Monday, April 2, 2018

மிகுதியாக பணம் கொடுத்து

நாளைய (2 ஏப்ரல் 2018) நற்செய்தி (மத் 28:8-15)

மிகுதியாக பணம் கொடுத்து

இன்று (1 ஏப்ரல்) புதிய நிதியாண்டை, புதிய ஆண்டுக்கணக்கை தொடங்குகிறோம். இந்நேரத்தில் நாளைய நற்செய்தி வாசகத்தில் காணும் 'பணம்' என்ற வார்த்தையை மையமாக வைத்து சிந்திப்போம்.

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் பதிவுசெய்யும் பகுதியே நாளைய நற்செய்தி. இயேசு உயிர்த்துவிடுகிறார். சில பெண்களுக்குக் காட்சி தருகின்றார். எப்படி இயேசு ஊருக்குள் வந்து காட்சி தந்தரோ அவ்வாறே அவரின் கல்லறைக்கு காவல் இருந்தவர்கள் ஊருக்குள் வந்து தலைமைக்குருக்களிடம் நிகழ்ந்த யாவற்றையும் அறிவிக்கின்றனர். ஆனால், தலைமைக்குருக்களின் எதிர்வினை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது:

அ. பொய்: 'நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது சீடர் வந்து இயேசுவின் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டனர்.'

ஆ. இலஞ்சம். படைவீரருக்கு மிகுதியான பணம் கொடுத்து - அதாவது அவர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அல்லது அவர்கள் மனம் விரும்பும் அளவிற்கு.

இ. தவறான பரிந்துரை. 'ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்.'

ஒரு தவறு அடுத்த தவறைப் பெற்றெடுக்கிறது.

இயேசுவின் உயிர்ப்பை நம்ப மறுப்பதற்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

'பணம் பெறும்போது - உழைத்தோ அல்லது அன்பளிப்பாகவோ - நம் கைகளுக்கு வரும்போது நம்மை அறியாமல் ஒரு மகிழ்ச்சி தொற்றுகிறது' - இது ஏன்? என நான் பல நாள் நினைத்ததுண்டு. மனிதர்களின் இந்த சபலத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றனர் தலைமைக்குருக்கள்.

'ஆளுநரை நம்பச் செய்து' - அதாவது, அவருக்கும் பணம் கொடுத்து.

'நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி' - அதாவது நீங்கள் உங்கள் கவனக்குறைவுக்கு தண்டனை பெறாதபடி.

ஒருவரின் நம்பிக்கை மற்றவருக்கு வதந்தியே. அல்லது ஒருவரின் வதந்தி மற்றவருக்கு நம்பிக்கையே - இது இந்த நிகழ்வில் தெளிவாக புலப்படுகிறது.

இயேசு உயிர்த்து விடியலைக் கண்டுவிட்டார். பாவம் இவர்கள்! இன்னும் இருட்டிலேயே இருக்கிறார்கள்!

2 comments:

  1. " பணம்" என்றால் பிணமே வாய் திறக்கையில் மனிதன் எம்மாத்திரம்? மனத்தின் உள்ளுரண்வுக்கு செவி கொடாத மனிதர்கள்கூடப் பணத்தைக்கண்டவுடன் "அவர்கள் சொல்லிக்கொடுத்தவாறே செய்தார்கள்" என்கிறது விவிலியம். ஒருவரின் நம்பிக்கை அடுத்தவருக்கு வதந்தியாவதும்,அடுத்தவரின் வதந்தி மற்றவருக்கு நம்பிக்கையாவதும் இந்நிகழ்வுக்கு மட்டுமல்ல; எல்லா நிகழ்வுகளுக்குமே பொருந்தும்.இயேசுவின் உயிர்ப்பில் நமக்கு 'விடியல்' கிடைத்தும் பல நேரங்களில் நாமும்கூட இந்தக் காவலர்கள் போல இருட்டில் தான் இருக்கிறோம். வெளிச்சத்திற்கு வருவது எப்பொழுது? யோசிப்போம்....

    ReplyDelete