Thursday, April 5, 2018

நெருக்கடி மேலாண்மை

நாளைய (5 ஏப்ரல் 2018) நற்செய்தி (லூக் 24:35-48)

நெருக்கடி மேலாண்மை

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வுகளை இந்த வாரம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். இயேசுவின் உயிர்ப்பில் நிலவிய பெருத்த சந்தேகம், 'இயேசு உயிர்த்தபோது அவருக்கு உடல் இருந்ததா?' அல்லது 'அவர் வெறும் ஆவியா?' என்பதுதான். இந்த சந்தேகத்தை ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒவ்வொரு விதமாக கையாளுகின்றனர். மாற்கு உயிர்ப்பு பற்றி அமைதி காக்கின்றார். மத்தேயு தோமா வழியாக விரலை விட்டை சோதனை செய்கின்றார். யோவான் மகதலா மரியாளைக் கொண்டு இயேசுவை இறுகப் பற்றிக்கொள்ள வைக்கின்றார். லூக்கா அவரை வேகவைத்த மீன்துண்டு சாப்பிட வைக்கிறார்.

உயிர்த்த இயேசுவின் உடல் வித்தியாசமாக இருக்கிறது. நம்மைபோல அவர் சதை கொண்டு இருக்கின்றார். அதே நேரத்தில் பூட்டிய அறைக்குள்ளும் நுழைகின்றார்.

இயேசுவின் உடல் ஆராய்ச்சியை விடுத்து இந்த நற்செய்தி பகுதியை, அதாவது லூக்கா நற்செய்தியாளரின் நிறைவுப் பகுதியை, மேலாண்மைக்கண் கொண்டு பார்ப்போம்.

மேலாண்மையியல் முக்கியமான ஒன்று 'நெருக்கடி மேலாண்மை' - 'க்ரைசிஸ் மேனேஜ்மென்ட்'

நாம் எவ்வளவுதான் கரெக்டாக இருந்தாலும் நெருக்கடி வந்தே தீருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் ஊருக்குச் சென்றிருந்தேன். என் ஞானதந்தை அவர்கள் பஞ்சு அள்ளிப்போடும் எந்திரத்தில் கையைக் கொடுத்து தன் மூன்று விரல்களை இழந்து கட்டுப்போட்டுக்கொண்டு நின்றார். கட்டுப்போட்ட அந்தக்கையை பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர் ஒன்றும் நடக்காததபோல எனக்கு கைகொடுக்க என்னை நீட்டி கை நீட்டினார்.

காலையில் எழுதல், உணவு, சைக்கிள் பயணம், வேலை, வீடு, தூக்கம் என்று இருந்தவர் இப்போது உடல்சார்ந்த நெருக்கடியை சந்திக்கின்றார். இவருக்கு உடலிலும் நெருக்கடி. இவரின் வருமானம் நிறுத்தப்படுவதால் குடும்ப உறவிலும் நெருக்கடி. வேலைக்கு புறப்பட்டு சென்ற அந்த நாளில் அவர் இப்படி ஒரு நெருக்கடி வரும் என நினைத்திருக்கமாட்டார்.

நெருக்கடிகள் பல நேரங்களில் திடீரென்றுதாம் வருகின்றன.

இயேசுவின் சீடர்களுக்கு வந்த முதல் நெருக்கடி இயேசுவின் இறப்பு. இறப்போடு போயிருந்தால் ஏழு நாள்கள் அழுதுவிட்டு அமைதியாய் இருந்திருப்பார்கள். இரண்டாம் நெருக்கடி அவரின் உயிர்ப்பு. உயிர்ப்புக்குப் பின் அவர் ஆங்காங்கே தோன்றுவதாக கேள்விப்படுகின்றனர். இது அவர்களுக்கு சந்தேகத்தைக் கூட்டுகிறதே தவிர அவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கவில்லை. அச்சம், ஐயம், வியப்பு, மகிழ்ச்சி என பல உணர்வுகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கின்றனர். இந்த நெருக்கடி நிலையை மேலாண்மை செய்ய இயேசு மூன்று வாழ்க்கைப்பாடங்களை வைக்கின்றார்:

அ. 'அமைதி'
'உங்களுக்கு அமைதி உரித்தாகுக' என்பது அரமேயத்தில் வெறும் 'ஷலோம்' என்பதுதான். யூத மரபில் ஒருவர் மற்றவரைக் காணும்போது, 'ஷலோம்' என்று வாழ்த்துகின்றனர். ஷலோம் என்றால் ஓட்டையில்லாத பானை. அதாவது ஒழுகாத பானை. பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து அதில் சின்ன வெடிப்பு இருந்தால் தண்ணீர் அங்கே வழிந்துவிடும். நெருக்கடி நிலையில் நமக்கு நிறைய ஆற்றல் லீக்கேஜ் இருக்கும். ஆக, நம் பானை வெடிப்பு இன்றி 'ஷலோம்' (முழுமையாக) இருக்க வேண்டும்.

ஆ. 'உடலை ஆவி என நினைக்காதீர்கள்'
இருப்பதை இருப்பதாக பாருங்கள். இல்லாததை இருப்பதாக பார்க்காதீர்கள். 'ஐயோ! பிரச்சினை ஆயிடுச்சு. இனி இப்படி ஆயிடும். அப்படி ஆயிடும்' என்று பதறுதல் கூடாது. 'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பது பழமொழி.

இ. 'புள்ளிகளை இணையுங்கள்'
இயேசு தான் பட்ட பாடுகள், துன்பம், இறப்பு, உயிர்ப்பு அனைத்தையும் மோசே, இறைவாக்கு, திருப்பாடல் ஆகியவற்றோடு இணைத்துப் பார்ப்பதோடல்லாமல், 'இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' என்று சீடர்களை எதிர்காலத்தில் நிறுத்தி எல்லாப் புள்ளிகளையும் இணைக்கிறார். நம்ம வாழ்விலும் ஒவ்வொரு நகர்வும் ஒரு புள்ளி. அந்தப் புள்ளிகளை சற்றே மேல்நின்று பார்த்து இணைக்க வேண்டும்.

இறுதியாக,

இந்த மூன்று பாடங்களும் ஃபெயிலியர் என்றால்,

'சாப்பிட என்ன இருக்கு?' என்று கேட்டு, அதை வாங்கி, அப்படியே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

2 comments:

  1. இன்றைய கால சூழ்நிலைக்கேற்றதொரு பதிவு. சீடர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டிய இயேசுவின் உயிர்ப்பு அவர்களுக்குப்பல சங்கடங்களைத்தருகிறது. இம்மாதிரி சூழ்நிலைகளிலிருந்து வெளிவரும் உத்தியை " நெருக்கடி மேலாண்மை" என்றும்,அதன் அணுகு முறை பற்றியும் விவிரிக்கிறார் தந்தை.வாழ்வின் எதார்த்தங்களை அப்படியே எடுத்துக்கொள்வதும், நம்மிடம் வரும் விஷயங்களை அவற்றின் தன்மை மாறாமல் பார்ப்பதும்,நம் வாழ்வின் நிகழ்வாக வரும் புள்ளிகளை இணைப்பதும்,எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாச்சூழ்நிலைகளிலும் அமைதி காப்பதும் இந்த "மேலாண்மை"நமக்குச்சொல்லும் விஷயங்கள் என்கிறார். வாழ்ந்து பார்த்தவர் என்ற முறையில் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதே அழகு!

    இந்த நேரத்தில் தந்தையை விசேஷித்த விதத்தில் நான் நினைத்துப் பார்த்து, அவருக்கு நன்றி சொல்ல விழைகிறேன். எடுத்ததெற்கெல்லாம் ' பதட்டம்' என்ற என் வாழ்வைப் "பதட்டப்படாதே! "என்று சொல்லி,சொல்லியே பதப்படுத்தியுள்ள தங்களுக்கு இந்நேரத்தில் என் நன்றிகளைச்சமர்ப்பிக்கிறேன்.இன்றுகூட ஒரு பதட்டமான சூழ்நிலை என்னிடம் இருப்பினும் " பயம் வேண்டாம்; பதட்டம் வேண்டாம்; அவர் பார்த்முக்கொள்வார்!" என்று சொல்லும் தங்களின் குரல் எனக்கு அசரீரியாக்க் ஒலிக்கிறது.."வாழ்க்கையின் அத்தனை பாடங்களும் ஃபெயிலியர் ஆனாலும்" சாப்பிட என்ன இருக்கு?" என்று கேட்டு அதை வாங்கிச்சாப்பிட வேண்டும்"...இந்த attitude தான் தங்களை இந்த உயரத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளது என்றால் மிகையில்லை! இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!

    ReplyDelete