Tuesday, January 20, 2015

மரியாளின் பயணங்கள் - 3

3. பெத்லகேமிலிருந்து எகிப்திற்கு

பெத்லகேமில் இயேசு பிறந்து, இடையர்களும், ஞானிகளும் வந்து வணங்கியபின் ஒரு பெரிய பிரச்சனை ஏரோதின் உருவில் வருகின்றது. 'தன்னைப்போல் மற்றொரு அரசனா!' 'தன் அரியணைக்கு ஆபத்தா!' என நினைக்கிற ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறான் மத்தேயு நற்செய்தியாளர் குழந்தை இயேசுவை அவரது பெற்றோர்கள் தூக்கிக் கொண்டு எகிப்திற்குத் தப்பியோடுவதாக எழுதுகின்றார் (காண். மத்தேயு 2:13-15). இயேசு பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்பது லூக்கா நற்செய்தியாளருக்கு எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு மத்தேயு நற்செய்தியாளருக்கு இயேசு எகிப்திற்குச் செல்ல வேண்டும் என்பதும் முக்கியம். இந்த இடத்தில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நற்செய்தியாளர்களும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே நமக்கு எழுதித்தரவில்லை. ஒவ்வொருவரும் தன் சிந்தனைக்கு, கற்பனைக்கு, தன் குழுமத்தின் தேவைக்கு ஏற்றவாறு எடிட் செய்தே வழங்குகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய இஸ்ரயேல் இனத்தின் தலைவராகவும், புதிய மோசேவாகவும் முன்வைக்க விழைகின்றார். எப்படி பழைய இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குக் கடந்து வந்தனரோ (காண் விடுதலைப்பயணம் 13-14) அப்படியே இயேசுவையும் எகிப்திற்கு அனுப்பி அங்கிருந்து திரும்பி வருபவராக எழுதுகின்றார்.

'வானதூதர் என் கனவில் வந்து எச்சரித்தார்! நாம் எகிப்திற்குப் போகப்போகிறோம்!' என்று யோசேப்பு மரியாளிடம் சொன்னவுடன் மரியாள் என்ன நினைத்திருப்பார். 'என்ன எகிப்தா?' என்று பதறியிருப்பார். 'அங்கேதானே நம் முன்னோர்கள் பாரவோனின் அடிமைத்தனத்தில் சிக்கித் தவித்தனர்!' 'அங்கேதானே அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்தார்கள்!' என்று கலங்கியிருப்பார். 'மறுபடியும் அந்தத் துன்பத்தின் சுவடுகளுக்குள் நாம் நடந்து செல்ல வேண்டுமா?' என்று துடித்திருப்பார். இருந்தாலும், புறப்படுகின்றார். கடந்த காலத்தின் காயங்களை நாம் எப்படி குணப்படுத்துவது என்பதற்கு மரியாளின் இந்தப் பயணம் நமக்குப் பாடம் சொல்கிறது. நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒரு 'எகிப்து' இருக்கும். நம்மை யாராவது அடிமைப்படுத்தியிருந்த நேரம், நம் உரிமை பறிக்கப்பட்ட நேரம், நாம் வெறும் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட நேரம், நம் உழைப்பு உறிஞ்சப்பட்ட நேரம், நம் உறவுகளைக் காண முடியாத நேரம், சோகம், தனிமை, வெறுமை என தனித்திருந்த நேரம், மற்றவர்கள் நம் வெந்த புண்ணிலேயே வேல்பாய்ச்சிய நேரம் என கடந்த காலம் விட்டுச்சென்ற காயங்கள் வடுக்களாக இருக்கின்றன. இந்த வடுக்களையும், காயங்களையும் வெற்றி கொள்வது எப்படி? மரியாள் நமக்குச் சொல்வது இதுதான்: 'எகிப்து நாட்டில் நம் முன்னோர்கள் அடிமைகளாய் துன்பம் அனுபவித்தது எந்த அளவிற்கு உண்மையோ, அந்த அளவிற்கு உண்மை யாவே இறைவன் நம் மக்களை சந்திக்க இறங்கி வந்தது! அவர் நம் மக்களுக்காக மோசே மற்றும் ஆரோனை அனுப்பவில்லையா! பாஸ்கா செம்மறியின் இரத்தத்தால் நம் தலைப்பேறுகளைக் காக்கவில்லையா? பத்துக் கொள்ளை நோய்களால் எதிரிகளை வாட்டவில்லையா? நம் பாதங்கள் தண்ணீரில் நனையாதபடி செங்கடலை இரண்டாகப் பிளந்து நம்மை நடத்திச் செல்லவில்லையா? பாரவோனின் படைகளையெல்லாம் ஆழ்கடலில் ஆழ்த்தவில்லையா? பகலில் மேகத்தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் இருந்து நம்மை வழிநடத்தவில்லையா? மன்னாவும், காடையும் தந்து பராமரிக்கவில்லையா? ஆக, துன்பம் வந்தபோதுதான் இறைவனின் அருட்கரமும் உடன் வந்தது. ஆக, காயம் வந்த இடத்தில் அதைத் துடைக்க கடவுளின் பிரசன்னமும் உடனிருந்ததே. அதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டாமா?!'
நாம் நமக்கு வரும் தடைகளைத் தாண்டும் போதெல்லாம் அந்தத் தடைகளை நினைத்துத் துவண்டுவிடாமல், அந்தத் தடைகள் கொண்டு வந்த நல்லவைகளுக்கு நன்றி சொல்லவும் பழகிக்கொள்ள வேண்டும். இறைவனின் அருட்கரம் மீண்டும் உடனிருக்கும் என்ற நம்பிக்கை பெற வேண்டும்.

மரியாளின் இந்தப் பயணத்தின் வெளிப்பாடு பாதுகாப்பு. துன்ப மேகங்கள் சூழும்போது சிறிய மின்னல் கீற்று போல வரும் கடவுளின் உடனிருப்பு கூட வாழ்க்கைப் பயணத்திற்கு பெரிய விளக்குத்தூணாக இருக்கும்.

இந்த நிகழ்வைப் பற்றி வீரமாமுனிவர் அவர்கள் எழுதிய தேம்பாவணியில் ஒரு குறிப்பு உண்டு. எகிப்திற்குப் போகிறோமே! அங்கு என்ன நடக்குமோ? என்று யோசேப்பும், மரியாளும் புலம்பும்போது கடவுள் அவர்களுக்குத் தோன்றி, 'என் விரலைப் பிடித்துக்கொள்!' என்பார். 'நீர் எங்கே இருக்கிறீர் என்றே தெரியவில்லை. அப்படியிருக்க உன் விரலை நான் எப்படிப் பிடிப்பேன்?' எனக் கேட்பார் வளனார். 'மரியாளின் கையில் இருக்கும் குழந்தையே என் விரல்' என்பார் கடவுள்.
நம் உள்ளங்கையில் கடவுளை வைத்துக் கொண்டு 'அவர் எங்கே?' என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் குனிந்துதான் பார்ப்போமே.


4. நாசரேத்திலிருந்து எருசலேமிற்கு

குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடிய ஏரோது இறந்ததும் திருக்குடும்பம் மறுபடியும் இஸ்ரயேல் நாடு திரும்புகிறது (காண். மத்தேயு 3:21-23). தான் புறப்பட்டுச் சென்ற பெத்லகேமிற்குத் திரும்பாமல், கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்துக்குத் திரும்புகின்றனர் யோசேப்பும், மரியாளும் தங்கள் குழந்தையுடன். இந்த இடத்தில் மத்தேயு தன் இரண்டு இறையியில் இலக்குகளை அடைந்து விடுகின்றார். அதாவது இந்த நிகழ்வின் வழியாக, 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்!' என்று இறைவாக்கினர் ஓசேயா சொன்னதும் நிறைவேறுகிறது (காண். ஓசேயா 11:1). மேலும், இயேசு நாசரேத்தில் குடியிருந்ததால் அவர் 'நசரேயன்' எனவும் அழைக்கப்படுகிறார். 'நசரேயன்' என்பதற்கு நாசரேத்தூர்காரர் என்ற பொருள் மட்டுமல்ல, 'கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற பொருளும் உண்டு (காண். நீதித்தலைவர்கள் 13:7). இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் அவரைப் பின்பற்றியவர்கள் பல இடங்களில் 'நசரீன்கள்' எனவே முதலில் அழைக்கப்பட்டனர். முதன் முதலாக அந்தியோக்கியாவில் தான் இயேசுவைப் பின்பற்றியவர்கள் 'கிறிஸ்தவர்கள்' என்ற பெயரைப் பெறுகின்றனர் (காண். திருத்தூதர் பணிகள் 11:26).
புதிய குழந்தையோடு மரியாள் தன் சொந்த ஊராகிய நாசரேத்திற்குச் சென்றபோது மக்கள் அவரை எப்படி அணுகியிருப்பார்கள். 'ஏய்! இங்க பாருடி! மரியாளுக்குக் குழந்தை!' என ஓடிவந்து பார்த்திருப்பார்களா? அல்லது 'கணவனை அறியாமலேயே கருத்தாங்கியவள் ஆயிற்றே!' என்று கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்களா? மரியாள் என்னவோ இந்த இரண்டு ரியாக்ஷன்களையும் ஒரே மாதிரிதான் எடுத்திருப்பார்.

நாசரேத்தில் வந்து ஓய்ந்திருக்கும் மரியாள் மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேமிற்குக் கொண்டு செல்கின்றார் (காண். லூக்கா 2:22). மரியாளைக் கொல்லும் அடுத்த உணர்வு வறுமை. பெரிய செல்வந்தர்கள் தங்கள் தலைப்பேறுகளை அர்ப்பணிக்க இளங்காளைகளையும், செம்மறியாடுகளையும் அர்ப்பணிக்கும் வேளையில், கடவுளின் ஒரே திருமகனை அர்ப்பணிக்க அவருக்கு வாங்க முடிந்ததெல்லாம் இரு மாடப்புறாக்கள் தாம். மரியாள் தன் வாழ்வின் நான்காம் பயணத்தில் கடவுளின் திருச்சட்டத்தை அர்ப்பணிப்பவராக நம் கண்முன் வருகின்றார். கடவுள் தன் மக்களை அன்பு செய்கிறார் என்பதன் அடையாளமே அவர் ஏற்படுத்திய உடன்படிக்கையும், அந்த உடன்படிக்கையோடு வந்த சட்டங்களும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகளை (காண். மாற்கு 12:17, மத்தேயு 22:21) முழுமையாக வாழ்ந்தவர் மரியாள். கடவுளுக்கு உரிய இடத்தைக் கடவுளுக்குக் கொடுக்கின்றார். குழந்தை இயேசுவை அர்ப்பணிக்க வந்த மரியாளை சந்திக்க இருவர் வருகின்றனர்: ஒருவர் சிமியோன் மற்றவர் அன்னா. தங்கள் வாழ்வின் அஸ்தமனத்தில் இருந்தாலும் குழந்தை இயேசுவைக் கைகளில் ஏந்துவதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையைப் பற்றிய வியப்பானவற்றையும் கூறுகின்றனர் (காண். லூக்கா 2:33). மரியாளின் இந்தப் பயணம் வெளிப்படுத்துவது வியப்பு. நம் வாழ்வில் நாம் கடவுளுக்கு ஏற்பானவற்றைச் செய்யும் போது, நடக்க வேண்டியது நடப்பதோடு மட்டுமல்லாமல், வியப்புகளும் வந்து சேர்கின்றன. ஆண்டவரின் வியத்தகு செயல்களை சின்னஞ்சிறு வகைகளில் நாமும் உணர்ந்திருப்போம். காசில்லையே என்று புலம்பும் தருணத்தில் நண்பர் ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார், அவசரமாகப் போக வேண்டும் பஸ்சும் இல்லையே என்று நினைக்கும் போது நண்பர் ஒருவர் 'லிஃப்ட்' கொடுப்பார். 'உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆகவேண்டியதாயிற்றே!' என்று நாம் புலம்புவோம். ஆனால் அப்படி அட்மிட் ஆனபோதுதான் நாம் மறந்து போன ஒரு இனிமையான பழைய உறவைப் புதுப்பித்திருப்போம். 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பார்கள். 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் நமக்கு இன்னும் அதிக வியப்புகளை நினைக்கும்' என்பதே எதார்த்தம். இப்படியாக, வெறும் இரண்டு மாடப்புறாக்களோடு சென்றவர்களுக்கு இரண்டு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. ஆண்டவரின் வியத்தகு செயல்களை உணர்வதற்கு திறந்த மனம் ஒன்று இருந்தால் மட்டும் போதும்.

ஒரு ஏழைக்குடியானவனின் வீட்டுக் கூரை ஒருநாள் தீக்கிரையாகிவிட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வந்து ஆறுதல் சொன்னார்கள். 'இனி இவன் என்ன செய்யப்போகிறானோ! மழையிலும், குளிரிலும் வாடப்போகிறான்!' என்று அண்டைவீட்டர்கள் புலம்பிக் கொண்டிருந்தபோது, அவன் சொன்னானாம், 'கூரை எரிந்துவிட்டது. இனி நட்சத்திரங்கள் நன்றாகத் தெரியும்!'

'வறுமை, எளிமை இவர்கள் எப்படி இருக்கப்போகிறார்களோ' என்று தன் சொந்த ஊர் மக்கள் தன்மேல் பச்சாதாபப்பட்டபோது, இறைவனின் அருட்கரத்தோடு அவரின் வியத்தகு செயல்களை அனுபவிக்கின்றேன் என்று தலைநிமிர்கின்றார் மரியாள்.

(பயணம் தொடரும்)


1 comment:

  1. ஒரு கூடை முத்துக்களை ஒன்றாகச் சிதறவிட்டு"அள்ளிக்கோ" என்று சொல்வதுபோல் உள்ளது இன்றையப்பதிவு.கடந்த காலக் காயங்களையும்,தடைகளையும் குறிப்பிட்டு அத்தடைகளை நாம் தாண்டும் போதெல்லாம் அவை கொண்டுவந்த நல்லவைகளைப் பட்டியலிட்டுள்ள விதம் மிக அருமை.துன்ப மேகங்கள் நம்மை சூழும்போது மின்னல் கீற்றாய் வரும் இறைவனின் உடனிறுப்பை எடுத்துக்காட்டும் தேம்பாவணிக்குறிப்பு,மரியாளை நோக்கி விடப்பட்ட அம்புகளுக்கு அவர் காட்டிய பொறுமைபற்றி சொல்லியிருக்கும் விதம்,அவரின் வறுமையும் ஏழ்மையையும் அவர் எடுத்துக்கொண்ட விதம் ....இவை அனைத்துமே மரியாளைத்" தாய் " என்று மார்தட்டிக்கொள்ளும் அனைவருமே பாராட்டிப் பின்பற்ற வேண்டியவை என்று அழகோடும்,நயத்தோடும் கூறியிருக்கும் விதம் அழகு.இறுதியாக தன் குடிசை தீக்கிரையான நிலையிலும் அதை அந்த ஏழைக்குடியானவன் எடுத்தக்கொண்ட விதம்...ஆக தந்தையே!இன்று தங்களின் எழுத்து ஒவ்வொன்றுமே பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட வேண்டியவை.தன் மைந்தனோடு கூடியஅன்னை மரியாளின் உடனிறப்பு என்றென்றும் தங்களுக்குத் துணை வர வாழ்த்துகிறேன்.....

    ReplyDelete