Wednesday, February 14, 2018

எது தவம்?

எது தவம்?

இந்த ஆண்டு தவக்காலம் கொஞ்சம் வித்தியாசமான நாள்களில் வருகிறது என்பதைக் கவனித்திருப்போம். எப்படி?

பிப்ரவரி 14 - காதலர் தினம் - திருநீற்றுப்புதனாகவும்
ஏப்ரல் 1 - முட்டாள்கள் தினம் - உயிர்ப்பு பெருவிழாவாகவும் உள்ளது.

காதல்தான் எல்லாம் என்ற இந்த உலகில் தவம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்களுக்கு தவம் காதலர்தினத்தில் தொடங்குகிறது.
உலகின் பார்வைக்கு முட்டாள்தனம் என்று தெரிந்தது ஆண்டவரின் உயிர்ப்பு.

நாளை தவக்காலத்தைத் தொடங்குகிறோம்.

நோன்பு, செபம், பிறரன்புச் செயல்கள் - இந்த மூன்றும்தான் தவம் என்று நாம் காலங்காலமாகச் சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

நோன்பு தவம் என்றால், ஏழ்மையால், உடல்நலமின்மையால், நாடுகடத்தப்படுதலால், அகதியாய் இருத்தலால் சிலர் வாழ்க்கை முழுவதும் பசியுற்றிருக்கின்றனர்.

செபம் தவம் என்றால் மௌனமடத்தில் இருக்கும் துறவறத்தார் ஏறக்குறைய எந்நேரமும் செபித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

பிறரன்புச் செயல்களே தவம் என்றால் அக்ஷயா டிரஸ்ட் தொடங்கி எல்லா அறக்கட்டளைகளும் பிறரன்புச் செயல்களைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த மூன்று செயல்களையும் ஏறக்குறைய நாம் ஏதோ ஒரு நிலையில் செய்துகொண்டுதான் இருக்கின்றோம். இதுதான் தவமா? இதுதான் தவக்காலமா?

தவக்காலம் என்றால் நாம் இந்த மூன்று பண்புகளை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த மூன்று பண்புகளைக் கடைப்பிடித்தல் தவக்காலம் அல்ல. மாறாக, இந்த மூன்று பண்புகளின் வழியாக அதிமான மகிழ்ச்சிக்கு - அதாவது, பாஸ்கா மகிழ்ச்சிக்கு - நாம் மனம் திறப்பதே தவம்.

'தவம்' என்ற வார்த்தை 'தபஸ்ய' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகிறது. 'தபஸ்ய' என்ற வார்த்தையின் மூலம் 'தப்.' 'தப்' என்றால் 'வெப்பத்தை வெளிப்படுத்துதல்' என்பது பொருள். ஆக, 'தபஸ்' என்றால் 'வெப்பம், தணல், தீ' என்று பொருள்.

நம் உடலில் வெப்பம் உள்ளது வரைதான் நாம் உயிரோடு இருக்கிறோம். ஆக, தவம் என்பது நம் உடலின் வெப்பத்தை சீர் செய்வது அல்லது வெப்பத்தை உணர்வது.

'தவம் கிடந்தேன்'
'தவமாய் தவமிருந்து பெற்றேன்'
என்ற சொல்லாடல்களையும் நாம் கேட்டுள்ளோம். இங்கே 'தவம்' என்றால் 'ஒரு சிந்தனை, ஒரே செயல்' என்ற ஒருமுகப்படுத்துதலாக இருக்கிறது.

நாற்பது நாளைக்கு அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாது அல்லது அது செய்யணும், இது செய்யணும் அப்படின்னு சில முடிவுகளும் எடுத்திருப்போம்.

நான் ஒவ்வொரு வருடமும் இப்படி எடுக்குற முடிவுகள் விரலைக் கொண்டு ஈ ஓட்டுற மாதிரி விரலுக்கும் பயனில்லாம, ஈயையும் விரட்டாமல் தான் இருக்கும். ஆனாலும் இந்த வருடம் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றை விடலாம் என்று காலையில் இருந்து தோணுது. ஆனா, எதைச் செய்ய, எதை விட என்றுதான் இன்னும் தெரியல. இன்னும் விடியலைல. விடியறுத்துக்குள்ள பாத்துக்குடுவோம்.

ஒவ்வொரு வருடம் திருநீற்றுப் புதன் அன்றும் நாம் திருப்பலியில் வாசிக்கும் நற்செய்திப் பகுதி மத்தேயு 6:2-18. தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல் மற்றும் நோன்பு இருத்தல் பற்றிய இயேசுவின் மலைப்பொழிவு போதனையின் மையப்பகுதி தான் இது.

நான் தவக்காலத்தில் என் மனதுக்குள் வைத்துக்கொள்ள நினைத்துக் கொள்ளும் ஒரே சிந்தனை இதுதான்:

'உங்கள் தந்தை!'

இன்று நாம் வாசிக்கும் நற்செய்திப் பகுதியில் இந்த இரண்டு வார்த்தைகளும் ஏழுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1. உங்கள் தந்தை உங்களுக்கு கைம்மாறு அளிப்பார் (6:4)
2. மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி (6:6)
3. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:6)
4. உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (6:8)
5. மன்னியாவிடில் உங்கள் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் (6:15)
6. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும் (6:18)
7. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:18)

மேலும் 'விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தை' என்று 6:9லும், 'உங்கள் விண்ணகத் தந்தை' என்று 6:14லிம் வாசிக்கிறோம். 'விண்ணகத்தில்' அப்படிங்கிற வார்த்தை குறுக்க நிற்கிறதுனால இந்த இரண்டு இடங்களையும் தவிர்த்து விடுவோம்.

இந்த 'உங்கள் தந்தை' யார்?

முதல் ஏற்பாட்டில் யாரும் கடவுளை 'தந்தை' என்று அழைத்ததில்லை. கடவுள் எட்டாதவராகவும், மிக மதிப்பிற்குரியவராகவும் கருதப்பட்டதால் யாரும் கடவுளை அப்படி அழைக்கவும் துணியவில்லை. ஒரு சில இடங்களில் கடவுள் இஸ்ராயேல் மக்களின் தந்தையாக தன்னையே உருவகப்படுத்துகின்றார். உதாரணத்திற்கு, 'தந்தை தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பது போல உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்' (இச 8:5). இந்த இடத்தில் கூட கடவுள் தன்னை 'உடல்ரீதியான' தந்தையாக அல்லாமல், 'மீட்புரீதியான' தந்தையாகவே தன்னை முன்னிறுத்துகின்றார்.

இரண்டாம் ஏற்பாட்டில் கடவுளுக்கு தந்தை என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் சொல்லாடலை அதிகம் பயன்படுத்துபவர் யோவான் நற்செய்தியாளர் (109 முறை). மத்தேயு நற்செய்தியாளர் மொத்தம் 44 முறை பயன்படுத்துகிறார். இவற்றில் 21 இடங்களில் கடவுளை இயேசு தன் சீடர்களுக்கும், கடவுளுக்குமான உறவில் 'உங்கள் தந்தை' என முன்வைக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் கடவுளை சீடர்கள் மட்டும் தான் 'தந்தை' என்று அழைக்க முடியும்.

கடவுள் எல்லா மனிதர்களுக்கும் தந்தை என்றாலும், இந்த 'தந்தைக்குரிய' நிலையை அவர் எல்லாருக்கும் தருவதில்லை. 'மகளுக்குரிய' அல்லது 'மகனுக்குரிய' நிலையில் யார் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே கடவுளை 'தந்தை' என அழைக்க முடியும்.

முதல் ஏற்பாட்டில் தூரமாய் ஒளிந்திருந்த கடவுள் இரண்டாம் ஏற்பாட்டில் தொட்டு 'அப்பா' என்று அழைக்கக் கூடிய தூரத்திற்கு நெருங்கி வருகின்றார்.

இந்தத் தவக்காலத்தில் நமக்கிருக்க வேண்டிய (அட்லீஸ்ட் எனக்கு இருக்க வேண்டிய!) நம்பிக்கை இதுதான்: 'உங்கள் தந்தை' உன்னோடு இருக்கிறார்!

சின்ன வயதுல குழந்தை தன் தந்தையைப் போல இந்த உலகத்தில் வீரன் யாருமேயில்லை என்று நினைக்குமாம். தன் தந்தையை மட்டும் அது ஹீரோவாகப் பார்க்குமாம்.

அந்தக் குழந்தை மனது இன்று நமக்கு இருந்தால் போதும். இன்று நம்மை அலைக்கழிக்கும் கவலை. மனத்துயரம், வெறுமை, நாளை என்ன நடக்கும் என்ற படபடப்பு, அடுத்த வருஷம் என்ன செய்யலாம் என்ற வெற்று மன ஓட்டம் எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அடிக்கடி 'நம் தந்தை' இருக்கிறார் என்பதை மறந்தவிடுவதுதான்.
இந்த ஒரு எண்ணம் மட்டும் நமக்கு ஆழ்மனதில் பதிந்துவிட்டால் போதும். வெற்றியோ, தோல்வியோ, வறுமையோ, செல்வமோ, துன்பமோ, இன்பமோ எல்லாம் ஒன்றுபோலத் தெரிய ஆரம்பிக்கும்.

இந்த உலகில் யாரும் நம்மைப் பார்க்கவில்லையென்றாலும், நாம் செய்வதைப் பாராட்டவில்லையென்றாலும், நம் செயல்கள். சொற்கள் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் மனதில் கலக்கம் தேவையில்லை.

ஏனெனில், உங்கள் தந்தை உங்களோடு!

தாயின் கருவறையில் நாம் இருக்கும் நிலையும், கல்லறையில் நாம் இருக்கும் நிலையும்தான் தவம்.

இந்த தனிமைத்தவத்தை இன்றே ஏற்பதுதான் தவக்காலம். இந்தத் தனிமைத்தவத்தில்தான் அந்த தந்தையின் உடனிருப்பை நாம் கண்டுகொள்ள முடியும்.

இந்தத் தவக்காலம் உங்களுக்கு அருளின் காலமாக அமையட்டும்!

1 comment:

  1. நோன்பு,செபம், பிறரன்புச்செயல்கள் வழியாக "பாஸ்கா" மகிழ்ச்சிக்கு மனம் திறப்பதே தவம் என்று ஒரு புதிய சிந்தனைக்குள் நம்மை இட்டுச்செல்கிறார் தந்தை.இந்தத்தவக்காலத்தில் தந்தை தன் சிந்தனையாக எடுத்துக்கொள்ள விழையும் " உங்கள் தந்தை" எனும் கருப்பொருளே நம்முடையதாகவும் இருப்பதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன். இந்த தந்தைக்குரிய உறவை 'மகனுக்குரிய' மற்றும் 'மகளுக்குரிய' நிலையில் இருப்பவர்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியுமெனில் என்னை நான் அந்தத் " தந்தை"யின் " மகள்" எனும் இடத்திற்குத் தகுதியாக்குதல் வேண்டும் என்பது புரிகிறது.இதை எனக்குச் சாத்தியமாக்குவது "என் தந்தை என்னோடிருக்கிறார்" எனும் எண்ணம் மட்டுமே.இந்த எண்ணம் மட்டும் ஆழ்மனத்தில் பதிந்துவிட்டால் வெற்றியோ,தோல்வியோ,வறுமையோ,செல்வமோ, துன்பமோ,இன்பமோ எல்லாம் ஒன்றாகவே தெரியும் என்கிறார் தந்தை ஒரு அனுபவ சாலியின் முதிர்ச்சியோடு.தாயின் கருவறைக்கும், கல்லறைக்கும் இணையான "தனிமைத்தவத்தை" விண்ணகத் தந்தையின் உடனிருப்போடு நாம் கண்டுகொள்ள முடியுமெனில் அவரின் கைபிடித்து நடப்பதே அவரின் 'மகளாகிய' நான் செய்ய வேண்டியது என அழகாக எடுத்துச் சொல்லும் தந்தையின் வரிகளுக்காக அவருக்கு என் நன்றிகள்! இந்த 'அருளின்' காலமான தவக்காலத்திற்குள் தன் வாசகர்களை அழகாகக். கரம் பிடித்து இட்டுச்செல்லும் தந்தையை இறையருள் இன்றும்,என்றும் காப்பதாக!! அனைவருக்கும் தவக்கால வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete