Sunday, February 11, 2018

வாதாட தொடங்கினர்

நாளைய (12 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 8:11-13)

வாதாட தொடங்கினர்

இரண்டு நாள்களுக்கு முன் எம் மறைமாவட்ட குருமாணவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர், 'ஃபாதர் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற டவுட் எப்போ க்ளியர் ஆகும்?' என்று கேட்டார். 'டவுட் இருக்கிற வரைக்கு கடவுளும் இருக்கிறார்' என்று சும்மா சொல்லி சமாளித்தேன்.

'கடவுள் இருக்கிறாரா? இல்லையா?' என்ற கேள்வி நம்முள் இருப்பதுபோல, 'நீர் கடவுளா?' என்று இயேசுவைப் பார்த்துக் கேட்கும் பரிசேயர்கள் உள்ளத்தில் இது வேறுமாதிரியாக இருக்கிறது. 'நீர் கடவுள் அல்லது கடவுள் மகன் என்றால் அடையாளம் காட்டும்' என்று இயேசுவை சோதிக்கத் தொடங்குகின்றனர் பரிசேயர்கள்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு சொல்லாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன:

1. 'இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்'
2. 'அவர் அவர்களைவிட்டு அகன்று மறுகரைக்குச் சென்றார்'

இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. கடவுளோடு நாம் வாதாடத் தொடங்கும்போது, அல்லது வாதாடுதல் தொடரும்போது அவர் நம்மைவிட்டு தூரமாகிக்கொண்டே செல்கின்றார்.

மனிதர்கள் உள்ளத்தில் எழும் இயல்பான நம்பிக்கை போராட்டத்தைப் பற்றியே நாளைய முதல் வாசகமும் (யாக் 1:1-11) பேசுகின்றது.

'கடவுளோடு வாதாடுதல்' ஒரு பக்கம் இருக்க, இன்று நாம் கடவுளுக்காக வாதாடவும் தொடங்கிவிட்டோம் - எந்தக் கடவுள் உண்மையானவர்? என்பது போன்ற வாதங்கள்.

இன்று நான் கடவுளோடு வாதாடும் தருணங்கள் எவை?
நான் மகிழ்ந்திருக்கும்போது இருக்கும் கடவுள் நம்பிக்கை நான் வாடியிருக்கும்போது வாடிவிடுவது ஏன்?
எப்போதெல்லாம் கடவுள் என்னிடமிருந்து தப்பி மறுகரைக்குச் செல்கின்றார்? அல்லது அவர் அப்படி செல்வதாக நான் உணர்கிறேன்?

2 comments:

  1. " கடவுளோடு நாம் வாதாடத்தொடங்கும்போது,அல்லது வாதாடுதல் தொடரும்போது அவர் நம்மை விட்டுத் தூரமாகிக்கொண்டே செல்கின்றார்"... இது தந்தையின் வாதம்.ஆனால் நான் வேறுவிதமாக நினைக்கிறேன்.ஒருவரை நாம் வேண்டாமென்று நினைத்துவிட்டால் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டிவிடலாம்.ஆனால் ஒருவர் நமக்கு வேண்டும் என்று நினைக்கும் போதுதான் நம் மனத்தில். போராங்களும்,தர்க்கங்களும், கேள்விகளும் நம்மை அலைக்கழிக்கின்றன. கலங்கிய குட்டையில் மட்டுமே மீன் பிடிக்க முடியும்.ஆகவே வாதாடுவதில் தப்பில்லை என்றே எண்ணுகிறேன்.ஆனாலும் தந்தையின் பின்பகுதியை மறுப்பதற்கில்லை." நான் மகிழ்ந்திருக்கும்போது இருக்கும் கடவுள் நம்பிக்கை நான் வாடியிருக்கும் போது வாடிவிடுவது ஏன்?" மலர்வதும்,பின் வாடுவதும் இயற்கையின் நியதி" மனத்தில் .தோன்றுவதை ஏன்,எதற்கு என்ற கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் அதுவே நம் நம்பிக்கை வளர்வதற்கு வித்திடும் என்பது என் அனுபவம்.சிந்திக்கத் தூண்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. கடவுளோடு நாம் வாதாடத் தொடங்கும்போது, அல்லது வாதாடுதல் தொடரும்போது அவர் நம்மைவிட்டு தூரமாகிக்கொண்டே செல்கின்றார்

    //பின்றீங்களே சாமி

    ReplyDelete