Saturday, January 17, 2015

மாடுகளின் பாஷை!

உலகத்திலேயே முதல் மருத்துவர் அம்மா தான். நேற்று மாலை அம்மாவுக்கு ஃபோன் பண்ணும் போது என் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருந்தது. இருந்தும் சமாளித்துக் கொண்டு 'ஹலோ!' என்றேன். உடனே, 'என்னப்பா! காய்ச்சலா! தொண்டை கரகரப்பா இருக்கு!' என்று பதில் வந்தது அம்மாவிடமிருந்து. இந்த அம்மாக்கள் தான் பிள்ளைகளின் முதல் மருத்துவர்கள். முதல் வார்த்தையிலேயே என்ன நோயென்று கண்டுபிடித்து விடுகிறார்கள்.

அம்மாவிடம் பேசி முடித்துவிட்டு நெடுநாளாய்ப் பேசாமலிருந்து என் கல்லூரித் தோழி ஒருத்திக்கு ஃபோன் செய்தேன். அப்போதும் என் குரலில் கரகரப்பு. 'என்னடா! சாயங்காலமே தண்ணியா! புனேயில இருந்தப்ப நைட்லதான் தண்ணி! இப்ப ரொம்ப முன்னேற்றம்!' என்றாள்.
இப்போது நான் சத்திய சோதனைதான் செய்து பார்க்க வேண்டும்.

மனிதர்களின் குரலை வைத்து அவர்களின் மனோபாவத்தை அறிந்து கொள்வதில் தாயும், தோழியும் வேறுபடுகின்றனர்.

ஆனால் மாடுகளின் குரலை வைத்து அவைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஒருவர் எங்கள் ஊரில் இருந்தார். அவர் தான் இன்றைய கதாநாயகன். அவர் பெயர் சின்னச்சாமி. வண்டிக்கார சின்னச்சாமி என்றால் தான் எல்லாருக்கும் தெரியும். இரண்டு மாட்டு வண்டிகள் வைத்திருந்தார். ஒன்றை அவரும், அடுத்ததை அவர் மகன் சீனிராசும் ஓட்டுவர். எங்கள் ஊரிலேயே டயர் வைத்த வண்டிக்குச் சொந்தக்காரர் இவர். எங்கள் வீட்டுக்கு அருகில் தான் மாடுகளின் தொழுவம். சதா எங்க அம்மாவைத் திட்டிக் கொண்டே இருப்பார். எங்க அம்மா கழுவி ஊத்தும் பாத்திரத் தண்ணீர் எங்க ஏரியாவையே தீட்டாக்குகிறது என்று புலம்பிக் கொண்டே இருப்பார். ஆனால் இவர் கட்டி வைத்திருக்கும் மாடுகளால் தான் எங்கள் ஊருக்கே நோய் வருகிறது என்று யாராவது சொன்னால் வரிந்து கட்டிக் கொண்டு போவார். அவருக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே பிடிக்காது. ஏனென்றால் அவரது கடைசி மகன் யாருக்கும் தெரியாமல் கிறிஸ்தவராக திருமுழுக்கு பெற்று வந்து விட்டார்.

ஆனால் மாட்டுப் பொங்கல் அன்று எங்கள் எல்லாரையும் சாமி கும்பிட அழைப்பார். இன்று மாட்டுப் பொங்கல் அன்று அவரையும், அவரது மாடுகளையும் நினைவுகூர்வது சாலப் பொருத்தமாக இருக்கிறது.

கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து, மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்யப்பட்டு எங்கும் சாம்பிராணி வாடை அடிக்கும் இன்று. பொங்கலையும், கரும்பையும் மிக அன்பாகத் திணித்துக் கொண்டிருப்பார் தன் மாடுகளுக்கு. இவர் மேல் சட்டை அணிந்து நானும் பார்த்ததில்லை. அந்த மாடுகளும் பார்த்ததில்லை. ஆனால் மாடுகளின் பாஷை இவருக்குப் புரியும். மாடுகளின் கண்களை வைத்தே அவைகளின் பசியையும், நிறைவையும் இனங்கண்டு கொள்வார்.

இவரின் மாட்டு வண்டியில் தான் நான் நிறைய நாட்கள் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறேன். டயர் வைத்த வண்டி எப்போதும் மெதுவாகத்தான் போகும். ஆனால் வெறும் மரத்தால் ஆன வண்டி வேகமாகப் போகும் என்பதை என் பக்கத்து வீட்டு கோகிலா அக்கா பூச்சி மருந்து சாப்பிட்ட போதுதான் கண்டு கொண்டேன். அவரை அப்படிப்பட்ட ஒரு வண்டியில் தான் கொண்டு போனார்கள். மாடுகள் ஓட்டம் பிண்ணி எடுத்தன.

மாடுகளுக்கும் மனிதர்களின் உணர்வுகள் புரியத்தான் செய்கின்றன.

எங்க வண்டிக்காரரின் மாடுகளின் ஒவ்வொரு அங்கமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்தன என்றே நான் எண்ணுகிறேன்.

அ. லாடம். மாடுகள் பூமித்தாயோடு ஏற்படுத்திக் கொள்ளும் பந்தத்தின் காரணமாக இருப்பது லாடம். மாடுகளின் குளம்புகள் சிதைந்து போகாமல் இருக்கவும், சாலைகளின் ஸ்திரத்தன்மையை எதிர்த்து நிற்கவும் லாடம் துணை செய்கிறது. நம் வாழ்வில் நாம் எளிதில் இழந்து விடக் கூடியது இந்த ஸ்திரம் தான். நாம் அணியும் செருப்புகள் கூட தற்காலிக லாடங்கள் தாம். ஆனால் அவை அலங்காரமாகத் தான் இருக்கின்றனவே தவிர, அவை செய்யக் கூடிய வேலைகளைச் செய்வதில்லை. பூமியின் மேல் ஸ்திரமாய் நிற்கும் ஒருவரால் தான் துணிந்து வேர் விட முடியும்.

ஆ. கடிவாளம். மாடுகளையும் அதன் இலக்கையும் இணைப்பது இந்தக் கடிவாளம். கடிவாளம் இல்லாத மாடு கண்டபடி செல்லும். மாடுகளின் பயணத்திற்கே கடிவாளம் அவசியம் என்றால் மனிதர்களின் பயணத்திற்கு?

இ. மணி. மாடுகளையும் அவைகளின் மாஸ்டரையும் இணைக்கும் ஒலி மணியோசை. நான் இங்கே தான் இருக்கிறேன். நான் சரியா இடத்தில் தான் இருக்கிறேன் என்று இந்த மணியை வைத்து மாடுகள் தங்கள் தலைவர்களுக்கு தங்களின் இருப்பிடங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நாம் மட்டும் தான் நம்மைப் படைத்தவர் முன் இருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளவும், நம் மணிகளை சைலண்ட் மோடில் வைத்துக் கொள்ளவும் துணிகின்றோம்.

ஈ. மூக்கணாங்கயிறு. மாடு தன் நிலை மாறிச் செல்லும் போது அதை நெறிப்படுத்த தலைவன் பயன்படுத்தும் கயிறு இது. அன்றாட வழக்கில் கல்யாணத்தையும், தாலிக் கயிற்றையும் மூக்கணாங்கயிறு என்று குறிப்பிடுவர்.

உ. வாய்மூடி. செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதை மட்டும் செய்வது. ஆக, நோ மல்டி டாஸ்கிங். செய்கின்ற வேலையை ஒழுங்காகச் செய்யவும், முழுமையாகச் செய்யும் மாடுகளை நெறிப்படுத்துவது இந்த வாய்மூடி.

மாட்டுப்பொங்கல் ஆகிய இன்று மாடுகளை நாம் நினைவுகூறாவிட்டாலும், மாடுகளோடு தொடர்பு கொண்டிருக்கும் இந்த உபகரணங்களை நினைவுகூர்வது சாலப் பொருந்தும். மனிதன் தனக்குப் பயன்படுத்தியதைத் தான் காலப்போக்கில் தன் விலங்குகளுக்கும் பயன்படுத்தத் தொடங்குகிறான்.

இன்றும் அந்த வண்டிக்கார சின்னச்சாமி எங்க ஊரின் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அவர் வளர்த்த மாடுகளும், வைத்திருந்த வண்டிகளும் இன்று அவரோடு இல்லை. அவரது மகன்கள் இன்று ஆட்டோ ஓட்டத் தொடங்கிவிட்டனர். அவர் இன்று யாரோடும் பேசுவதும் இல்லை. மாடுகளின் பாஷை மட்டுமே புரிந்த அவருக்கு மனிதர்களின் பாஷை ஏனோ புரிவதில்லை.


3 comments:

  1. அழகான,எதார்த்தமஆனதொரு பதிவு.மாட்டுப் பொங்கலன்று மாடுகளையும் தாண்டி அவற்றிறோடு தொடர்புள்ள லாடம்,மணி,கடிவாளம்,மூக்கணாங்கயிறு போன்றவை பற்றியும் அவை மனிதனுக்குச் சொல்ல வரும் செய்தி பற்றியும் எளிமையாக ஆனால் அழுத்தமாகக் கூறியுள்ளவிதம மெச்சுதற்குறியது.மனது வைத்தால் மனிதன் ஒரு கல்லைக்கூடத்தன் வழிகாட்டியாகக் கொள்ளலாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் விதம்.......தந்தையே தங்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.

    ReplyDelete
  2. அழகான,எதார்த்தமஆனதொரு பதிவு.மாட்டுப் பொங்கலன்று மாடுகளையும் தாண்டி அவற்றிறோடு தொடர்புள்ள லாடம்,மணி,கடிவாளம்,மூக்கணாங்கயிறு போன்றவை பற்றியும் அவை மனிதனுக்குச் சொல்ல வரும் செய்தி பற்றியும் எளிமையாக ஆனால் அழுத்தமாகக் கூறியுள்ளவிதம மெச்சுதற்குறியது.மனது வைத்தால் மனிதன் ஒரு கல்லைக்கூடத்தன் வழிகாட்டியாகக் கொள்ளலாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் விதம்.......தந்தையே தங்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.

    ReplyDelete
  3. Anonymous1/30/2015

    Super Yesu. Kalakkiteenga

    ReplyDelete