Sunday, February 4, 2018

அவர் இன்னாரென்று கண்டுணர்ந்து

நாளைய (5 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 6:53-56)

அவர் இன்னாரென்று கண்டுணர்ந்து

நாளைய நற்செய்தியில் கரைக்கு அந்தப்பறம் இயேசு சென்றபோது நடந்த நிகழ்வை வர்ணிக்கின்றார் மாற்கு.

'இயேசு இன்னாரென்று கண்டுணர்ந்து' மக்கள் அவரிடம் ஓடி வருகின்றனர். தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டுகின்றனர். கொத்து கொத்தாக மக்கள் அவரைத் தேடுகின்றனர்.

இயேசுவின் வெளிப்புற அடையாளமா?

அல்லது

அவர்களின் தனிப்பட்ட அனுபவமா?

எதை வைத்து அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டனர்?

இயேசுவின் சமகாலத்தில் இயேசுவைப் போலவே நிறைய போதகர்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. 'இவர்தான் இயேசு!' என அவரிடம் எதை தனியாக அடையாளம் காட்டியது?

'இவர்தான் இயேசு' என்பதை ஒரு சிலர் மட்டுமே கண்டிருக்க முடியும்.

மற்றவர்கள் இவர்களிடமிருந்து இதைக் கேட்டிருக்க முடியும். ஆனால் இதில் என்ன ஆச்சர்யம் என்றால், மற்றவர்களிடமிருந்து கேட்டவர்கள் எல்லாம் அனைத்தையும் அப்படியே நம்புகிறார்கள்.

இங்கே இரண்டு பொறுப்புணர்வு இருக்கின்றது:

ஒன்று, இயேசு இவர்தான் என அனுபவித்தவர்கள் அந்த அனுபவத்;தை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இரண்டு, அனுபவத்தை சொல்லக் கேள்விப்பட்டவர்கள் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவை இன்னாரென்று அறிவது என்பது நிறைவேறிவிட்ட ஒரு அனுபவம் என்று சொல்லிவிட முடியாது. அது ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு பொழுதும் நிறைவேறக்கூடியது.

ஓஷோ கடவுள் அனுபவம் பற்றிப் பேசும்போது இரண்டு உருவகங்களை பயன்படுத்துகின்றார்: (அ) மியூஸியத்தில் உள்ள எலும்புக்கூடு. இதை எவ்வளவு வருடங்களுக்கு விட்டாலும் அது அப்படியே, இருக்கின்ற இடத்தில்தான் இருக்கும். (ஆ) குழந்தை. இதன் ஓட்டத்தை, அமர்வை, எழுதலை நாம் எந்த நொடியும் கணிக்க முடியாது.

முதல்வகை இறையனுபவம்தான் மற்றவர்கள் நமக்குச் சொல்கின்ற, அல்லது சமயங்கள் நமக்குக் கற்பிக்கின்ற அனுபவம். இதை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ முடியாது.

இரண்டாம் வகை அனுபவம்தான், நம் தனிப்பட்ட அனுபவம். இது எப்போதும் மாறக்கூடியது. சில நேரங்களில் நமக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கும். சில நேரங்களில் 'கடவுள் இருக்கிறாரா?' என்ற ஐயம் எழும். சில நேரங்களில் 'கடவுள் இல்லவே இல்லை' என்று நினைக்கத் தோன்றும். இந்தப் போராட்டத்தின் இறுதியில் அனுபவம் பிறக்கும் என்று சொல்லக்கூடாது. இந்த போராட்டமே அனுபவம்தான்.

மேலும், எப்படியாவது இயேசுவைக் காண வேண்டும் என்ற தேடல் வெறியோடு இருக்கிறார்கள் கெனசரேத் மக்கள்.

என்னிடம் வெறி இல்லை என்றாலும், கொஞ்சம் ஆர்வமாவது இருக்கிறதா?

'தேடுங்கள். கண்டடைவீர்கள்' என்பது விவிலிய வாக்கு.


1 comment:

  1. "இயேசுவை இன்னாரென்று அறிவது ஏற்கனவே நிகழ்ந்து விட்ட ஒரு விஷயமல்ல; அது மீண்டும் மீண்டும் வாழ்ந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று" என்கிறார் தந்தை. உண்மைதான்.யாரோ ஒருவர் தான் அனுபவித்த விஷயத்தை " இதுதான்; இது இப்படித்தான" எனறு சொல்வதை விட, நாமே பட்டுத்தெரிநது கொள்வது

    என்பது...அது ஒரு போராட்டமே எனினும் கூட சுகமான அனுபவம் தான்.கெனசரேத் மக்களிடமிருந்த " இயேசுவைக் காண வேண்டும் எனும் வெறி என்னிடம் இல்லை எனினும், என்னிடம் சிறிதேனும் ஆர்வமாவது இருப்பின் " தேடுங்கள்; கண்டடைவீர்கள்" என்னும் விவிலிய வாக்கு என்னிலும் நிறைவேறும் எனும் நம்பிக்கையை என்னுள் விதைத்த தந்தைக்கு இந்த வாரம் இனிய வாரமாய் அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete