Wednesday, February 14, 2018

தன்னலம் துறந்து

நாளைய (15 பிப்ரவரி 2018) நற்செய்தி (லூக் 9:22-25)

தன்னலம் துறந்து

அய்ன் ரான்ட் அவர்கள் எழுதிய 'தெ வெர்ச்யு ஆஃப் செல்ஃபிஷ்னஸ்' என்ற நூல் அமெரிக்காவின் முதலாளித்துவத்தை ஆதரித்து எழுதப்பட்ட ஒரு நூல். நம்மிடம் இருக்கும் தன்னலத்தை ஒரு மதிப்பீடாகப் பார்க்கிறது இந்நூல்.

ஆனால், நாளைய நற்செய்தி வாசகத்தில் இதற்கு முற்றிலும் மாறாக, 'தன்னலம் துறத்தல்' என்பதை மதிப்பீடாக முன்வைக்கின்றார். மனித பரிணாம வளர்ச்சியில் தன்னலம் மிகவும் முக்கியம். தன்னலம் கொண்டிருக்கின்ற உயிரினமே வளர்ந்திருக்கிறது என்பதற்கு அறிவியலும், விஞ்ஞானமும் சான்றுபகர்கின்றன. இப்படி நம்முடைய ஜீனில் மிக முக்கியமாக இருக்கும் இந்த 'தன்னலம்' என்ற டி.என்.ஏவை நம்மால் வெளியே எடுத்துவிட முடியுமா?

தன்னலம் என்பது 'நான்' மற்றும் 'எனது' என இரண்டு நிலைகளில் இருக்கிறது என்று எம் பேராயர் குறிப்பிடுவார். எப்போதெல்லாம் என் மனம் 'நான்' என்பதையும், 'எனது' என்பதையும் கொண்டிருக்கின்றதோ அப்போதெல்லாம் அது தன்னலமே கொண்டிருக்கின்றது. 'நான்' என்பதும், 'எனது' என்பதும் இல்லாமல் நாம் எதையும் கற்பனை செய்துபார்க்கவே முடியாது. 'பிறர்' என்று சொல்வதற்குக்கூட 'நான்' அவசியமாகிறது.

இவ்வளவு கடினமான ஒன்றை ஏன் சீடத்துவத்தின் முதல் செக்பாய்ண்டாக இயேசு வைக்க வேண்டும்?

ஏனெனில் இயேசுவின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. எப்படி? தன்னலம் துறத்தல் என்பது மடிதல் அனுபவம். அந்த மடிதல் அனுபவம் புதிய உயிருக்கு வழி வகுக்கிறது. ரொம்ப சிம்பிள். ஒரு விதை இருக்கிறது. அந்த விதைக்கென்ற சில 'நான்களும்' 'சில எனதுகளும்' - கலர், டேஸ்ட் போன்றவை. ஆனால், அது எப்போது அவற்றை இழக்கிறதோ அப்போது யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு செடியாக, மரமாக வளர்ச்சி பெறுகிறது.

ஆக, தன்னலம் துறத்தல் என்பது என் வெளியடையாளங்களைக் கடந்து என் உள் ஆற்றல்தளத்திற்குச் செல்லுதல். பல நேரங்களில் நாம் வைத்திருக்கின்ற 'நான்' மற்றும் 'எனது' என்ற அடையாளங்கள் நம் ஆற்றலை வீணாக்குபவையாக அல்லது ஆற்றலை அழிப்பவையாக இருக்கின்றன. வெங்காயத்தின் ஒவ்வொரு தோலாக இதை நாம் கழற்றிக்கொண்டே போகும்போது சில நேரங்களில் ஆற்றல்மிக்க அந்த கருவையும், சில நேரங்களில் ஒன்றுமில்லாமைiயும் கண்டுகொள்கின்றோம்.

அந்தக் கருவும், ஒன்றுமில்லாமையுமே நம்மை புதிய மனிதராக மாற்றுகின்றன.

சின்ன சின்ன தோல்களை நானாக உரித்துக்கொள்ள முன்வந்தால் எத்துணை நலம்!

1 comment:

  1. ஒரே நேரத்தில் "தன்னலம் கொண்ட ஒருவனால் தான் பிறரை நேசிக்க முடியும்" என்றும், "தன்னலம்ற்ற ஒருவனால் மட்டுமே பிறரை நேசிக்க முடியும்" என்றும் முரண்பாடான கருத்துக்களைக் கேட்டிருப்போம்; பேசியிருப்போம்.ஆனால் "தன்னலம் துறத்தல்" என்பது "மடிதல் அனுபவம்" எனவும்,ஒன்று மடியும் போது மட்டுமே மற்றொன்று உயிர்பெறுகிறது என்றும் நமக்குச் சொல்கிறது இன்றையப்பதிவு.அதற்கும் ஒரு படி மேலே சென்று தன்னலம் என்பது என் வெளி அடையாளங்களைக் கடந்து என் உள் ஆற்றலுக்குள் செல்வது என்கிறார் தந்தை.நம்மிடமுள்ள தோல்களை ஒவ்வொன்றாக உரிக்கும்போது இறுதியில் ஆற்றல்மிக்க அந்தக்கருவையும்,சில நேரங்களில் ஒன்றுமில்லாமையையும் உணர்கிறோம் என்கிறார்..ஒரு வித்த்தில் பார்த்தால. இது நம் 'இறுதியைக்' கண் முன்னே காட்டுகிறது.கண்டிப்பாக நம்மைச்சுற்றியுள்ள தேவையற்ற தோல்களை ஒவ்வொன்றாக உரிப்போம்.புதிய பிறவியாக உறுமாறுவோம்.அதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு உதவட்டும்!!!

    ReplyDelete