- இந்த வார்த்தைகள் சமூக ஊடகங்களில் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டன. 'கடவுளுக்குத்தான் தெரியும்' என்றால், 'நீங்கள் ஏன் முதல்வராய் இருக்கிறீர்கள்?' என்றும், 'கடவுள் பார்த்துக்கொள்வார்' என்றால், 'அரசு எதற்கு இருக்கிறது?' என்ற நிறைய வினாக்கள் கேலிச்சித்திரங்களாய்த் தொடுக்கப்பட்டன. இன்னும் சிலர், 'மதச்சார்பற்ற நாட்டில் வாழும் நம் முதல்வர், மதம் சார்ந்த சிந்தனையைப் பத்திரிக்கையாளர்களிடம் பகிரலாமா?' என்றச் சட்டச் சிக்கலையும் எழுப்பினர்.

மேற்காணும் விமர்சனங்களும் வினாக்களும் தங்களுக்குள் ஒளித்திருக்கும் செய்தி என்ன? 'நம்மால் அல்லது மனிதர்களால் அல்லது அரசால் எல்லாம் முடியும்' என்பதுதான்.

ஆனால், முதல்வர் அறிந்து சொன்னாரோ, அறியாமல் சொன்னாரோ, அவரின் கூற்றே அறிவார்ந்த கூற்று.

'அரசு மருத்துவமனையை ஏற்பாடு செய்யலாம். ஆனால், நலம் தர முடியாது'

'அரசு ஆம்புலன்சில் அவசரமாக நோயுற்றவரைக் கொண்டு வந்து சேர்க்கலாம்.ஆனால், உயிர் தர முடியாது'

'அரசு மருந்து மாத்திரைகள் தரலாம். ஆனால், நலம் தர முடியாது'

எந்தவொரு அதிகாரத்திற்கும் வரையறை இருக்கிறது என்று நினைவூட்டுகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

திருமண உறவில் இருக்கும் கணவன் தன் மனைவியிடம் அதிகாரம் செலுத்தலாம். மாற்றானின் மனைவி மேல் அதிகாரம் செலுத்த முடியாது.

அருள்பணிப் பயிற்சிப் பாசறையில் இருக்கும் நான், அல்லது பேராசிரியப் பணி செய்யும் நான் என் மாணவர்களிடம் என் பாடத்தின் தொடர்பாகத்தான் அதிகாரம் செலுத்த முடியுமே தவிர, இன்னொரு பாடம் தொடர்பாக வேறு மாணவர்களிடம் அதிகாரம் செலுத்த முடியாது.

என் வளாகத்திற்குள் என் அதிகாரம் செல்லும். வளாகம் தாண்டிவிட்டால் எனக்கு அதிகாரம் இல்லை. ஒரு பங்குத்தந்தையின் அதிகாரம் அவரது பங்கு எல்கை வரைதான். ஓர் ஆயரின் அதிகாரம் அவரது மறைமாவட்ட எல்கை வரை மட்டுமே. ஒரு முதல்வரின் அதிகாரம் அவரது மாநிலத்தின் எல்கை வரை மட்டுமே. ஒரு பிரதமரின் அதிகாரம் அவரது நாட்டில் மட்டுமே. நம் பிரதமர் நம்மேல் நிறையச் சட்டங்களைத் திணிக்கலாம். ஆனால், மற்றொரு நாட்டில் அவரால் ஒன்றும் செய்ய இயலாது.

ஆக, 

ஒன்று, நான் எந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் என் அதிகாரம் வரையறை கொண்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு, எல்லா அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்று கண்டுகொள்ள வேண்டும்.

மூன்று, மனித அதிகாரத்தை மதிக்கவும், இறை அதிகாரத்திற்கு என்னையே சரணாகதி ஆக்கவும் வேண்டும்.

திருப்பாடல் 127 இதை உருவகமாகச் சொல்கிறது:

'ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்' (திபா 127:1)

கட்டடம் கட்டுவோர் எந்த அளவுக்குத் தன் பணியில் நேர்த்தியாக இருந்தாலும், கட்டடம் எழுவது ஆண்டவராலேயே!

நகரைக் காப்போர் எந்த அளவுக்கு விழிப்பாய் இருந்தாலும் நகரம் காக்கப்படுவது ஆண்டவராலேயே!

இந்தத் தெளிவு நமக்குக் கிடைத்துவிட்டால், அல்லது என் வரையறையைத் தாண்டிய செயல்கள் இருக்கின்றன என நான் உணர்ந்துகொண்டால் நான் ஞானம் பெற்றவன் ஆவேன். ஆனால், பல நேரங்களில் என்னால்தான் எல்லாம், எனக்காகத்தான் எல்லாம், என் அதிகாரத்திற்குள்தான் எல்லாம் என்ற மனநிலையில் நான் இருக்கும்போது, எனக்கு மிஞ்சுவது ஏமாற்றமும் விரக்தியும் சோர்வுமே.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 45:1,4-6), இரண்டாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களை ஆற்றுப்படுத்தும், நம்பிக்கை தரும் பகுதி இது (எசா 44:24 - 45:8). இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவில் அனுபவித்த சிறைவாசமும், நாடுகடத்தப்பட்ட நிலையும், பாரசீக அரசர் சைரஸ் அவர்களால் நிறைவுக்கு வருகிறது. கிமு 539இல் பாபிலோனியாவை வெற்றிகொள்ளம் சைரஸ், சிறையில் இருக்கும் அனைவரும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்ற ஆணை பிறப்பிக்கின்றார் (காண். 2 குறி 36:22-33). எசாயாவைப் பொருத்தவரையில், கடவுளே சைரஸ் அரசரில் செயலாற்றுகிறார். அல்லது, நெபுகத்னேசர் அரசரைக் கொன்று இஸ்ரயேலைக் காயப்படுத்திய கடவுள், சைரஸ் அரசரைக் கொண்டு அக்காயத்திற்கு மருந்திட்டுக் குணமாக்குகிறார். ஆக, நெபுகத்னேசர் மக்களை அடிமைப்படுத்தினாலும் அவரது அதிகாரம் வரையறைக்கு உட்பட்டதே. ஏனெனில், அவருக்கு எதிராகக் கடவுள் சைரஸ் அரசரை எழுப்புகிறார். சைரஸ் அரசரை எசாயா, 'ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்' என அழைக்கிறார். 'திருப்பொழிவு செய்யப்படுதல்' என்பது இஸ்ரயேல் மக்களின் அரசர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். ஆனால், சைரஸ் அரசர் இஸ்ரயேல் மக்களை அவர்களது அடிமைத்தளையிலிருந்து விடுவித்ததால், 'யாக்கோபை முன்னிட்டும் கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஊழியராக' அவர் மாறுகின்றார். 

ஆனால், இது சைரஸ் அரசருக்கே தெரியாது. ஆகையால்தான், 'நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்' என்றும், 'நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்' என்றும் ஆண்டவர் சொல்கின்றார். இது நமக்குச் சொல்வன இரண்டு: ஒன்று, வரலாற்று நிகழ்வுகள் அனைத்தின் காரணர் கடவுள் ஒருவரே. இரண்டு, நம்மை அறியாமலேயே கடவுள் நம்மைப் பயன்படுத்திச் செயலாற்ற வல்லவர்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 தெச 1:1-5), புனித பவுல் தெசலோனிக்கத் திருஅவைக்கு எழுதிய திருமடலின் வாழ்த்து மற்றும் முன்னுரைப் பகுதியாக அமைந்துள்ளது. புதிய ஏற்பாட்டில் முதன்முதலாக எழுதப்பட்ட (கிபி 51) இந்நூலை, பவுல், கொரிந்து நகரிலிருந்து எழுதுகிறார். தெசலோனிக்கத் திருஅவை என்பது மாசிதோனியாவில் உள்ள ஒரு குழுமம். இந்தக் கடிதத்தின் அமைப்பே பவுலின் மற்றக் கடிதங்களிலும் காணப்படுகின்றன. தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தல் மற்றும் இயக்கம் குறித்துக் கடவுளுக்கு நன்றிகூறுகிறார் பவுல். 'உங்கள் அனைவருக்காகவும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்' என்னும் பவுலின் வார்த்தைகள், தெசலோனிக்கத் திருஅவையை ஒரே குழுமமாக இணைத்தது இறைவன்தான் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதை முன்வைக்கின்றன. மேலும், 'செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கை, அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள நம்பிக்கை' என இறைமக்களின் மதிப்பீடுகளையும், நற்பண்புகளையும் பாராட்டுகின்றார். ஆக, தெசலோனிக்கத் திருஅவையின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் காரணம் தான் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வதோடு, அவற்றுக்குக் காரணம் இறைவன் என்றும், இறைமக்கள் என்றும் அறிக்கையிடுகிறார் பவுல்.

தன்னை அவர்களுடைய அதிகாரி அல்லது பொறுப்பாளர் நிலையில் முன்வைக்காமல், சகோதரராக முன்வைக்கின்றார். அவர்களுடைய நம்பிக்கை அனைத்தின் ஊற்று ஆண்டவர் என்பதை மிக உறுதியாக ஏற்றுக்கொள்கின்றார். ஏனெனில், ஆண்டவரில் வேரூன்றியிருப்பதாலேயே அவர்களது நம்பிக்கை, 'தூய ஆவி தரும் வல்லமையோடு விளங்கியது' என்கிறார்.

நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 22:15-21) பாடச் சூழல் எருசலேமில் இயேசு. வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்தபின், அவருடைய உவமைப் பொழிவு முடிந்து, நான்கு குழுவினர் அவரை வௌ;வேறு கேள்விகளால் சோதிப்பதாக மத்தேயு பதிவு செய்கின்றார். அவ்வகையில், பரிசேயர்கள், ஏரோதியர்கள் சிலரோடு இணைந்து, அவரைப் பேச்சில் சிக்கவைக்குமாறு அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்புகின்றனர்: 'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?' இது ஒரு சிக்கலான கேள்வி. ஏனெனில், 'ஆம்' என்றாலும், 'இல்லை' என்றாலும் இயேசுவுக்கு ஆபத்து. அவர்களின் தீய நோக்கத்தை அறிகின்ற இயேசு, 'வெளிவேடக்காரரே' என அவர்களை அழைத்து, 'வரி செலுத்துவதற்கான நாணயம் ஒன்றைக் கொடுங்கள்' என்று கேட்க, அவர்களும் நாணயம் ஒன்றைக் கொடுக்கின்றனர். அதில், 'இறைவனான அகுஸ்து பேரரசரின் மகன் திபேரியு' என எழுதப்பட்டுள்ளது. கடவுள் வாக்களித்துக் கொடுத்த நாட்டில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அல்லது யூதர்கள், தங்களின் கைகளிலும் பைகளிலும் உரோமை அரசின் நாணயத்தை, அதுவும், 'இறைவனான அகுஸ்து' என்னும் எழுத்துகள் கொண்ட நாணயத்தை வைத்திருப்பது சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. 'நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே' என அன்றாடம் செபித்துவிட்டு (காண். இச 6:4), இன்னொருவரை இறைவன் எனக் கொண்டாடுவது தவறு என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்ற இயேசு, 'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' எனக் கூறுகிறார். 

இப்படிச் சொல்வதன் வழியாக, உரோமைப் பேரரசின் அரசாட்சியை ஏற்றுக்கொள்வதோடு, உரோமைக்கு வரி செலுத்துவதை ஏற்றுக்கொள்வதோடு, 'சீசருக்கு உரியது அவருடைய நாணயமே தவிர வேறு அல்ல!' என்பதையும் ஆணித்தரமாகச் சொல்கின்றார். மேலும், சீசருக்கு உரிய நாணயத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, 'கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்' - அதாவது, 'உங்கள் நல்வாழ்வு, நற்செயல், நற்பண்பு, ஆற்றல், அன்பு, வலிமை அனைத்தையும் ஆண்டவருக்குக் கொடுங்கள்' என்கிறார். இப்படிச் சொல்வதன் வழியாக, சீசருக்கு உரியதையும் தாண்டியவை இருக்கின்றன என்றும், சீசர் ஒருபோதும் இறைவன் அல்லர் என்றும், இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டதே அனைத்து அதிகாரம் என்றும் ஒருசேர உணர்த்துகிறார். சீசர், பாலஸ்தீனம் அல்லது எருசலேமின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலைக் கட்டுப்படுத்தலாமே தவிர, மனித வாழ்வையும், மனித இலக்கையும் கட்டுப்படுத்த அவரால் இயலாது. ஆக, மனித அதிகாரம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டதே. 

எப்போது மனித அதிகாரம் தன் வரையறையை மீற நினைக்கிறதோ, அப்போது அங்கே குழப்பமும் அழிவும் ஏற்படுகின்றன. ஏதேன் தோட்ட நிகழ்வு இதற்கு நல்ல சான்று. எல்லா இடத்திலிருந்தும் அணுகக் கூடிய இடத்தில் ஒரு மரத்தை வைக்கின்ற ஆண்டவராகிய கடவுள், அந்த மரத்தை மனிதன் அணுகக் கூடாது என்ற வரையறையை வைக்கின்றார் (காண். தொநூ 2-3). மனிதர்கள் அந்த வரையறையை மீறிய அந்த நொடியில், அவர்கள் தோட்டத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள், சகோதரன் தன் சகோதரனைக் கொலை செய்கிறான், பாலியல் பிறழ்வு ஏற்படுகிறது, வன்முறையும் பாவமும் பெருக்கெடுக்கிறது. தங்களது அதிகாரமும் தெரிவும் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை நம் முதற்பெற்றோர் மறந்துவிட்டனர்.

ஆக,

இன்றைய முதல் வாசகத்தில், சைரஸ் அரசரின் செயல்பாடு கடவுள் வரையறுத்ததாக இருக்கின்றது.

இரண்டாம் வாசகத்தில், தெசலோனிக்க நகர இறைமக்களின் நம்பிக்கையின் ஊற்று ஆண்டவரின் அதிகாரம் என ஏற்று, அவர்களோடு இணைந்து இறைவனிடம் சரணடைகின்றார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், சீசரின் அதிகார வரையறையைத் தெளிவுபடுத்துகின்ற இயேசு, கடவுளின் அதிகாரத்தை மனிதர்கள் ஒருபோதும் மீற முடியாது என்றும், கடவுளுக்கு உரியதைக் கொடுப்பதில் சமரசம் அறவே கூடாது எனவும் அறிவுறுத்துகின்றார்.

இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'வானத்துல இருந்து குதிச்சவன் மாதிரி பேசுறான் அல்லது நடக்கிறான்!' என்ற சொலவடையை நாம் கேட்டதுண்டு. அதாவது, வானத்தில் இருந்து மட்டும்தான் அதிகாரம் வர முடியும். இயேசுவும் இதைப் பிலாத்திடம் தெளிவுபடுத்துகின்றார். 'உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு. உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்று கேட்ட பிலாத்துவிடம், 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்று சொல்லி (காண். யோவா 19:10-11), பிலாத்துவின் அதிகார வரையறைத் தெளிவுபடுத்துகிறார் இயேசு.

இன்று, நாம் அனைவரும் நம்மையே 'இறைமகனாக்கிக் கொண்டு' அதிகாரம் செலுத்துவதே நம் பிரச்சினை. முதுமை, நோய், இறப்பு ஆகியவற்றின் முன் நம் அதிகாரமற்ற நிலையை நாம் மறந்துவிடுவதோடு, நாட்டிலும், சமூகத்திலும், பங்குத்தளத்திலும், குடும்பத்திலும் நாம் அதிகாரம் செலுத்துகிறோம்.நம் அதிகாரத்தின் ஊற்று இறைவன். அவரின் அதிகாரத்திற்குத் தன்னைக் கீழ்ப்படுத்தாத எவரும் மற்றவர்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. இதையே, 'மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 96).

1 comment:

  1. நான் எத்தனை பெரிய கொம்பனாக இருப்பினும் என்னைப்பற்றிய அத்தனையும் ஒரு வரையறைக்குட்பட்டதே எனும் உண்மையைக் ‘ கொரோனா’ கால அனுபவங்களின் வழியாகவும்,இன்றைய வாசகங்களின் வழியாகவும் எடுத்து வைக்கிறார் தந்தை. வரலாற்று நிகழ்வுகள் அனைத்தின் காரணமும் கடவுளே என்று சொல்லும் ஏசாயாவின்முதல் வாசகமும்,தன்னை பொறுப்பாளர் நிலையில் முன்வைக்காமல் ஒரு சகோதர நிலைக்கு தன்னைத் தாழ்த்தி, அவர்களது நம்பிக்கை அனைத்திற்கும் ஊற்று ஆண்டவர் என சத்தமிட்டுக் கூறும் பவுலடியாரின் இரண்டாவது வாசகமும், “சீசருக்கு உரியது நாணயமே அன்றி வேறு அல்ல; ஆனால் அனைத்தையும் தாண்டி நிற்பவர் இறைவன்” எனும் நற்செய்தி வாசகமும் நம் வாழ்வை சீர்படுத்த வரும் வரிகள்.
    மறையுரையின் தொடக்கத்தில வரும் “ ஆண்டவரே வீட்டைக்கட்டவில்லையெனில்,அதைக்கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக்காக்கவில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்” எனும் வரிகள் நம் பிறப்பு,இயக்கம் மற்றும் இறப்பு அனைத்திற்குமே காரணர் இறைவனே என ஓங்கி உரைக்கின்றன. “அவராலேயே எல்லாம்” என்பதைக்குறிக்கும் “ மாட்சியையும்,ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்” எனும் திருப்பாடலோடு முடியும் அழகானதொரு மறையுரைக்காகத் தந்தைக்குப் பாராட்டும்,ஞாயிறு வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete