Friday, February 23, 2018

நல்லோர் மேலும் தீயோர் மேலும்

நாளைய (24 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத் 5:43-48)

நல்லோர் மேலும் தீயோர் மேலும்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விடுக்கும் சவால் சற்றுக் கடினமாக இருக்கிறது.

நண்பர்களுக்கு நட்பு பகைவர்களுக்கு வெறுப்பு என்று காட்டுவதை விட கதிரவன் போல, மழைத் தண்ணீர் போல இருங்கள் என்கிறார் இயேசு. உயிர் மற்றும் உணர்வுகளை விட்டால்தான் இப்படி இருக்க முடியும். உயிரற்ற பொருள்கள்தாம் இப்படி இருக்க முடியும்.

வீட்டுத் தலைவர் திறந்தாலும் திருடன் திறந்தாலும் பீரோ திறக்கிறது.
யார் உட்கார்ந்தாலும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது.
யார் போட்டாலும் கண்ணாடி உடைகிறது.
ஆக, உயிரற்ற இந்த பொருள்கள் அடுத்தவரின் உணர்வு மற்றும் உறவு ஆகியவற்றால் மாறுவதில்லை.

நான் இன்று கார் ஓட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். நான் இப்போதுதான் பழகுகிறேன் என்பதற்காக பிரேக் தானாக விழுமா? இல்லை. நான் தான் பிரேக் போட வேண்டும். ஆக, உயிரற்றவைகளுக்கு எல்லாம் ஒன்றுதான். எல்லாரும் ஒன்றுதான்.

ஆக, நண்பர்கள், பகைவர்கள், எதிரிகள், துரோகிகள், விரோதிகள் என அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டு; என்றால் ஏறக்குறைய உயிர் அற்றவர்களாக, உணர்வு அற்றவர்களாக இருக்க வேண்டும். இல்லையா?

சிலர் சொல்வாங்க. சின்னக் குழந்தைபோல இருத்தல் என்று.

சின்ன குழந்தைகளுக்கும் விருப்பு, வெறுப்புக்கள் இருக்கவே செய்கின்றன. அவைகள் எல்லாரிடமும் ஒரே உணர்வோடு இருப்பதில்லை.

உயிரற்று, உணர்வற்று இருக்கும் அந்த நிலையை இயேசு விண்ணகத்தந்தையின் இயல்பு என்கிறார்.

இன்று ஒருநாள் உணர்வற்று இருக்க முயற்சி செய்துபார்க்கலாமே!

2 comments:

  1. தந்தை உணர்வு பூர்வமாகச் சொல்கிறாரா இல்லை விதண்டாவாதம் பண்ணுகிறாரா... தெரியவில்லை.உயிரற்ற ஜடம்போல இருப்பது நம்மில் பலருக்குப் புதிய விஷயமாக இருக்காது என்றே எண்ணுகிறேன். எத்தனை முறை,எத்தனை பேரால் உதாசீனப்பட்ட நேரங்களில் நாம் விருப்பு,வெறுப்பற்ற ஜடங்களாக இருந்திருப்போம்? கிட்டத்தட்ட இந்நிலை பற்றித்தான் இயேசு கூறுகிறார் என நினைக்கிறேன்.ஒரு லெவலுக்கு மேலே போகும்போது ..அது அன்பாயினும்,வெறுப்பாயினும் நம்மைச் சிறிதும் பாதிக்காது. இந்த நிலையை நாம் பெற்றுவிடின் எல்லாமே ஒன்றுதான்; எல்லோருமே ஒன்றுதான்.நாமும் கூட ஏறக்குறைய கதிரவன் போல, மழைத்தண்ணீர் போல மாறி விடுவோம். இப்பேர்பட்ட உணர்வு விண்ணகத்தந்தையின் உணர்வாய் இருப்பின் இன்று ஒருநாள் மற்றவரின் தூண்டுதல் ..அதுவும் எதிர்மறைத்தூண்டுதல் இல்லாமல் நாமாக முயற்சி செய்து பார்க்கலாமே! கண்டிப்பாக இதில் இன்று என் முயற்சி இருக்கும். தூண்டுகோலான தந்தைக்கு என் நன்றிகள்!

    ReplyDelete