Friday, April 6, 2018

கல்வியறிவற்றவர்கள்

நாளைய (7 ஏப்ரல் 2018) முதல் வாசகம் (திருத்தூதர் பணிகள் 4:13-21)

கல்வியறிவற்றவர்கள்

நாம் ஒருவரோடு கொள்ளும் அறிமுகம் அல்லது நெருக்கம் நம் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை.

எடுத்துக்காட்டாக, நான் இரயிலில் பயணம் செய்கிறேன். என் அருகில் இருப்பவர் முதலில் அந்நியராக இருக்கிறார். நான் பேச்சுக் கொடுக்க கொடுக்க அவர் பக்கத்து மாநிலத்தில் உள்ள ஒரு மறைமாவட்டத்தின் ஆயர் எனத் தெரிகிறார் என வைத்துக்கொள்வோம். என் அணுகுமுறையில் உடனடியாக மாற்றம் வந்துவிடுகிறது. நான் அவருக்குத் தேவையானவற்றைச் செய்ய ஆரம்பிக்கிறேன். அவருக்கு வசதிகள் செய்து கொடுக்கிறேன். இன்னும் பல.

அதே வேளையில், என்னைக் காண ஒருவர் வருகிறார். அவர் பார்ப்பதற்குப் பகட்டாக இருக்கிறார். நான் அவரை முக்கியமானவர் எனக் கருதி ஆவண செய்கிறேன். கொஞ்ச நேர அறிமுகத்தில் அவர் ஓர் ஏமாற்றுப்பேர்வழி எனத் தெரிந்தால், அல்லது அவர் சாதாரணமானவர் எனத் தெரிந்தால் உடனடியாக என் அணுகுமுறையிலும் மாற்றம் வந்துவிடுகிறது.

இவ்வாறாக, ஒருவரின் அறிமுகத்திற்கும் அணுகுமுறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

எருசலேம் நகரில் போதித்துக்கொண்டிருந்த பேதுருவையும், யோவானையும் பார்த்து மக்கள் வியக்கின்றனர். அவர்கள் பெற்ற விவிலிய மற்றும் இறையயில் நுண்புலம் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு தலைமைச்சங்கத்திற்கு அழைத்துவரப்பட்டபோது காவலர்களும் அவர்கள்மேல் மிகவே அக்கறை காட்டுகின்றனர். ஆனால், 'அவர்கள் கல்வியறிவற்றவர்கள், சாதாரண மீனவர்கள்' என்று தெரிந்தவுடன் அவர்களின் அணுகுமுறை அப்படியே மாறுகிறது. திருத்தூதர்களை நையப்புடைக்குமாறும், அடிக்குமாறும் கையளிக்கின்றனர்.

இருந்தாலும், திருத்தூதர்கள் தங்கள் மனவுறுதியில் நிலைத்துநிற்கின்றனர்.

ஆக, மற்றவர் நம்மோடு கொண்டு அறிமுகத்தால் நம்மை ஏற்றி வைத்தாலும், இறக்கி வைத்தாலும் நாம் நம் தான்மையில் உறுதியாக இருக்க நாளைய முதல் வாசகம் அழைப்பு விடுக்கிறது.

1 comment:

  1. எதிரே இருப்பவரின் புறம் கண்டு போற்றுவதும்,பின் அகம் கண்டு புறக்கணிப்பதும் மனித இயல்பு என்பதை இன்றையப்பதிவு நமக்கு எடுத்து வைக்கிறது.போற்றுவார் போற்றும்போதும்,தூற்றுவார் தூற்றும்போதும் நமது மேலுடையைக்களைந்து உதறிவிட்டு இன்றையத்திருத்தூதர்கள் போல நாம் நாமாக இருப்பதே சிறப்பு.நாம் உயர்ந்த இடத்தில் இருக்கும்போது அடுத்தவர் நம்மை மதிப்பதோ,நம் நிலையில் நாம் தாழ்ந்து வரும்போது நம் நிழல் கூட நம்மைப்பார்த்துச் சிரிப்பதோ.... இந்த இரண்டுமே நமக்கு எந்த சலனத்தையும் தராமல் பார்த்துக்கொள்வதே சான்றோனுக்கு அழகு. முடியுமா? முடியவேண்டும் என்கிறார் தந்தை.நன்றிகள்!!!

    ReplyDelete