Saturday, February 3, 2018

அக்கறையும், பரிவும்

நாளைய (3 பிப்ரவரி 2018) நற்செய்தி வாசகம் (மாற்கு 6:30-34)

1. நற்செய்தி வாசகத்தின் மையக்கருத்து என்ன?

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்னும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள்தாம் என் நினைவிற்கு வருகின்றன இன்றைய நற்செய்தியை வாசிக்கும்போது. கடந்த வார நற்செய்திப் பகுதியில் இருவர் இருவராக பணிக்கு அனுப்பப்பட்ட திருத்தூதர்கள், தங்கள் பணிகளை முடித்துவிட்டு, இயேசுவிடம் திரும்புகின்றனர். அப்படித் திரும்பிய அவர்களை ஓய்விற்கு அனுப்புகின்றார் இயேசு. ஆனால், ஓய்வு என்று ஓடியவர்களுக்கு இன்னும் அதிக வேலை வந்து சேர்கிறது. இயேசுவின் தாயுள்ளம் அக்கறையாக தன் சீடர்கள்மேலும், பரிவாக மக்கள்மேலும் விரிகிறது.


2. அக்கறையும், பரிவும்

இன்றைய நற்செய்தியை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. இயேசுவுக்கும், சீடர்களுக்கும் உள்ள உறவு

ஆ. இயேசுவுக்கும், மக்களுக்கும் உள்ள உறவு


அ. இயேசுவுக்கும், சீடர்களுக்கும் உள்ள உறவு

பன்னிருவரை 'திருத்தூதர்கள்' (மாற்கு 6:30) என்று மாற்கு இந்த இடத்தில் மட்டுமே குறிப்பிடுகிறார். 'அப்போஸ்தல்லோ' என்ற வினைச்சொல்லில், அனுப்புபவரும், அனுப்பப்படுபவரும் இருக்கின்றனர். ஒருவர் இல்லாமல் மற்றவர் இருக்க முடியாது. ஆக, அனுப்பப்படுபவர், தன்னை அனுப்பியவரிடம் தன் பணி நிறைவுற்றது அல்லது நிறைவுறவில்லை என்று சொல்வது அவசியம். இது இயேசுவின் திருத்தூதர்களுக்கு மட்டுமல்ல. மாற்கு தன் நற்செய்தியை எழுதியபோது, எண்ணற்ற பேர் தங்களைத் 'திருத்தூதர்கள்' என அழைத்துக்கொண்டு யாருக்கும் 'கணக்குக் கொடுக்காமலேயே' இருந்தனர். தாங்களாகவே, தங்களை திருத்தூதர்கள் என அழைத்துக்கொண்டவர்கள் இவர்கள். இன்று அருட்பணிநிலையில் ஒருவர் அருட்பணியாளராக இருக்கிறார் என்றால், அது அவராகவே ஏற்படுத்திக்கொண்ட ஒன்றல்ல. தன்னை அருட்பணிநிலைக்கு உயர்த்திய ஆயருக்கும், அதற்குச் சான்றாக நின்ற இறைமக்களுக்கும், அவர் கணக்குக்கொடுக்கக் கடமைப்பட்டவர்தானே!

திருத்தூதர்கள் தன்னிடம் திரும்பி வந்தவுடன், அவர்களை ஓய்வெடுங்கள் என பாலைநிலத்திற்கு அனுப்புகிறார் இயேசு. ஓய்வெடுக்க ஒரு கடற்கரைக்கு, அல்லது ஏரிக்கு, அல்லது பழமுதிர்ச்சோலைக்கு அனுப்பினால் பரவாயில்லை. பாலைநிலத்தில் போய் என்ன ஓய்வெடுக்க முடியும்? வெயிலும், மணல்காற்றும், பசியும், வறட்சியும்தான் ஓய்வா? இயேசுவின் பணித்தொடக்கத்தில் அவர் இரண்டுமுறை பாலைநிலத்திற்குச் செல்வதாக மாற்கு எழுதுகின்றார். முதலில், திருமுழுக்கு பெற்றவுடன் (மாற்கு 1:12). இரண்டாவதாக, தன் பணிகள் முடிந்தவுடன் (1:35). இரண்டிலுமே, இவர் மக்களின் குரலைக் கேட்பதிலிருந்து விடுதலை பெற்று, கடவுளின் குரலைக் கேட்கும் ஒரு இடத்திற்குச் செல்கின்றார். ஆக, இயேசு விரும்பும் ஓய்வு என்பது, மக்களின் குரலைக் கேட்பதை விடுத்து, இறைவனின் குரலைக் கேட்பது. 'கேளுங்க! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க!' என்ற பண்பலை விளம்பரமாய் இன்று நம்மைச் சுற்றிலும் ஒரே சத்தம், கூச்சல், அமளி. அமைதியாக இருக்கவும், சத்தங்களைக் கேட்காமல் இருக்கவும் நமக்குப் பயமாக இருக்கிறது. இவ்வளவு நாட்கள் தங்கள் பணியிடங்களில் பிணியாளர்களின் சத்தங்களையும், பேய்பிடித்தவர்களின் சத்தங்களையும் கேட்ட திருத்தூதர்கள் இன்று கடவுளின் குரலைக் கேட்க வேண்டும் என்று சொல்லி அவர்களை பாலைநிலத்திற்கு அனுப்புகின்றார் இயேசு.

'உண்பதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லை' என்ற வாக்கியம் திருத்தூதர்கள் எவ்வளவு 'பிஸியாக' இருந்தார்கள் என்பதைக் குறிக்கிறது.

இயேசுவின் தாய்மையுள்ளம், ஒரு சகோதரனுக்கு உரிய அக்கறையாக வெளிப்படுகிறது. தன் திருத்தூதர்களை மட்டும் அனுப்பாமல் தானும் உடன் செல்கின்றார் இயேசு.

ஆ. இயேசுவுக்கும், மக்களுக்கும் உள்ள உறவு

இயேசுவும், அவருடைய சீடர்களும் 'அதிகம் தேடப்படுபவர்களாக' இருக்கின்றனர். அவர்களை தூரத்திலேயே அடையாளம் காண்கின்றனர் மக்கள். அடையாளம் காணும் மக்கள், கால்நடையாகவே ஓடி அவர்களுக்கு முன் செல்கின்றனர். அவர்களுக்காக காத்திருக்கின்றனர். இந்த மக்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது என் 21ஆம் நூற்றாண்டு மூளை. இவர்கள் இன்று என்னைப் பார்த்து, 'வேறு என்ன வேலை ஐயா இருக்கிறது?' என்று கேட்பார்கள். ஆக, இயேசுவைத் தேடுவதை மட்டுமே தங்கள் முழுநேர வேலையாக வைத்திருக்கின்றனர் இந்தச் சாதாரண மக்கள். ஏன் இயேசுவைத் தேடுகிறார்கள்? அவர்களுக்கு ஏரோது அரசன் இல்லையா? அல்லது பலி செலுத்தி பாவ மன்னிப்பு வழங்கும் தலைமைக்குரு இல்லையா? வேறு என்னதான் இல்லை? எல்லாம் இருந்தது. ஆனால் ஒன்றும் சரியாக இல்லை. உழைத்ததை எல்லாம் வரியாகக் கொடுத்துவிட்டனர் ஏரோதுக்கு. எஞ்சியதை 'காணிக்கை' என பிடுங்கிக் கொண்டார் தலைமைக்குரு. இனி தங்களிடம் இருந்ததது தங்கள் நிர்வாணமும், அந்த நிர்வாணத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த நம்பிக்கையும்தான். அந்த வெளிச்சத்தில் இயேசுவைத் தேடுகின்றனர். 

இயேசுவும் அவர்களின் நிலையை நன்கு புரிந்து கொள்கின்றார். அரசியல் ஆயன் ஏரோதும் அவர்களுக்கு இல்லை, சமயத்தின் ஆயன் தலைமைக்குருவும் அவர்களுக்கு இல்லை என்று அவருக்குத் தெரிந்ததால்தான் 'ஆயனில்லா ஆடுகள்போல' அவர்கள் நிற்பதைக் கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்கின்றார்.

நான் அடுத்தவரைப் பார்க்கும்போது, இப்படிப் பார்க்கும் மனநிலை எனக்கும் இருந்தது என்றால் எத்துணை நலம்!

3. இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்வது என்ன?

அ. ஓய்வு என்பது தனிமைத்தவம். இயேசு தரும் ஓய்வு என்பது தனிமை. 'உணவு என்பது எப்படி உடலுக்கோ, தனிமை என்பது அப்படி உள்ளத்துக்கு' என்பார் அரிஸ்டாட்டில். இயேசு காட்டுகின்ற ஓய்வு என்பது தனிமைத்தவம். கூட்டத்தின் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மைப் பற்றி நாம் நினைப்பதில்லை. கூட்டத்தின் இரைச்சலில் நம் மனம் பேசும் மெல்லிய வார்த்தைகள் நமக்குக் கேட்பதில்லை, நாம் கேட்கவும் விரும்புவதில்லை. ஆனால் தனிமையில்தான் நாம் நம்மையே பார்;க்கின்றோம். தனிமை நம்மைப் பார்த்து 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேள்வி கேட்கின்றது. நம்மால் பதில்சொல்ல முடிவதில்லை. ஆகையால் இந்தத் தனிமையை நமக்குப் பிடிப்பதில்லை. ஓய்வு என்பது நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்கின்ற ஒரு நிலை. தனிமைத்தவத்தில்தான் இது சாத்தியமாகின்றது.

இயேசு குறிப்பிடும் தனிமை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு (டழநெடiநௌள) அன்று. மாறாக, நாம் தேர்ந்துகொள்கின்ற தனிமை (யடழநெநௌள). நாம் யார்? நம் வாழ்வின் குறிக்கோள் என்ன? நம் உறவுகளின் அர்த்தம் என்ன? என்ற கேள்விகளை நாம் தனிமையில் கேட்டால்தான் மக்கள்கூட்டத்தோடு, உலகத்தோடு, உறவுகளோடு நம்மால் வாழ முடியும். தனிமையை அனுபவித்த மனிதனால் மட்டுமே வாழ்வை எதிர்கொள்ள முடியும்.

விக்டர் பிராங்கிள் என்ற யூத எழுத்தாளர் இந்த உலகமே வியக்கின்ற 'ஆயn'ள ளுநயசஉh கழச ஆநயniபெ' என்ற நூலைப் படைக்கின்றார். இந்தப் படைப்பு முழுவதுமே அவர் குறிப்பிடுவது என்னவென்றால் ஹிட்லரின் வதைமுகாமிற்குள் இருந்த தனிமையில்தான் என் வாழ்வின் அர்த்தம் நான் கண்டேன் என்பதுதான். தனிமையில்தான் நாம் ஓய்ந்திருக்கின்றோம். நாம் நாமாக இருக்கின்றோம்.

ஆ. ஆயனில்லா ஆடுகள்போல

உணவு இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல், வழிநடத்துதல் இல்லாமல் (காண். திபா 23) யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஆயனில்லா ஆடுகள்போல இருப்பவர்கள். ஒருசிலர் பிறப்பிலேயே அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இயற்கைச் சீற்றம் மற்றும் பேரழிவால் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். இன்னும் சிலர் சமூகத்தின் அநீதியால், தங்கள் சக உதரங்களின் தவறான அணுகுமுறையால், சுயநலத்தால் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். மேலும் சிலர் தங்களுக்கு எந்த ஆயனும் தேவையில்லை என்று தாங்களாகவே முடிவெடுத்துக்கொண்டு, ஆயனில்லா நிலையை தங்கள் உரிமையாகவும், சுதந்திரமாகவும் அறிக்கையிடுகின்றனர். இவற்றில் எந்த நிலையிலும் ஆபத்து என்னவோ ஆடுகளுக்குத்தான்.

இ. பரிவு

பரிவு என்பதை சில நேரங்களில் இரக்கம் என நாம் மொழிபெயர்த்துவிடுகிறோம். இரண்டும் வேறு வேறு. இரக்கம் என்பது வெறும் உணர்வு. ஆனால் பரிவு என்பது செயல்பாடுடன் கூடிய உணர்வு. எனக்கு அடுத்திருப்பவரின் வீட்டில் இருக்கும் மாணவன் மேற்படிப்பிற்கு பணமில்லாமல், கூலி வேலைக்குப் போவதைக் கேள்விப்பட்டு, 'ஐயோ! பாவம்!' என்று நான் சொன்னால், நான் அவன்மேல் இரக்கம் காட்டுகிறேன். ஆனால், அவனுக்குப் பணம் கொடுத்து அவனை நான் கல்லூரிக்கு அனுப்பினால் நான் அவன்மேல் பரிவுகொள்கிறேன் என அர்த்தம். இயேசுவின் பரிவு அவர் மக்களுக்குக் கற்பித்தலிலும் (6:34), அவர்களுக்கு உணவு கொடுத்தலிலும் (6:35-43) அடங்கியிருக்கிறது.


இன்று வாழ்க்கை ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்திப் பார்ப்போம். நமது கனவு, நமது குழந்தைகள், நமது குடும்பம். இவைகளுக்காகத்தானே இந்த ஓட்டம். 
திடீரென்று ஒருநாள் நாமே நிறுத்தப்பட்டாலன்றி ஓடிக்கொண்டேயிருந்தால் அது 'வேகமாகப் போகவேண்டும் என்பதற்காக பெட்ரோல் கூட போடாமல் வண்டி ஓட்டத் துணிவது' போன்றது.


4 comments:

  1. ஒவ்வொரு முறையும் இந்த " ஆயனில்லா ஆடுகள் போல" எனும் வார்த்தை என் செவிகளில் விழும்போதும் அது என்னைக் கலங்கடித்திருக்கிறது என்பது உண்மை.சிறு வயதிலேயே பல இழப்புக்களைச் சந்தித்தன் காரணமாகக் கூட இருக்கலாம்.இப்படிப்பட்ட 'ஆடுகளைப்' புரிந்து கொள்ள தாயுள்ளம் கொண்ட ஒருவரால் மட்டுமே முடியும்.அதைத்தான் தந்தை " பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து" எனும் மாணிக்கவாசகத்தின் வார்த்தைகள் மூலம் விளக்குகிறார் .இறை இயல்பில் தன் சீடர்கள் எப்பொழுதும் செபித்தலின் வழியே தன் தந்தையுடன் இணைந்திருக்க வேண்டுமென நினைக்கும் இயேசு,மனித இயல்பில் அவர்களது பசி,களைப்பு போன்ற விஷயங்களையும் கண்டுகொள்ளத்தவறவில்லை.நாம் வாழும் இந்த உலகின் சந்தடிகளுக்கு மத்தியில் நாமாக விரும்பி ஒரு பாலைவனத்தின் தனிமையைத்தேடினால் ஒழிய 'அவ்ர்' குரல் கேட்பது சாத்தியமில்ல என்கிறார் தந்தை.உண்மைதான்...நம் ஓட்டத்தைக் கொஞ்சம் நிறுத்தி சுற்றுமுற்றும் பார்ப்போம்; கண்களைத்திறப்போம்; நம் பரிவைப்பலரோடு பகிர்ந்து கொள்வோம்; அவரின் பரிவுக்கும் அக்கறைக்கும் நம்மைத் தகுதியுள்ளவராக்குவோம்.....
    தந்தைக்கு ஒரு வார்த்தை.... பரிவுக்கும் இரக்கத்திற்குமிடையே உள்ள நூலிடை வித்தியாசத்தை விளக்கியுள்ள வித்த்திற்கு என் நன்றிகள் ! தன்னைச்சார்ந்துள்ள மக்களின் நலனில் அக்கறை கொண்டு இத்தனை வேலைகளுக்கும்,பல இன்னல்களுக்கு மத்தியிலும் இறையரசைத் தங்களின் எழுத்து மூலம் தவறாமல் எடுத்துச்செல்லும் உங்களையும் நான் இன்னொரு ' மாணிக்க வாசகராகத்தான்' பார்க்கிறேன்வாழ்த்துக்கள்! இறைவனின் அத்தனை அருளும். தங்களை வந்தடைய என் செபங்களையும் உரித்தாக்குகிறேன்.!!!

    ReplyDelete