Wednesday, January 14, 2015

பை தெ ரிவர் பியத்ரா ஐ சேட் டவுன் அன்ட் வெப்ட்

இந்த விடுமுறையில் நான் படித்த மூன்று புதினங்களில் முதன்மையானது இது. ஏழு ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்திருந்தாலும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இதை வாங்கிப் படித்தேன். 'பியத்ரா ஆற்றின் அருகே அமர்ந்து நான் அழுதேன்' - இதன் ஆசிரியர் பவுலோ கோயலோ.

காதலைப் பற்றிய கதை. அவளது பெயர் பிலார். அவள் தான் கதாநாயகி. அவளுக்கு மட்டும் தான் இந்த நாவலில் பெயர் இருக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை. பல்கலைக்கழக வாழ்க்கை வெறுத்துப் போனதால் வாழ்வில் அர்த்தத்தைத் தேடி பயணம் செய்கிறாள். பிலார் ஒரு கத்தோலிக்க இளவல். ஆனால் கத்தோலிக்க மதத்தின் ஆணாதிக்கமும், அடக்குமுறையும், சட்ட திட்டங்களும் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் கடவுள் நம்பிக்கைiயுயும் இழக்கத் தொடங்குகிறாள். அவளது பயணத்தில் தான் சின்ன வயதில் காதலித்த தன் காதலனைக் கண்டு கொள்கிறாள். ஆனால் அவன் இப்போது ஒரு ஆன்மீகப் போதனையாளராகவும், அற்புதங்கள் செய்யும் குருமாணவனாகவும் இருக்கிறான். அவனைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம். அவன் மற்றவர்களுக்குப் பணி செய்ய வேண்டும், வாழ்வை தியாகம் செய்ய வேண்டும் என்பது மற்றொரு பக்கம். அவள் சந்தித்த அவன் அவளைக் கண்டு கொள்கிறானா, அவள் தன் வாழ்வின் அர்த்தத்தை அடைகிறாளா, அவன் குருவாக மாறுகின்றானா அல்லது அவளை மணந்து கொள்கின்றானா என்பதே கதையின் ஓட்டம்.

கதையின் பிணைப்பு நூலாக இருப்பது மரியாள் பக்தி. டிசம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படும் அன்னை மரியாளின் அமலோற்பவ திருநாளில் முன்னும், திருநாளின் போதும், திருநாளின் அடுத்த நாளும் என மூன்று நாட்களின் நிகழ்வே இந்தப் புதினம்.

இந்தப் புதினத்தைப் படித்த பின் தான் எனக்கு அன்னை மரியாளின் மேல் சின்ன வயதில் நான் கொண்டிருந்து பக்தி மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது. அன்னையின் அமல உற்பவத்தின் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையே மகிழ்ச்சியின் அடித்தளம் என்று ஆசிரியர் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

இந்தப் புதினத்தில் என்னைத் தொட்ட வரிகளை என் நடையில் தர முயல்கின்றேன்:

1. மனிதர்களுக்கு ஆண், பெண் என்ற இரண்டு முகங்கள் இருப்பது போல கடவுளுக்கும், இயற்கைக்கும், நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்திற்கும் இருக்கிறது. மரியாள் கடவுளின் பெண் முகம். பெண் தான் சக்தி. பெண் தான் அன்பு. இந்தப் பெண்தான் பிரபஞ்சத்தின் இயக்கமாக இருக்கிறாள். இவளால் உயிருக்கு உருவம் கொடுக்க முடியும். கடவுளின் பெண் தன்மையை ஒதுக்கி வைக்கும் எந்த மதமும் உண்மையான மதமாக இருக்க முடியாது. தன் வாழ்வில் தனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் 'உன் சித்தம் என் செயல்' என்று பணிகின்றார் மரியா. அருட்பணியாளர்களுக்கு ஆற்றல் தருபவரும், புதிய அற்புதங்களைச் செய்யும் அருள் தருபவரும் இந்த அன்னை மரியாளே. அன்னை மரியாளை அன்பு செய்யும் ஒருவரால் தான் அன்பின் ஆழத்தை அறிய முடியும்.

2. நாம் மற்றவர்களை அன்பு செய்வது மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது மற்றவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும், பாதுகாப்பு தர வேண்டும் என்பதற்காகவோ அல்ல. அப்படிப்பட்ட அன்பில் ஒருவர் மற்றவரை வெறும் உயிரற்ற பொருளாகவே பார்க்கிறார். அன்பு செய்வது என்பது அடுத்தவரோடு இணைந்திருப்பது. அந்த இணைந்திருப்பில் கடவுளின் நெருப்புப் பொறியைக் காண்பது.

3. ஐ குட் ஹேவ். நான் இதைச் செய்திருக்கலாம்! இதுதான் நாம் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம். இந்த வாக்கியம் நமக்குக் கவலையையும், குற்ற உணர்வையும், பயத்தையும் தருகிறது. நான் காலையில் சீக்கிரம் எழுந்திருந்திருக்கலாம். நான் இன்னும் நன்றாகப் படித்திருந்திருக்கலாம். நான் அவளோடு இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருந்திருக்கலாம். நான் என் உடலை இன்னும் நன்றாகப் பார்த்திருந்திருக்கலாம். இப்படியாக 'இருந்திருந்திக்கலாம்!' என்று நாம் சொல்வது நம்மை இன்னும் கடந்த காலத்தின் சங்கிலிக்குள் கட்டி வைத்து விடுகிறது. இப்படிக் கவலைப்படுவதால் நாம் அவைகளை சரி செய்யவும் நம்மால் முடிவதில்லை. தேவையற்ற முறையில் நம் ஆற்றல் தான் வீணாகிறது.

4. அன்பு என்பது ஒரு அணைக்கட்டு போல. ஒரு சின்ன துவாரம் அணைக்கட்டில் விழுந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் வெளியேறினாலும், அந்தச் சின்ன நீரோட்டமே முழு அணைக்கட்டையும் சரித்து விடுகிறது. அப்போது வெளிவரும் தண்ணீர்ப் பெருக்கை யாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. அணைக்கும் சேதாரம். அணையை ஒட்டியிருக்கும் அனைவருக்கும் சேதாரம்.

5. அன்பு என்பது ஒரு வலை. அது வரும்போது அதன் வெளிச்சம் தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. அதன் நிழல் எப்போதும் மறைந்தே இருக்கிறது.

6. வாழ்வில் சிலவற்றிற்காக நாம் உயிரையும் கொடுக்கலாம். அந்தச் சிலவற்றில் ஒன்று அன்பு. ஒவ்வொருவர் மேல் நாம் காட்டும் அன்பும் மேலானது. அன்பில் சிறந்தது என்றும், சிறப்பற்றது என்றும் எதுவும் இல்லை. அன்பில் நாம் அடுத்தவரை அடுத்தவராகப் பார்ப்பதில்லை. நம் அன்பை அவரது அன்பில் பார்க்கிறோம்.

7. எப்போதும் வாழ்வில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டும். இந்தப் புதிய முயற்சிகளைச் செய்ய தடையாக இருப்பவர் நம்மில் இருக்கும் 'தி அதர்' (அதாவது, அடுத்தவர்!). இவர் எப்போதும் நெகடிவ்வாகவே பேசிக் கொண்டிருப்பார். பரீட்சைக்குப் படிக்கும் போது இவர் கொஸ்டின் பேப்பர் கஷ்டமாக இருக்கும் என்பார். டிக்கெட் ரிசர்வ் செய்யப் புறப்படும் போது கூட்டமாக இருக்கும் என்பார். வெளியில் செல்லும் போது வெதர் சரியில்லை என்பார். இப்படியாக நாம் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுவார் இவர். இவரை வெற்றி கொள்ளும் ஒருவரால் தான் வாழ்வின் அற்புதங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.

8. காத்திருப்பது வலியைத் தருகிறது. மறப்பதும் வலியைத் தருகிறது. ஆனால் இந்த இரண்டில் எதைச் செய்வது என்பதே பெரிய வலி.

9. அன்பு எப்போதும் புதியது. நாம் ஒருமுறை அன்பு செய்தாலும், இருமுறை அன்பு செய்தாலும், பத்து முறை அன்பு செய்தாலும் அன்பு என்றும் புதியதாகவே இருக்கிறது. அன்பு நம்மை மோட்சத்திற்கும் இட்டுச் செல்லும். நரகத்திற்கும் இட்டுச் செல்லும். ஏதாவது ஒரு இடத்திற்குக் கண்டிப்பாகக் கூட்டிச் செல்லும். நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

10. நாம் அன்பைத் தேடத் தொடங்கும் போது, அதுவும் நம்மைத் தேடி வரத் தொடங்குகிறது. வந்து நம்மை மீட்கிறது.

11. அன்பு என்பது ஒரு போதை. முதலில் அது உன்னில் பெரிய சரணாகதி உணர்வைத் தூண்டுகிறது. அடுத்த நாள் இன்னும் வேண்டும் என்பது போல இருக்கிறது. நீ அன்பு செய்பவரை இரண்டு நிமிடங்கள் நினைத்து விட்டு மூன்று மணி நேரங்கள் மறந்து விடுவாய். பின் அவரைச் சார்ந்திருக்கத் தொடங்குவாய். இப்போது அவரை மூன்று மணி நேரங்கள் நினைக்கத் தொடங்கி இரண்டு நிமிடங்களில் மறந்து விடுவாய். அவர் உன்னோடு இல்லாத போது உன் கைகள் நடுங்க ஆரம்பிக்கும். போதைக்கு அடிமையானவர்கள் எதையும் இழந்தாவது மதுவை வாங்க நினைப்பது போலவும், அதற்காக எவ்வளவும் அவமானப்படத் தயாரவது போலவும் நீயும் தயாராவாய்.

12. ஒவ்வொரு நாளும் விடியக் காரணம் நாம் மேஜிக் மொமண்டைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகவே. எல்லா நாளும் ஒரே போல இருப்பதில்லை. அப்படி இருக்கவும் கூடாது. ஒவ்வொரு நாளும் ஒரு அற்புதத்தைப் பொதிந்து வருகிறது. உன் கப்போர்டில் பெர்ஃப்யூமைத் திறக்காமலும், புதிய சட்டையை அணியாமலும் வைத்திராதே. நாளை உனக்கு எந்த அற்புதம் நிகழும் என்பது உனக்குத் தெரியாது.

13. நாம் ஒருபோதும் மற்றவர்களைச் சரி அல்லது தவறு என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் வலியும், ஒறுத்தலும் அவரவருக்கு மட்டுமே தெரியும்.

14. கடவுள் எல்லாருக்கும் கண்டிப்பாக இரண்டாவது வாய்ப்பைத் தருகின்றார்.

15. அன்பு செய்வது என்பது உன் பிடிப்பை இழப்பது..

16. கதைகளில் இளவரசிகள் தவளையை முத்தமிடுவார்கள். தவளை இளவரசனாக மாறும். நிஜ வாழ்வில் இளவரசிகள் இளவரசனை முத்தமிடுகிறார்கள். அவன் தவளையாக மாறிவிடுகிறான்.

17. நீ போய் உன் பொருட்களை எடுத்துக் கொண்டு வா. கனவுகள் செயல்களாக மாற வேண்டும்.

18. எல்லாக் காதல் கதைகளும் ஒன்றே.


1 comment:

  1. அன்பின் பல பரிணாமங்களை, தன் வலிகளை, சுமைகளை, சுவைகளை, இழப்புக்களை, இன்பங்களை, ஆற்றாமையை,விளைவுகளைத் தங்களுக்கே உரிய இயல்பான நடையில் சுவைபடக் வழங்கியிருக்கிறீர்கள்.ஆனாலும் என்னை வெகுவாக கவர்ந்த வரி இதுதான்.." அன்னை மரியாளை அன்பு செய்யும் ஒருவரால்தான் அன்பின் ஆழத்தை அறிய முடியும்". ' பியத்ராஆற்றின் அருகே அமர்ந்து நான் அழுதேன்.'...என்னையும் படிக்கத் தூண்டுகிறது்..

    ReplyDelete