Sunday, August 6, 2023

மிகப்பெரும் பளு

இன்றைய இறைமொழி

திங்கள், 7 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

எண் 11:4-15. மத் 14:22-36.

மிகப்பெரும் பளு

1. இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை அடைவதற்கு முன்னர் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் சுற்றித்திரியுமாறு அவர்களை விட்டுவிடுகிறார் ஆண்டவராகிய கடவுள். அந்த ஆண்டுகளில் நடந்த ஒரு நிகழ்வை நம் கண்முன் கொண்டுவருகிறது இன்றைய முதல் வாசகம். தினமும் மன்னாவை மட்டுமே உண்டு வந்த இஸ்ரயேல் மக்களுக்கு அது சலித்துப்போகிறது. தாங்கள் எகிப்தில் உண்ட இறைச்சி உணவு நினைவுக்கு வருகிறது. மன்னாவை மட்டுமே உண்டதால் தங்கள் வலிமையும் குன்றிப்போனதாக உணர்கிறார்கள். தாங்கள் பெற்ற விடுதலையைவிட, அடிமைத்தன வீட்டில் தாங்கள் உண்ட இறைச்சியையே அவர்கள் பெரிதாகக் கருதுகிறார்கள். விடுதலை அவர்களுக்கு இலவசமாகக் கிடைத்ததால் அதன் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை. மக்களின் முணுமுணுத்தல் அழுகையாக மாறி மோசேயின் காதுகளில் விழுகிறது. மோசே கடவுளிடம் முறையிடுகிறார். சுமக்க இயலாத பளுவைக் கடவுள் தன் சுமத்தியதாக அவர் புலம்புகிறார். 'இறைச்சிக்கு நான் எங்கே போவேன்?' என்னும் மோசேயின் கேள்வியில் அவருடைய கையறுநிலையும் கோபமும் வெளிப்படுகிறது. தன் உயிரை எடுத்துவிடுமாறு கடவுளிடம் கேட்கிறார். இறைவாக்கினர்கள் தங்கள் பணி ஏற்றுக்கொள்ளப்படாதபோது, தாங்கள் கைவிடப்பட்டதாக உணரும்போது இப்படிப் புலம்புவதை எலியா மற்றும் யோனா நிகழ்வுகளிலும் வாசிக்கிறோம்.

2. பாலைநிலத்தில் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த இயேசு உடனடியாகத் தம் சீடர்களைப் படகேறி அக்கரைக்குச் செல்லுமாறு அனுப்பிவிட்டு, இறைவேண்டல் செய்வதற்குத் தனியே மலைமேல் ஏறுகிறார். இரவின் நான்காம் காவல் வேளையில் கடல்மேல் நடந்து வருகிறார். சீடர்கள் அவரைக் கண்டு அஞ்சுகிறார்கள். பேதுரு தானும் நடக்க விரும்புகிறார். ஆனால், பெருங்காற்று வீசியதைக் கண்டவுடன், 'என்னைக் காப்பாற்றும்' எனக் கத்துகிறார். இயேசுவும் அவருடைய கையைப் பிடித்துத் தூக்குகிறார். எதிர்மறையான நிகழ்வுகளை இயேசு கையாளும் போக்கு சற்றே வித்தியாசமாக இருக்கிறது. பரிவு என்னும் ஒற்றை உணர்வால் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடர்களையும் கையாளுகிறார்.

3. 'இப்போது இருப்பதை விட முந்தைய நாள்கள் நன்றாக இருந்ததே' என்று நாமும் புலம்புகிறோமா? இப்படி நாம் புலம்பும்போதெல்லாம் நாம் இறந்த காலத்தில் வாழ முயற்சி செய்கிறோம். இது நமக்கு மேலும் சோர்வை உண்டாக்குகிறது. வாழ்வின் சுமைகள் சுமக்க இயலாமல் இருக்கும்போது நம் பதிலிறுப்பு என்ன? மக்கள் போல முணுமுணுக்கிறோமா? அல்லது மோசே போலக் கடவுளிடம் முறையிடுகிறோமா? அல்லது இயேசு போல அவற்றை நாம் எதிர்கொண்டு ஏற்றுக்கொள்கிறோமா? பரிவு என்னும் ஒற்றைச் சொல்லுடன் நாம் எதிர்மறை நிகழ்வுகளையும் நம் உறவுகளையும் கையாளும்போது எதுவும் நமக்குப் பளுவாகத் தெரிவதில்லை.


No comments:

Post a Comment