Monday, February 26, 2018

மக்கள் பார்க்க வேண்டும்

நாளைய (27 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத் 23:1-12)

மக்கள் பார்க்க வேண்டும்

சின்னக் குழந்தை தட்டுத்தடுமாறி நடந்து வருவதைப் பார்த்திருப்போம்.

அது தட்டுத்தடுமாறி வரும்போது தானாக கீழே விழுந்துவிட்டால் தடவித் தடவி எழுந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்து நடக்கத் தொடங்கிவிடும். ஆனால், ஒருவேளை, தான் விழுந்ததை அடுத்தவர் பார்த்துவிட்டார் எனத் தெரிந்தால் உடனே அழத் தொடங்கிவிடும். மற்றவர்முன் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் எழும் கதறலே அது.

ஆக, அடுத்தவர் நம்மைப் பார்ப்பது நம்மை அறியாமலேயே நம்முள் நேர்முக மற்றும் எதிர்மறை உணர்வுகளை எழுப்புகிறது.

நமக்குப் பிடித்தவருக்கு பிடித்த கலர் அணிவது.
ஒரே மாதிரி யூனிஃபார்ம் சேலை அணிந்து சென்று கல்யாண வீட்டில் எல்லாரையும் உசுப்பேற்றிவிடுவது.
இப்படியாக அடுத்தவர் பார்க்க வேண்டும் என நாம் நிறையச் செய்கிறோம்.

'தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்' - இப்படியாக தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார் இயேசு.

நாம் கண்ணாடி முன் நிற்கும்போது கூட அந்த பிம்பத்தை நம் கண்கள் வழியாக இரசிப்பது ஒரு மூன்றாம் நபர்தான். அடுத்தவர் பார்க்க நாம் நிறைய காரியங்களைச் செய்கிறோம். மேலும், அடுத்தவர் பார்க்கச் செய்யும் வேலைகள் நிறைய வளர்ச்சிதருவனவாகவும் இருக்கின்றன.

ஹாஸ்டலில் வார்டன் பார்க்கிறார் என்பதற்காக படிக்கும் மாணவர்கள்.
அதிபர் பார்க்கிறார் என்பதற்காக ஆலயத்திற்கு வரும் குருமாணவர்கள்.
தன் வீட்டுக்காரர் பார்க்கிறார் என்பதற்தாக தலையை நிமிர்ந்து பார்க்கும் மனைவி.
இப்படி நிறைய இடங்களில் அடுத்தவரின் பார்த்தல் நம் வாழ்வில் ஒரு மேன்மை உணர்வை உருவாக்கவே செய்கிறது. இயேசு இந்த உணர்வுக்குக் கடிவாளம் இட அழைக்கின்றார். ஏனெனில், 'மக்கள் பார்க்க வேண்டும்' என்று நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்குமான பலனை நாம் அடுத்தவருக்குக் கொடுத்துவிடுகின்றோம். அமைதி காக்கின்றோம். மாறாக, தன்னை அறிதலும், தன்னம்பிக்கை உடையவரும் மக்களின் பார்த்தலை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

இந்த நிலைக்கு அழைக்கிறது நாளைய நற்செய்தி வாசகம்.

2 comments:

  1. நமக்கு வாழ்வில் நல்ல செயல்களைச் செய்ய சில உந்து சக்திகள் தேவைப்படுகின்றன.நமக்காக செய்து கொள்ளாத பல விஷயங்களை நம் குடும்பத்தாருக்காகவோ இல்லை நம் நலனில் அக்கறை கொண்டவர்களுக்காகவோ செய்கிறோம்.காலப்போக்கில் அச்செயல்கள் நம்மில் ஒன்றி விடுகின்றன எனில் அதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.ஆனால் தந்தை சொல்வது போல் ' அடுத்தவருக்காக' என்று நாம் செய்யும் காரியங்களின் பலனை அடுத்தவருக்கே கொடுத்து விடுகிறோம்; இல்லை அந்த உந்து சக்திகள் நம்மை விட்டு மறையும்போது நமது செயல்களும் நம்மை விட்டு மறைந்து போகின்றன.ஆனால் அழகான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் தந்தை...."தன்னை அறிதலும்,தன்னம்பிக்கை உடையவரும் மக்களின் பார்த்தலைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை" ... அழகான உண்மை.என்னிடம் உள்ள என் கடிவாளம் மட்டுமே என் செயல்களை நிர்ணயிக்கும் பட்சத்தில் நான் யாரையும் இம்ப்ரஸ் பண்ண வேண்டிய தேவை இல்லை என்றெண்ணுகிறேன்.சிறிய விஷயங்களே பெரிய பாதிப்புக்களை உண்டாக்குகின்றன. ' கவனமாயிருங்கள்" என்று நம்மில் ஒரு அசரீரியாக நின்று செயல்படும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete