Thursday, February 1, 2018

இருவர் இருவராக

நாளைய (1 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 6:7-13)

இருவர் இருவராக

இயேசு பன்னிரு திருத்தூதர்களை அனுப்பும் நிகழ்வில் அவர் இருவர் இருவராக திருத்தூதர்களை அனுப்புவது ஏன் என்பது உறுதியிட்டுக்கூற முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதைப் புரிந்துகொள்ள சபை உரையாளராய் நாம் துணைக்கு அழைத்துக்கொள்வோம்:

'தனிமனிதராய் இருப்பதைவிட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால் அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். ஒருவர் விழுந்தால் அடுத்தவர் அவரைத் தூக்கிவிடுவார். தனிமனிதராய் இருப்பவர் விழுந்தால் அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும் ... ... தனிமனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.' (சஉ 4:9-12)

இன்று நாம் அடுத்தவரோடு இருப்பதைவிட தனிமையாய் இருக்கவே விரும்புகிறோம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். 'அடுத்தவர் ஓர் நரகம்' என்கிறார் சார்த்தர்.

திருத்தூதுப்பணி செல்லும் இடத்தில் மட்டுமல்ல. மாறாக, செல்லும் வழியில் உள்ள உடனிருப்பிலும் வெளிப்பட வேண்டும் என்பதே இயேசுவின் படிப்பினை. இந்த இருவர் இருவர் தங்கள் ஜோடிகளை தாங்களே தேர்ந்துகொண்டார்களா அல்லது இயேசுவே ஜோடியை அமைத்துக் கொடுத்தாரா? - இந்தக் கேள்விக்கும் விடையில்லை.

இன்று இரண்டு கேள்விகளைக் கேட்போம்:

அ. இருவர் இருவராய் சேர்ந்து செல்லும் போது என்னுடைய இலக்கு இறையரசுப்பணியாக இருக்கிறதா?

ஆ. என்னுடன் உடன்வரும் அடுத்தவரை நான் எப்படி ஏற்றுக்கொள்கிறேன்?

2 comments:

  1. இயேசு பன்னிரு திருத்தூதர்களை இருவர்,இருவராய் அனுப்பினார் எனும் செய்தியை உறுதிப்படுத்த தந்தை காட்டும் ' சபையுரையாளர் பகுதி' ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. " கூடி இருப்பது கோடி நன்மை" எனும் பழமொழிக்கு வலு சேர்க்கின்றன இந்த வரிகள்." தனி மனிதனை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும்;.முப்புரிக் கயிறு அறுவது கடினம்" நெஞ்சின் ஆழம் வரை செல்கின்றன இந்த வரிகள்.ஆனால் இவ்வரிகளைத்தொடர்ந்து வரும் தந்தையின் வரிகள். " திருத்தூதுப்பணி செல்லும் இடத்தில் மட்டுமின்றி,செல்லும் வழியில் உள்ள உடனிருப்பிலும் வெளிப்பட வேண்டும்." வாழ்ந்து காட்ட வேண்டிய வார்த்தைகள்! உடல்கள் அருகருகே இருந்து உள்ளங்கள் காத தூரம் இருப்பின் பணியினால் யாருக்கு,என்ன இலாபம் கிட்ட இயலும்? தந்தையின் இறுதிவரிகளின் முதல் கேள்வியை அருட்பணியாளருக்கு விட்டுவிட்டு இரண்டாம் கேள்வியை என்னுடையதாக்க விரும்புகிறேன்.பணித்தளங்களில் என்னுடன் பணி செய்பவர்களை நான் எப்படி ஏற்றுக்கொள்கிறேன்? சிந்திக்க வேண்டிய கேள்வி மட்டுமல்ல; விடை தேட வேண்டிய கேள்வியும் கூட.மற்றபடி " நாம் இன்று அடுத்தவரோடு இருப்பதைவிட,தனிமையில் இருக்கவே விரும்புகிறோம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம்." இது தந்தை போன்ற அறிவு ஜீவிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; சாதாரண மக்களுக்கு அல்ல.மற்றபடி பிறருடனான "உடனிருப்பின்" அழகைச் சொல்லும் தந்தையை மனதாரப் பாராட்டுகிறேன்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete