Monday, January 19, 2015

மரியாளின் பயணங்கள் - 2

நம் இந்திய மரபில் தோன்றிய சமண மதத்தில் முக்தி நிலை அடைந்தவரை 'தீர்த்தங்கரா' என அழைக்கின்றனர். தீர்த்தங்கரர் என்பவர் 'சம்சாரா' என்றழைக்கப்படும் வாழ்க்கையின் பயணத்தைக் கடந்தவர். இறப்பு, மறுபிறப்பு என்ற வட்டத்திலிருந்து கடந்து நிற்கும் இவர் முக்தி நிலை நாடும் மற்றவர்களுக்கும் உதவி செய்யக் கூடியவர்.

மரியாளையும் தீர்த்தங்கரா என்றழைப்பது பொருத்தமாகவே இருக்கும். பிறப்பிலேயே தூய்மை, இறப்பிலிருந்து விடுதலை என பிறப்பு, இறப்பு வட்டத்தைக் கடந்து நிற்கும் மரியாள் இன்றும் தன் திருமகனிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பது நம் நம்பிக்கை.

தீர்த்தங்கரா மேற்கொள்ளும் பயணத்திற்குப் பெயர் தீர்த்த யாத்திரை, அதாவது தண்ணீர் யாத்திரை. நம் மனித வாழ்வைக் குறிக்கும் ஒரு சொல்லும் தண்ணீர் தான். தாயின் கருவறையின் தண்ணீர்க்குடம் உடையப் பிறக்கும் நாம், நம் நண்பர்களின் கண்களின் கண்ணீர்க்குடங்கள் உடைய நம் வாழ்வை முடித்துக் கொள்கிறோம். ஆக, தண்ணீருக்கும், தண்ணீருக்கும் இடையே நகரும் சிறு தண்ணீர்த்துளிகள் தாம் நாம்.

1. நாசரேத்திலிருந்து எய்ன் கேரேமிற்கு

மரியாளின் முதல் பயணம் நாசரேத்திலிருந்து யூதேயா மலைநாட்டிலிள்ள ஒரு ஊருக்குத் தொடங்குகின்றது (லூக்கா 1:39). வானதூதர் கபிரியேலின் மங்கள வார்த்தையைக் கேட்ட மரியாள், அந்த வானதூதர் தனக்குத் தந்த ஒரு அடையாளமான 'உன் உறவினராகிய எலிசபெத்தும் கருத்தாங்கியிருக்கிறார்!' என்ற வார்த்தைகளை நம்பியவராய்த் தன் உறவினரைக் காணப் புறப்பட்டுச் செல்கின்றார். லூக்கா நற்செய்தியாளர் அந்த ஊரின் பெயரை அறுதியிட்டுக் கூறாவிட்டாலும், வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஊரை எய்ன் கேரேம் என்று குறிப்பிடுகின்றனர். எய்ன் கேரேம் என்ற எபிரேய வார்த்தைகளுக்கு 'திராட்சையின் ஊற்று' என்பது பொருள். நாசரேத்திற்கும் எய்ன் கேரேமிற்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 100 மைல்கள். கருவுற்று ஆறாம் மாதம் நிறைவுற்ற எலிசபெத்தைத் தேடி வருகின்ற மரியாள் அவரோடு மூன்று மாதங்கள் தங்குகின்றார் (லூக்கா 1:56). மரியாள் தனியாக வருவதாகவே லூக்கா நற்செய்தியாளர் எழுதுகிறார். மரியாளைக் காணும் எலிசபெத்தும் மரியாளிடம் மட்டுமே பேசுகின்றார். ஆக, மரியாளின் துணைவர் வளன் உடன் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இவ்வளவு நீண்ட பயணத்தை மரியாள் தனியாகச் செய்திருக்க முடியுமா என்று கொஞ்சம் காமன் சென்ஸ் கொண்டு பார்த்தால் வளன் உடன் வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

மரியாளின் முதல் பயணம் நமக்குச் சொல்வது 'தூரத்தைக் கடப்பது'. உறவுகள் நிலையாக நிற்கவும், நம் இலக்குகளை நாம் அடையவும் நமக்குத் தேவை 'தூரத்தைக் கடப்பதன் துணிச்சல்!' நம் நண்பரைப் பார்க்க வேண்டும், அல்லது அவரோடு உரையாட வேண்டும் என்ற நம் ஆசை நிறைவேறுவது எப்போது? அந்த நண்பரைத் தேடிச் செல்லவும், அவருக்கும் நமக்குமான தூரத்தைக் கடக்கும் போதுதான். நான் டாக்டராவேன் அல்லது ஐ.ஏ.எஸ் ஆவேன் என்று இலக்கை அமைத்துக் கொண்டு நம் வீட்டிற்குள்ளேயே ஓய்ந்திருந்தால் நம் இலக்கு நிறைவேறிவிடுமா? அந்த இலக்கிற்கும், நமது இப்போதைய நிலைக்குமான தூரத்தை நாம் கடக்க வேண்டும்.
நம் இன்றைய வாழ்க்கை நிலையை 'தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடு' என்று சொல்லலாம். பக்கத்தில் இருக்கும் நம் வீடுகளும், நம் உறவுகளும் கூட இன்று தூரமாய் இருக்கின்றார்கள். நம் கைச்சொடுக்குமிடத்தில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என நண்பர்களை நம் உள்ளங்கைகளில் வைத்திருந்தாலும், அவர்களுக்கும் நமக்குமான தொலைவு அதிகமாகவே இருக்கின்றது. விண்ணுக்குச் சென்று நிலவில் கால் பதித்த மனுக்குலத்திற்கு பக்கத்து வீட்டைக் கதவைத் தட்டி, 'நல்லா இருக்கீங்களா?' என்று கேட்கத் துணிச்சல் இல்லை. ஒன்று, அடுத்தவர்கள் நமக்குத் தேவையில்லை என நினைக்கிறோம். அல்லது, என்னிடம் தான் எல்லாம் இருக்கிறதே என தன்னிறைவு அடைந்து கொள்கிறோம்.

தூரத்தைக் கடக்க ஒரு துணிச்சல் தேவை. தன் வாழ்விடத்தை விட்டு வெளியேறும் பறவையினமே மற்றொரு கண்டத்தில் சென்று கால் பதிக்கிறது. மரியாளின் துணிச்சல் தூரத்தைக் கடந்து போகச் செய்தது. தூரத்தைக் கடந்த மரியாள் எலிசபெத்தின் உள்ளத்திலும், உடலிலும் மகிழ்ச்சியை விதைக்கிறார். 'உம் வார்த்தை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள் குழந்தை அக்களிப்பால் துள்ளியது!' என்கிறார் எலிசபெத்து. ஆக, தூரத்தைக் கடந்தால் மட்டும் முக்கியமல்ல. கடந்து செல்லும் நாம் மகிழ்வை விதைக்க வேண்டும்.

ஒரு சிலர் நம்ம வீட்டுக்கு வர்றாங்க என்றால், இன்னைக்கு என்ன குட்டையக் குழப்ப வருகிறாரோ! என நினைப்போம். தூரத்தைக் கடந்து வந்து ஒரு சிலர் நம் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் கலைத்துவிட்டு;ப் போவார்கள். மகிழ்ச்சியின் தூதர்களாக நாம் இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த மனக்கவலையின் காரணிகள் நம்மை அண்டி வந்தாலும் நம் மகிழ்வை இழக்காமல் தக்கவைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

தூரத்தைப் பற்றி விவேகானந்தர் அழகாகச் சொல்கிறார்: 'காதல் செய்யும் இரண்டு பேரைப் பாருங்கள். ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்கிறதா என்று நினைக்கும் அளவிற்கு மிக நிசப்தமாகப் பேசுவார்கள். ஆனால், சண்டையிடும் இரண்டு பேரைப் பாருங்கள். அருகருகே இருந்தாலும் கத்திக் கூப்பாடு போடுவார்கள். காரணம் இதுதான்: அன்பில் இதயங்கள் நெருக்கமாக இருக்கின்றன. ஆக, மௌனமொழி கூட அங்கே நன்றாகக் கேட்டும். ஆனால் கோபத்திலும், வன்மத்திலும் உடல்கள் அருகருகே இருந்தாலும் இதயங்கள் தூரமாகிவிடுகின்றன. ஆக, சத்தம் போட்டுப் பேசினால் தான் அடுத்தவருக்குக் கேட்கும்!'

தூரத்தைக் கடக்கவும், கடந்து சென்று மகிழ்வை விதைக்கவும் நம்மைத் தூண்டுகிறது மரியாளின் முதல் பயணம்.

2. நாசரேத்திலிருந்து பெத்லகேமிற்கு

'தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்' என எழுதுகிறார் லூக்கா (2:4-5). மரியரிளின் இரண்டாம் பயணம் நாசரேத்தில் தொடங்கி பெத்லகேமில் முடிகிறது. பயணத்தின் காரணம் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது: பெயரைப் பதிவு செய்ய. லூக்கா இந்த நற்செய்திப் பகுதியில் முதலில் யோசேப்பு தான் பயணம் செய்வதாகவும், மரியாள் உடன் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தாலும், அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் மரியாளையே முன்னிறுத்துகின்றன.
லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிடும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வரலாற்றுத் தவறுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். அகஸ்து சீசர் பற்றியும் குரேனியு பற்றியும் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் நற்செய்திக் குறிப்புகளோடு ஒத்துப் போகவில்லை. மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது வழக்கமாக ஒருவரது சொந்த ஊரில் தான் எடுக்கப்படும் (இன்றுவரை!). அப்போதுதான் ஒருவரது அசையும் சொத்து, அசையாச் சொத்து என அனைத்தையும் முறையாகப் பதிவு செய்ய முடியும். மற்றொரு ஊரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதும், அங்கே ஒருவர் தனக்குச் சொந்தமான அனைத்தையும் தூக்கிக்கொண்டு சென்று பதிவு செய்வதும் நடக்கக் கூடிய காரியம் அல்ல. பின் எதற்காக லூக்கா நற்செய்தியாளர் வலிந்து அவர்களைப் பெத்லகேமிற்கு அனுப்புகிறார்?

மரியாள் மற்றும் யோசேப்பின் சொந்த ஊர் கலிலேயாவிலுள்ள நாசரேத்து. இயேசு வாழ்ந்த காலத்து  யூதா நாடு அல்லது இஸ்ரேல் நாடு கலிலேயா, யூதேயா மற்றும் சமாரியா என்று மூன்று மாகாணங்களை உள்ளடக்கியது. எருசலேம் நகரமும் அதன் மேன்மையான ஆலயமும் இருந்தது யூதேயாவில். இங்கேதான் அரச வம்சாவழிகளும், முதன்மைக் குடிமக்களும் வாழ்ந்தனர். அதற்குக் கீழ் இருந்து கலிலேயா விவசாயிகள் மற்றும் தினக்கூலிகள் வாழும் நாடு. யூதேயாவிற்கு மேலிருந்த சமாரியாவில் அசீரியர்களுக்கும், யூதர்களுக்கும் பிறந்த கலப்பின மக்கள் என்று சொல்லப்பட்ட சமாரியர்கள் வாழ்ந்தனர். முதல் ஏற்பாட்டு நூலின் படி தாவீது அரசரின் சொந்த ஊர் பெத்லகேம். பெத்லகேம் என்றால் 'அப்பத்தின் வீடு' என்பது பொருள். இயேசுவை தாவீதின் மகன் என வானதூதர் சொன்னதால், தாவீதிற்கும் நாசரேத்திற்குமான 'கேப்பை' இந்தப் பயணத்தின் வழியாக 'ஃபில்லிங்' செய்கின்றார் லூக்கா.

மரியாளின் இந்தப் பயணம் நமக்குச் சொல்வது என்ன? 'வீ மஸ்ட் நாட் டேக் எக்ஸெப்ஷன்ஸ்!' இன்னைக்கு நம் நாட்டில் உள்ள பெரிய பிரச்சினையே இதுதான்: ஒருதலைப்பட்சம். இருக்கிறவனுக்கு ஒரு சட்டம். இல்லாதவனுக்கு வேறு சட்டம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று நாம் வெளியே சொல்லிக் கொண்டாலும், சட்டம் எல்லாரையும் ஒன்று போல ஆட்சி செய்வதில்லை. மேலும், தனி நபர் தன் அதிகாரம், ஆள்பலம் மற்றும் பணத்தை வைத்து தன்னை 'எக்ஸெப்ஷன்' ஆக்கிக் கொள்ளலாம். டிராஃபிக்கில் சிகப்பு லைட் எரிந்தாலும் கடந்து செல்லலாம். பொதுவிடத்தில் வண்டியை நிறுத்தலாம். சாமானியர்களை மிரட்டலாம். என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், மரியாள் தன் வயிற்றில் இருப்பது கடவுளின் மகன் தான் எனத் தெரிந்திருந்தாலும், தன் மகன் நினைத்தால் தனக்காக என்ன புதுமைகளையும் நிறைவேற்றலாம் என நினைத்தாலும், மற்றவர்களோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்கின்றார். எல்லாரும் தங்கள் ஊர்களைவிட்டுச் செல்லும் போது, நான் ஏன் கருவுற்றிருப்பதாகச் சாக்குப் போக்கு சொல்ல வேண்டும்? எனக்கு மட்டும் ஏன் எக்ஸெப்ஷன்? என்று புறப்படுகிறார். வழியில் பாதை கண்டிப்பாக எளிமையாக இருந்திருக்காது. பேறுகாலம் நெருங்குகின்ற வேளையில் பெரும் பயணமா? பயணத்தின் இறுதியில் தங்குவதற்குக் கூட சத்திரத்தில் இடமில்லையா? என்று கலங்கவில்லை. 'என்னய்யா பொறுப்பான ஹஸ்பன்ட் நீ!' என யோசேப்பைச் சாடவோ, ஏன் மேல் சுயஇரக்கம் காட்டவோ கூடத் துணியவில்லை.

வாழ்வின் இன்பங்கள் எல்லாம் சின்னச் சின்ன இடைஞ்சல்களிலும், துன்பங்களிலும் தான் வெளிப்படுகின்றன என மரியாளுக்குத் தெரியும். நம்ம வாழ்வில் பிரச்சினைகள் வரும் போது முதலாக நாம் செய்ய நினைப்பது அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதுதான். நமக்குத் தெரிந்தவர்களின் சிபாரிசுகளைக் கொண்டோ, நம் ஆற்றல், பணத்தைக் கொண்டோ 'எப்படியாவது' வெளிவந்திட நினைக்கிறோம். மரியாள் இன்று நமக்கு மாற்றுப் பாதை காட்டுகின்றார். 'கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்!' என்கிறார்.

மரியாளின் இரண்டாம் பயணம் கொண்டு வந்தது மீட்பு. மீட்பு என்பது ஏதோ மறுவுலகம் சார்ந்து அன்று. மீட்பு என்பது நாம் உள்ளுக்குள் உணரும் ஒரு விடுதலை உணர்வு. நெடுநாள் நம்மைப் பிடித்திருந்த மது, சுய இன்பம் மற்றும் விடமுடியாத ஏதோ ஒரு பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமக்குள் தோன்றும் விடுதலை உணர்வே மீட்பு. 'இனி நான் எதற்கும் அடிமையில்லை!' என்று நம் ஆழ்மனம் சொல்ல ஆரம்பிப்பதே மீட்பின் தொடக்கம். பெத்லகேமில் தான் மரியாள் இயேசு என்னும் மீட்பரை உலகிற்குக் கொணர்கின்றார். இயேசுவின் மீட்பு என்பது இந்த உணர்வுதான். தான் செல்லும் இடங்களில் இயேசு விதைத்தது இந்த உணர்வைத் தான். தான் அழைத்த முதற்சீடர்கள், தான் சந்தித்த சக்கேயு, தன்னிடம் இழுத்துவரப்பட்ட விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் என அனைவரையும் பிடித்திருந்த ஒரு அடிமை உணர்வை நீக்கி விடுதலை உணர்வை உள்ளத்தில் மலரச் செய்கின்றார். 'உயர்ந்தவர் - தாழ்ந்தவர்' என்ற உணர்விலிருந்து 'சமத்துவம்' என்ற உணர்விற்கு அழைக்கிறார். 'கடவுளைப் பெரிய நீதிபதி!' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் நடுவில் கடவுளை 'அப்பா!' என அழைக்கத் துணிகிறார். இந்தச் சின்ன சின்ன மாற்றங்கள் தாம் மீட்பு. மீட்பு என்பது ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக மாறி நம் வீடு நிறைய தங்கமும், டாலர் நோட்டுக்களும் இருக்கும் என்ற நிலை அல்ல. மாறாக, சின்னச் சின்ன வாழ்வியல் மாற்றங்களே மீட்பு.

மூன்று பேர் ஒரு பரிசல் எடுத்து ஆற்றின் அக்கரைக்கு மது அருந்தச் சென்றனர். மது போதையில் இக்கரை திரும்புவதற்காக பரிசலில் ஏறியவர்கள் பரிசல் போடத் தொடங்குகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக விடியத் தொடங்க இவர்களின் போதையும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தொடங்குகிறது. விழித்தெழுந்த அவர்கள் தாங்கள் இன்னும் அக்கரையிலேயே இருப்பதை உணர்கிறார்கள். காரணம் என்ன என்று சுற்றிலும் பார்க்கிறார்கள். மது போதையில் மரத்தில் கட்டியிருந்த பரிசல் கயிற்றை அவர்கள் அவிழ்க்கவில்லை.

நாமாகக் கட்டிக் கொண்டிருக்கும் பரிசல் கயிறுகளை அகற்றி மீட்பு என்னும் விடுதலை உணர்வுக்கு நம்மை அழைக்கிறது மரியாளின் இரண்டாம் பயணம்.

(பயணம் தொடரும்)

1 comment:

  1. அழகான பதிவு.தூரத்தைக் கடந்து செனறு மற்றவர்களிடம் மகிழ்ச்சியின் விதைகளை விதைக்க வேண்டும் என்று கூறும் மரியாவின் முதற் பயணமும்,வாழ்வின் இன்பங்கள் எல்லாம் சின்னச்சின்னத் துன்பங்களிலும்,இடைஞ்சல்களிலும் தான் வெளிப்படுகின்றன எனக்கூறும் மரியாவின் இரண்டாம் பயணமும் நாம் மரியாவிடம் வைத்திருக்கும் பக்தியையும் தாண்டி அவரின் வாழ்க்கையையே நாம் ஒரு பாடமாகக் காெள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன.பரிசலையே அவிழ்க்காமல் கரையைக் கடக்க நினைப்பவர்கள் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார்கள்.மரியாளை ஒரு புதுக்கோணத்தில் காட்ட முயலும் தந்தையின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete