Monday, February 12, 2018

மறதியும், புரிதலின்மையும்

நாளைய (13 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற் 8:14-21)

மறதியும், புரிதலின்மையும்

'அவர்கள் மறந்துவிட்டார்கள்' என்று தொடங்கும் நாளைய நற்செய்தி வாசகம் 'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?' என்ற கேள்வியோடு நிறைவு பெறுகிறது.

'சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்' என்ற மாற்கு நற்செய்தியாளரின் பதிவு அவர்கள்மேல் நமக்கு ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்துகிறதே தவிர கோபத்தை ஏற்படுத்தவில்லை. மறதி நம் எல்லாருக்கும் பொதுவான ஒன்றுதான். நான் என்னைப் பற்றிய விடயங்களை மறந்தால் அது என்னை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால் எனக்கு அடுத்திருப்பவரைப் பற்றியது என்றால் அது என்னைப் பாதிக்கிறது. எப்படி? 'தினமும் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்' என மருத்துவர் எனக்குச் சொல்லியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதே போல என் அம்மாவும் சுடுதண்ணீர் குடிக்கிறார்களா என்று கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். ஒருநாள் நான் சுடுதண்ணீர் எடுத்துச்செல்ல மறந்துவிடுகிறேன். அது எனக்கு பரவாயில்லை என்று தோன்றினாலும், என் அம்மாவின் உடல்நலம் என்று வரும்போது என் மறது எனக்குள் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்திவிடுகின்றது. அப்படி ஒரு பதைபதைப்புதான் நாளைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் உள்ளத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் அப்பங்களை மறந்துவிட்டார்கள்.

ஆனால் பிரச்சினை இங்கே இதுவல்ல. அப்பங்களை தாங்கள் மறந்துவிட்டாலும் அப்பங்களை பலுகச் செய்யும் ஒருவர் தங்களோடு இருக்கிறார் என்பதையும் - சுடு தண்ணீர் அடுப்பு - மறந்துவிடுகிறார்கள். ஆகையால்தான், 'புளிப்பு மாவு' என்று இயேசு சொல்லும் வார்த்தை அவர்களுக்கு தாங்கள் மறந்து வைத்துவிட்டு வந்த அப்பங்களை நினைவூட்டுகிறது.

கடவுளைப் பற்றிய மறதி அல்லது காட் அம்னீசியா இன்று நம் வாழ்விலும் சில நேரங்களில் தொற்றிக்கொள்கின்றது. எவ்வளவோ பிரச்சினைகளை நாம் தாண்டி வந்தாலும், அந்த நேரங்களில் அவரின் உடனிருப்பை நாம் அனுபவித்திருந்தாலும், புதிய பிரச்சினை எழும்போது பழைய அனுபவம் நமக்கு மறந்துவிடுகிறது.

நிற்க.

இயேசுவின் இறுதி வார்த்தைகளுக்கு வருவோம்: 'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'

'புரியவில்லையா?' - எல்லா மொழிகளிம் பயன்படுத்தப்படும் அதிகமான சில வார்த்தைகளில் ஒன்று இது.

இந்தக் கேள்வி வித்தியாசமான கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடையாக 'ஆம்' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும். 'இல்லை' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும்.

இயேசு தன் சீடர்களிடம் பரிசேயர்களின் புளிப்பு மாவு பற்றிச் சொல்கின்றார். சீடர்கள் அப்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பேசுபவரும் கேட்பவரும் ஒரே தளத்தில் இருக்கும்போதுதான் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.

இயேசு நிற்கும் தளமும் சீடர்கள் நிற்கும் தளமும் ஒன்றாக இல்லை. ஆகையால் தகவல் சிதறுகிறது.

புரிந்து கொள்வதற்கு இரண்டு அடிப்படை தேவைகளை முன்வைக்கின்றார் இயேசு:

அ. மழுங்காத உள்ளம். அதாவது கூர்மையான உள்ளம். தயாரான உள்ளம்.

ஆ. பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற காதுகள். அதாவது ஒவ்வொரு உறுப்பும் தான் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்.

இயேசுவைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல, நாம் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளவும் இவைகள் அடிப்படையே.

1 comment:

  1. வாழ்வில் "ப்ரையாரிட்டி" அல்லது " முன்னுரிமை" என்பது பல நேரங்களில் என் போன்றவர்களுக்குப் புரியாமல் போய்விடுகிறது... அப்பமா இல்லை அப்பத்தைப் பலுகச் செய்யும் சக்தி படைத்தவரா என்ற சந்தேகம் கொண்ட மக்களைப்போல."மறதி" மருந்தில்லாத ஒரு வியாதி.பிரச்சனைகள் நம்மைப்பாடாய்ப் படுத்துகையில் இறைவனின் உடனிருப்பை மட்டுமல்ல...நம்மோடு உடன் பயணிப்பவர்களின் உடனிருப்பையும் மறந்து போகிறோம்.அழகாக வெளிப்படுத்தியுள்ளார் தந்தை....இயேசுவைப்புரிந்து கொள்ள மட்டுமல்ல...நாம் ஒருவர் மற்றவரைப்புரிந்து கொள்ளவும் மழுங்காத உள்ளமும்,பார்க்கின்ற கண்களும்,கேட்கின்ற காதுகளும் வேண்டுமென்கிறார். இந்தப் புரிதலுக்கான 'வரம்' வேண்டி நிற்போம் இத்தவக்காலத்தில்.வாழ்க்கையை வாழும் விதமாக வாழ அழகான விஷங்களைப் பகிர்ந்து கொண்ட தந்தையை இறைவன் என்றென்றும் பாதுகாப்பாராக!

    ReplyDelete