Monday, February 19, 2018

அவர்களைப் போல இருக்க வேண்டாம்!

நாளைய (20 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத்தேயு 6:7-15)

அவர்களைப் போல இருக்க வேண்டாம்!

தம் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுக்கின்ற இயேசு, 'நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம்!' என்று சொல்கிறார்.

'அடுத்தவரைப் போல இருப்பது' என்பது நமக்கு அடிக்கடி வரும் சோதனை.
அடுத்தவரைப் போல பேசுவது, செயல்படுவது, பண்புகளை வளர்த்துக்கொள்வது, உடை அணிவது என நாம் நிறைய 'போல' செய்கின்றோம். இயேசுவைப் பொறுத்தவரையில் 'போலச் செய்வது எல்லாமே போலியாகச் செய்வதுதான்.'

அடுத்தவரைப் போல ஏன் செபிக்க வேண்டாம் என இயேசு சொல்கின்றார்?

அடுத்தவரைப் போல இருப்பது மிக எளிதானது. ரொம்ப சிம்ப்பிளா புரியனும்னா நாம பயன்படுத்துகிற 'சைனா ஃபோன்கள்.' இவைகளுக்கு என்று எந்தவொரு ஆய்வு மற்றும் மேம்பாடு செலவு கிடையாது. இவைகள் செய்வதெல்லாம் ஏற்கனவே இருக்கும் ஃபோனைப் போல செய்வதுதான். ஆகையால்தான், எல்லா ஃபோன்களுக்கும் போலியான 'போல' ஃபோன்கள் கிடைக்கின்றன. இவைகள் விலை மலிவானவை. இவைகள் முகவரிகள் அற்றவை. இவைகள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொள்பவை.

இயேசு தன் சீடர்கள் அனைவருக்கும் சொல்வது இதுதான்: 'நீங்கள் விலையேறப் பெற்றவர்கள். நீங்கள் முகவரிகள் கொண்டவர்கள். நீங்கள் வானகத் தந்தையின் பிள்ளைகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவர்கள்.'

இயேசுவின் சீடராகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு விசிட்ங் கார்ட் அடித்தால் அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை நாளைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது:
பெயர்: கடவுளின் மகன்-மகள்
வயது: அன்றாடம்
முகவரி: மேலே வானம், கீழே பூமி
முக்கிய பண்புகள்: திருவுளம் நிறைவேற்றுவது, அன்றாடம் உழைப்பது, மன்னிப்பது, சோதனைக்கு உட்படாமல் இருப்பது, தீமையிலிருந்து விடுதலை பெறுவது

இன்று நாம் யாரைப் போலவும் இருக்காமல் அல்லது மாறாமல் இருக்க முன்வரலாமே!


1 comment:

  1. அழகான வார்த்தைகள் கொண்ட ஆங்கில caption . அதைப் பார்த்தவுடனே தந்தை என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது....அசலுக்கும்,போலிக்கும் உள்ள வித்தியாசத்தை இனம் பிரித்துக் காட்டுகிறார்.டெக்னாலஜியை உள்ளடக்கிய தந்தையின் மூளையையும் மீறி என்னக்கவர்ந்த வரிகள்..." நீங்கள் விலையேறப்பெற்றவர்கள்; நீங்கள் முகவரி கொண்டவர்கள்; நீங்கள் வானகத்தந்தையின் பிள்ளைகள் என்ற அடையாளத்தைக்கொண்டிருப்பவர்கள்."இந்த வார்த்தைகள் தரும் தன்னம்பிக்கையோடு நாம் " அவரின்" பிள்ளைகளாக வாழும் வரம் கேட்போம். தந்தைக்கு என் செபங்களும்! வாழ்த்துக்களும்!!

    ReplyDelete