Monday, January 12, 2015

புத்தாண்டு வாக்குறுதி

கொஞ்ச நாள் ஆறப்போட்டுவிட்டு திரும்ப எழுதுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

21 நாட்கள் விடுமுறை. இனிதே வீடு சென்று திரும்பினேன்.

கொஞ்சம் சிரிப்பு. கொஞ்சம் கொஞ்சல். கொஞ்சம் அழுகை. கொஞ்சம் சந்திப்பு. கொஞ்சம் பிரிவு. நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன.

நாளை முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. அடுத்த வாரம் பரீட்சை வேறு.

எதையெதையோ பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன்.

புத்தாண்டு வாக்குறுதி பற்றி தொடங்குவோம்.

இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பயணத்தோடே தொடங்கியது. அன்று மட்டும் ஏறக்குறைய 300 கிமீ பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆண்டு நான் முதலில் பின்பற்ற நினைத்தது கடவுள் நம்பிக்கை. நாம் படைத்த கடவுளை நாம் நம்புகிறோமோ இல்லையோ நம்மைப் படைத்த கடவுளை நம்புவது. இந்த நம்பிக்கை மட்டும் அசையாமல் இருந்துவிட்டால் வாழ்வில் பாதிப்பிரச்சினைக்கு விடை கிடைத்துவிடுகிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய ஆராய்ச்சியும், போப்பாண்டவர் நல்லவரா, கெட்டவரா, கிறிஸ்தவ மதம் பெரியதா, சிறியதா போன்ற ஆராய்ச்சிகள் செய்யக் கூடாது என்பதும் இதில் அடங்கும்.

இரண்டாவது, நான் மேற்கொண்டிருக்கும் அருட்பணி நிலையை ஒரு முழுநேர ப்ரொபஷனாக, ப்ரொபஷனலாகச் செய்வது. அதாவது செபம் செய்வதென்றால் அதை முழுiமாயாக, நேர்த்தியாகச் செய்வது, எட்செட்ரா.

மூன்றாவது, அன்பைப் பெறுவதற்காக திறந்த மனநிலையில் இருப்பது. அன்பைத் திறந்த மனநிலையோடு கொடுப்பது. யாரையும் கெட்ட வார்த்தையால் திட்டக் கூடாது. தவறியும் கோபப்படக் கூடாது. இந்தச் சின்னஞ் சிறிய வாழ்க்கையை கோபத்திலும், வாக்குவாதத்திலும் இழந்துவிட வேண்டுமா என்ன?

நான்காவது, மின்னஞ்சல் அனுப்புவது. இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? அந்தந்த மொழி பேசுபவர்களுக்கு அந்தந்த மொழியில் மின்னஞ்சல் அனுப்புவது. தமிழ் வளர்க்கும் ஒரு எளிய முயற்சி இது என்று சொன்னால் திருவள்ளுவர் கூட நம்ப மாட்டார். இருந்தாலும் முயற்சி செய்யலாமே!

ஐந்தாவது, வேறு ஒன்றும் இல்லை.

இத்தாலிய மொழியில் ஒரு பழமொழி உண்டு: உங்கள் வாழ்வின் துன்பங்கள் அனைத்தும் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல விரைவில் மறைந்து போகட்டும்.

நம்ம வாக்குறுதிகள் மறைந்து போகாமல் இருக்கின்றனவா என்று கொஞ்சம் மறைந்திருந்து பார்ப்போம்.


4 comments:

  1. 21 நாட்கள் விடுமுறைக்குப்பின்...ஆரம்பமே அமர்க்களம். நாம் படைத்த கடவுளை நம்புகிறோமோ இல்லையோ, நம்மைப்படைத்த கடவுளை நம்ப வேண்டும்..அழகான ,முத்தான வார்த்தைகள்.தந்தையே! தங்களின் அனைத்துப் புத்தாண்டு வாக்குறுதிகளும் இறைவனின் துணையோடு நிறைவேறவும்,தாங்கள் பலருக்குக் கிரியா ஊக்கியாக நின்று செயல்படவும், தங்களின் உடல், உள்ள நலன் பலருக்குப்பயன்படவும் என் அடிமனத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன்..அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    your words are inspiring yesu. take care. with love and prayers
    ias

    ReplyDelete