Tuesday, April 3, 2018

என்ன நிகழ்ந்தது?

நாளைய (4 ஏப்ரல் 2018) நற்செய்தி (லூக் 24:13-35)

என்ன நிகழ்ந்தது?

அவர்களுள் கிளியோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, 'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ?' என்றார்.

அவதற்கு அவர் அவர்களிடம், 'என்ன நிகழ்ந்தது?' என்று கேட்டார்.

எனக்கு தெரிந்த அருள்பணியாளர் ஒருவர் இருக்கிறார். அவருடன் அமர்ந்து எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். எல்லாரும் எதையாவது பேசிக்கொண்டிருக்க அவர் மட்டும் அமைதியாக இருப்பார். நாங்கள் பேசி முடித்து அமைதியானவுடன், 'என்ன?' என்று கேட்பார்.

எம்மாவு சீடர்களின் கேள்விக்கான இயேசுவின் பதில் அப்படித்தான் இருக்கிறது.

சீடர்கள் பதற்றமாக, 'இந்த நாள்களில் நடந்தவை உமக்குத் தெரியாதோ?' என்று கேட்கின்றனர்.

'என்ன நடந்தது?' என ரொம்ப கூலாக கேட்கிறார்.

இந்தக் கேள்வியில் வாழ்க்கையின் ஞானம் இருக்கிறது என நினைக்கிறேன்.

ஒன்று, வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் நமக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. 'அறியாமையே இன்பம்' என்பது ஆங்கிலச் சொல்லாடல். நிறைய தெரிந்துகொள்வதால் நிறைய விரக்தி வரும். பல நேரங்களில் தெரியாமல் இருப்பதுதான் நம் நிம்மதியையும் குலைக்காமல் இருக்கும்.

இரண்டு, வாழ்வில் என்ன நிகழ்வு நடந்தாலும் நம் எதிர்வினை, 'அப்படி என்ன நிகழ்ந்தது?' என்று கேட்டுவிட்டால் நம் பிரச்சினை சின்னதாகிவிடுகிறது. அதாவது, 'இதைவிட கொடுமையானது நடக்க வாய்ப்பிருந்தும் நடக்கவில்லையே' என்று ஆறுதல்பட்டுக்கொள்தல் நலம்.

மூன்று, 'என்ன நிகழ்ந்தது?' என்ற கேள்விக்கான சீடர்களின் பதிலை வைத்து தனது உரையைத் தொடங்குகிறார் இயேசு. ஆக, 'என்ன நிகழ்ந்தது?' என்ற கேள்வி நம் வாழ்வையே மறுஆய்வு செய்ய நம்மைத் தூண்டுகிறது. 'நேற்று என்ன நிகழ்ந்தது?' 'கடந்த வாரம்-மாதம்-ஆண்டு என்ன நிகழ்ந்தது?' என்று நம்மையே கேட்கும்போது நாம் நம்மையே திறனாய்வு செய்துகொள்ளவும் முடிகிறது.

ஆக, இன்று நாம் முகவாட்டத்தோடும் கவலையோடும் ஏமாற்றத்தோடும் இழப்போடும் எம்மாவு என்னும் வாழ்வின் பாதி வழியில் நிற்கும் போது அவரின் கேள்வி, 'என்ன நிகழ்ந்தது?' என்றே இருக்கிறது.


2 comments:

  1. எம்மாவுஸ் சீடர்களைப்பார்த்து " என்ன நடந்தது?" எனக்கேட்ட இயேசுவின் கேள்வியின் தன்மையைத் தன் பாணியில் அலசிப்பார்க்கிறார் தந்தை." பல நேரங்களில் தெரியாமல் இருப்பதே நம் வாழ்வின் நிம்மதியைக் குலைக்கும் இருக்கும்""என்பதையும்,"என்ன நிகழ்ந்தது எனக்கேட்டுவிட்டால் நம் பிரச்சனை சின்னதாகிவிடுகிறது" என்பதையும் தாண்டி அந்த மூன்றாவது விஷயமே என்னைத்தொட்டது." கடந்த வாரம்- மாதம்- ஆண்டு என்ன நிகழ்ந்தது" என்று நம்மையே கேட்கும்போது நாம் நம்மையே திறனாய்வு செய்து கொள்ளவும் முடிகிறது.உண்மையிலும் உண்மை. இன்று என்னைப்போன்றவர்கள முக வாட்டத்தோடும்,கவலையோடும், ஏமாற்றத்தோடும்,இழப்போடும் எம்மாவு என்னும் வாழ்வின் பாதிவழியில் நிற்கும்போது அவரின் கேள்வி என்னைப்பார்த்து " என்ன நிகழ்ந்தது?" என்று கேட்பது போலவே இருக்கிறது. என் தற்போதைய மனநிலைக்கு மருந்தாக அமைந்ததொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Good Reflection Yesu . Congrats

    ReplyDelete