Saturday, August 5, 2023

ஆண்டவரின் தோற்றமாற்றம்

6 ஆகஸ்ட் 2023 ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு

ஆண்டவரின் தோற்றமாற்றம்

தானி 7:9-10, 13-14. 2 பேது 1:16-19. மத் 17:1-9.

இன்று ஆண்டவரின் தோற்றமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தனக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இயேசு ஓர் உயர்ந்த மலையில் ஏறுகின்றார். இயேசு எல்லாரையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்தில் வைத்து அன்பு செய்தார். அந்த வகையில் இந்த மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தனர்.

மலையில் ஏறிச்சென்றவர் உருமாறினார் என மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மாறிய உருவம் எப்படி இருந்தது என வர்ணிக்காமல் அவரது முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது என்கிறார் மத்தேயு. முகம் மட்டுமல்ல. ஆடையும் வெண்ணிறமாக ஒளிர்கிறது. ஆக, இயேசு ஒளியாக மாறுகின்றார். அந்த ஒளி மாற்றத்தில் மோசே மற்றும் எலியாவையும் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். அவர்கள் தோன்றியது மட்டுமல்லாமல், இயேசுவோடு உரையாடிக்கொண்டும் இருந்தனர். அந்த உரையாடலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த நேரத்தில்தான் இயேசுவைப் பார்த்து பேதுரு உரையாடுகிறார்: 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? உமக்கு விருப்பமா?'

பேதுரு தன் கண் முன்னால் காண்பதை அப்படியே ஃப்ரீஸ் செய்ய விரும்புகிறார்.

அதாவது ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார். ஃபோட்டோ எடுக்கும்போது என்ன நடக்கிறது? நாம் இருக்கும் இடத்திலும், நேரத்திலும் நம்மை அப்படியே உறையச் செய்து விடுகிறோம். ஆகையால்தான் ஒரு ஃபோட்டோவைக் காட்டும்போது இது இந்த இடத்தில், இந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறோம். ஃபோட்டோக்கள் மாறுவதில்லை. ஃபோட்டோவில் இருப்பது அப்படியே உறைந்துவிடுகிறது.

பேதுரு இயேசுவையும், மோசேயையும், எலியாவையும் மூன்று கூடாரங்களுக்குள் வைத்து அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றார். பேதுருவின் கேள்விக்கு இயேசுவோ, மோசேயோ, எலியாவோ பதில் சொல்லவில்லை. ஆனால், அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது.'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு பூரிப்படைகிறேன். இவருக்கு செவிசாயுங்கள்' பேதுரு ஒன்று கேட்க, பதில் குரல் வேறொன்றாக இருக்கிறது. அவர்கள் அச்சத்தால் முகங்குப்புற விழுகிறார்கள். புதிய ஒளி, புதிய நபர்கள், புதிய குரல் - விளைவு அச்சம்.

முகங்குப்புற விழுவதை சரணாகதியின் அடையாளம் என்றும், அல்லது பயத்தின் விளைவு என்றும் சொல்லலாம். எவ்வளவு நேரம் இப்படி விழுந்துகிடந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில் இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்!' என்கிறார். அத்தோடு, 'இங்க நடந்ததை மானிட மகன் இறந்து உயிர்க்கும்வரை யாரிடமும் சொல்லாதீர்கள்!' என அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு தொடர்புடையது.

தோற்றமாற்ற நிகழ்வை இயேசு எப்படிப் பார்த்தார்? சீடர்கள் எப்படிப் பார்த்தனர்? 

முதல் கோணம்: இயேசு இந்த நிகழ்வை எப்படிப் பார்த்தார்?

இந்த நிகழ்வை இயேசுவே முன்னெடுக்கின்றார். இடத்தையும் நேரத்தையும் உடன் வர வேண்டிய நபர்களையும் இயேசுவே தேர்ந்தெடுக்கின்றார். அந்த நிகழ்வு பற்றி வெளி நபர்கள் தெரிந்துவிடக்கூடாது என்பது பற்றி எச்சரிக்கையாக இருக்கின்றார். நிகழ்வின் இறுதியிலும், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று கட்டளையிடுகின்றார்.

இயேசுவைப் பொருத்தவரையில் அவர் தன் வாழ்வில் ஏற வேண்டிய முதல் மலை. இந்த மலையில் அவர் மாட்சி பெறுகிறார். அவர் ஏற வேண்டிய இன்னொரு மலையில் அவர் இகழ்ச்சி அடைவார். இங்கே சீடர்கள் அருகே இருக்கின்றனர். அங்கே அவருடன் யாரும் இருப்பதில்லை. இங்கே மோசேயும் எலியாவும் தோன்றுகிறார்கள். அங்கே இரு கள்வர்கள் அருகில் இருப்பார்கள். இங்கே, 'இதோ என் அன்பார்ந்த மைந்தர்' என்று தந்தை குரல் கொடுக்கின்றார். அங்கே, 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?' என இயேசு அபயக் குரல் எழுப்புகின்றார். இங்கே அவருடைய ஆடை வெண்மையாக இருக்கிறது. அங்கே ஆடையின்றி நிர்வாணமாகத் தொங்குவார். இந்த மலையும் அந்த மலையும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க இயலாதவை என்பதை இயேசு அறிந்திருந்தார். இரண்டு மலையும் இயேசுவுக்கு ஒன்றாகவே தெரிகிறது. இந்த மலையின் மாட்சி கண்டு அவர் மகிழவில்லை. அந்த மலையின் இகழ்ச்சி கண்டு துவண்டுபோகவில்லை.

உருமாற்றம் என்பது இத்தகைய உளமாற்றம்தான். நமக்கு வெளியே நடக்கும் எதைக் கண்டும் அலட்டிக்கொள்ளாமல் இருக்காது. தோற்றமாற்ற நிகழ்வில் அனைத்தும் வெளிப்புறமே நிகழ்கின்றன. ஆனால், வெளியே நடக்கின்ற நிகழ்வுகளுக்கு அவர் உள்ளார்ந்த பதிலிறுப்பு தருகின்றார்.

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று இயேசு சொல்வதேன்? இந்த அனுபவம் மற்றவர்களுக்குச் சொன்னால் புரியாது. நம் வாழ்வில் நடக்கும் துன்பகரமான நிகழ்வுகளை நாம் மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்துவிடுவது நல்லது. ஏனெனில், நாம் சொல்லியும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நம் வலி இரட்டிப்பாகிவிடும்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் தோற்றமாற்றம் என்பது தான் யார் என்பதைத் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு. கல்வாரியின் அவலம் காண்பவர்கள் இயேசுவுக்கு மாட்சியும் இருந்தது என்று எண்ணிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.

இரண்டாம் கோணம்: இந்த நிகழ்வை சீடர்கள் எப்படிப் பார்த்தார்கள்?

'உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றும்' என்று கூடாரங்கள் அடித்து, அந்தப் பொழுதை அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றனர். இன்னொரு பக்கம் அச்சம் அவர்களை மேற்கொள்கிறது.

'இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற கட்டளை தங்கள் காதுகளை வந்தடைந்தபோது, இயேசுவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. 'செவிசாய்த்தல்' அல்லது 'கேட்டல்' என்பது யூதர்களைப் பொருத்தவரையில் முதல் ஏற்பாட்டு, 'இஸ்ரயேலே! கேள்!' என்னும் சொல்லாடல்களைத்தான் அவர்களுக்கு நினைவூட்டியிருக்கும். இங்கே இயேசுவைக் கடவுளாக முதன்முதலாக சீடர்கள் அறியத் தொடங்குகின்றனர். இது அவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டியிருக்க வேண்டும். ஆனால், புரட்டவில்லை. இதற்குப் பின்னரும் இயேசு அவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பேதுரு மிக அழகான உருவகம் ஒன்றைப் பயன்படுத்துகின்றார்: 'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.' அதாவது, நான் உள்ளொளி பெறும் வரை எனக்கு வெளியில் இருப்பதெல்லாம் வெறும் விளக்கின் வெளிச்சமே. உள்ளொளி பெற்றவுடன் என் வாழ்வே ஒளிரத் தொடங்குகிறது. அங்கே இருள் என்பதே இல்லாமல் போய்விடுகின்றது.

சீடர்கள் அச்சம் என்னும் இருளால் ஆட்கொள்ளப்பட்டனர். அவர்கள் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னரே இந்நிகழ்வைப் புரிந்துகொள்கின்றனர். இயேசுவின் உருமாற்றம் சீடர்களின் உள்ளத்தை பின்னால்தான் மாற்றுகிறது.

இரண்டு பாடங்கள்: ஒன்று, வாழ்வின் எதார்த்தங்கள் நம்மைப் பாதிக்காதவண்ணம் வாழக் கற்றுக்கொள்வது. இரண்டு, உள்ளொளிப் பயணத்தை தொடங்குவது, தொடர்வது.

முதல் வாசகத்தில், தொன்மை வாய்ந்தர் அரியணையில் வீற்றிருப்பதைக் காட்சியில் காண்கிறார் தானியேல். திருவெளிப்பாட்டு நடையின் நோக்கம் இதுவே. அதாவது, துன்பம் எல்லாம் மறைந்து மாட்சி பிறக்கும். துன்பம் மாட்சிக்கு இட்டுச் செல்கிறது.

'உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவரின்' (காண். திபா 97) உருமாற்றம் நம் உள்ளத்தின் மாற்றத்தைத் தூண்டி எழுப்பட்டும். மாட்சியும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் எனக் கற்றுக்கொடுக்கட்டும்!


No comments:

Post a Comment