Saturday, January 24, 2015

மரியாளின் நிழல்கள் - 3

6. தெபோரோ

பெண் நீதித்தலைவரான இவரைப்பற்றி நாம் நீதித்தலைவர்கள் நூல் 4 மற்றும் 5 ஆம் பிரிவுகளில் வாசிக்கலாம். இஸ்ராயேல் மக்களை கானானியரின் தலைவன் யாபினிடமிருந்து காப்பாற்றுகின்றார். வெற்றி தன் வழியாக வந்தாலும் அதை மற்றொரு பெண்ணுக்குக் கொடுத்து அழகு பார்த்தவர். பாராக்குடன் இணைந்து சீசராவை வெற்றி கொண்டபின் அவர் பாடும் பாடல் அவரை ஒரு பாடலாசிரியராகவும் நமக்குக் காட்டுகிறது.

தெபோராவின் பாடலுக்கும், மரியாளின் பாடலுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன. இரண்டுமே ஆண்டவராகிய கடவுளின் வல்லமையை எடுத்துரைப்பவை. தெபோராவைப் போலவே மரியாளும் எந்தவொரு வெற்றியையும் தனக்காக வைத்துக்கொண்டவர் அல்லர்.

7. ரூத்து

மோவாபு நாட்டுப் பெண். தன் கணவன் இறந்தவுடன் தன் மாமியார் ரூத்தைப் பற்றிக் கொள்கின்றார். 'நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன். அங்கேதான் என் கல்லறையும் இருக்கும். சாவிலும் உம்மைவிட்டுப் பிரியேன்.' (காண் ரூத்து 1:16-17) என்னும் ரூத்தின் வார்த்தைகள் காலத்தை வென்றவை. யூதா நாட்டில் போவாசை என்பவரை மணந்து அவர் வழியாக ஓபேதைப் பெற்றெடுக்கின்றார். இந்த ஓபேதின் பேரன் தான் தாவீது அரசர்.

மரியாளும் ரூத்தைப் போல தன் முழுப் பிரமாணிக்கத்தையும் கடவுளுக்குக் காணிக்கையாக்குகின்றார். மேலும், தாவீதின் வழிமரபில் வரும் கடவுளின் மகன் இயேசுவுக்குத் தாயாகின்றார்.

8. அபிகாயில்

தாவீதின் வாழ்வில் வரும் பெண்களில் அபிகாயிலை எனக்கு மிகவும் பிடிக்கும். 1 சாமுவேல் 25ல் இவரைப் பற்றி வாசிக்கலாம். மிகச் சாதாரணமான பெண். மிக அழகும். மிகுந்த செல்வமும் உடையவர். இவரது கணவன் ஒன்றுக்கும் உதவாதவர். இவர் தான் ஊரின் தலைவி. மேலாண்மைத் தத்துவங்களை நாம் இவரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். தாவீதின் மனைவியாக மாறுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இவர் சொன்ன வார்த்தைகள் எவை தெரியுமா? 'இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!' (1 சாமுவேல் 25:41). அபிகாயில் என்றால் 'தந்தையின் மேன்மை' என்பது பொருள்.

மரியாளுக்கு மங்கள வார்த்தை அறிவித்த கபிரியேல் தூதரிடம் அவர் சொல்லும் வார்த்தைகளும் அபிகாயிலின் வார்த்தைகளை ஒத்தே இருக்கின்றன: 'இதோ! நான் ஆண்டவரின் அடிமை!' (லூக்கா 1:38).

9. எஸ்தர்

அரசன் எகிசரேயு அவர்களால் அரசியாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர் இவர். இவரின் இனத்து மக்களெல்லாம் சாவிற்குக் கையளிக்கப்பட்டாலும் இவருக்கு மட்டும் இந்தச் சிறப்பான பேறு கிடைக்கின்றது. இறுதியில் தன் இனத்தவரை மீட்பதற்காக தன் வாழ்வையே பணயம் வைக்கத் துணிகின்றார்.

மனுக்குலத்தில் ஒருவராகத் தோன்றினாலும் தொடக்கமுதலே பாவத்திலிருந்து தனித்து வைக்கப்பட்டவர் மரியாள். தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மனித இனத்தின் மீட்பிற்கான வாசலை தானே திறந்து விடுகின்றார்.

இப்படியாக, இந்த முதல் ஏற்பாட்டு ஒன்பது முகங்களில் மரியாளின் முகம் நிழலாடுகின்றது.

1 comment:

  1. மிகச்சுறுக்கமான வரிகள் எனினும் அவ்வரிகளில் இந்த மேன்மைமிக்க பெண்களின் வாழ்க்கையின் நோக்கத்தையே, அவர்கள் வாழ்ந்த முறையையே அவ்வரிகளில் அடக்கிவிட்டீர்கள். இவர்கள் யாவரின் வாழ்க்கையிலும் இறைபிரமாணிக்கமும், தங்களைச் சார்ந்திருப்போரிடம் அவர்கள் காட்டும் விசுவாசமும் வெளிப்படுகிறது.இதில் அபிகாயில் போன்ற பெண்களைப் பற்றி எதுவுமே கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆக மரியாளின் முகம் கொண்ட, அவரின் நிழலாக வரும் இத்துணை பெண்களை வெளிச்சத்திற்குக் கொணர்ந்து அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உந்துதல் தந்த ஆசிரியருக்குப் பாராட்டும், நன்றியும்.இப்பெண்களைப்பற்றிக் கூறுவதன் மூலம் மரியாளின் புகழ் பாடியிருக்கும் தங்களை மரியாள் கர்ம பிடித்து வழி நடத்தட்டும்......

    ReplyDelete