Friday, April 27, 2018

அதுவே போதும்

அதுவே போதும்

'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்'

இது பிலிப்பின் விண்ணப்பம்.

இந்த விண்ணப்பத்திற்கு பதில் தரும் இயேசு அதை மூன்று கேள்விகளாகத் தருகின்றார்:

(அ) இவ்வளவு காலம் நான் உங்களோடு உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?
(ஆ) என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று நீ எப்படிக் கேட்கலாம்?

(இ) நான் தந்தையினுள்ளும், தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?

இயேசுவின் இந்தக் கேள்விகள் அறிதல், கேட்டல், நம்பிக்கை கொள்தல் என்ற மூன்று நிலைகளில் இருக்கிறது.

மேற்காணும் கேள்விகள்-பதில்களிலிருந்து நாம் மூன்று உள்கருத்துக்களை எடுத்துக்கொள்வோம்:

1.தந்தையாகிய இறைவனே கடவுள். அந்தக் கடவுளிடம் திரும்பிச் செல்கிறார் இயேசு. அப்படி என்றால், அவர் அந்தக் கடவுளிடமிருந்து வந்தவர். மேலும், தந்தையும் இயேசுவும் ஒருவர் மற்றவரோடு இணைந்திருப்பதால் இயேசுவும் கடவுளே.

2. தந்தை மற்றும் இயேசு என்னும் இந்தக் கடவுளோடு சீடர்களும் இணைந்துகொள்ள முடியும். ஆக, கடவுள்தன்மையில் இருந்து மனிதர்கள் அந்நியப்பட்டவர்கள் அல்லர். மாறாக, அந்த தன்மையில் இணைந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். இந்த ஆற்றலை உறுதி செய்பவர் இயேசு.

3. சீடர்கள் இயேசுவோடு ஏற்படுத்திக்கொள்ளும் ஒன்றிணைப்புக்கு அடிப்படை தேவை அவர்கள் இயேசுவின்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கை. இயேசுவும் தந்தையும் ஒன்று என்று நம்ப வேண்டும். அந்த தந்தையின் ஒன்றிப்பை நம்புவதற்கு இயேசுவின் சொற்களும், செயல்களும் சான்றாக அமைகின்றன.

1 comment:

  1. இயேசு யாரென்ற சரியான புரிதல் இல்லாத பிலிப்புவுக்குத் தான் யாரென்பதையும்,தான்,திரும்பி யாரிடம் செல்ல வேண்டியவர் என்பது பற்றியும் இயேசு விளக்கம் தருகிறார்.விஷயங்களைக்கூறும் விதம் கொஞ்சம் கறாராக இருப்பது போல் தெரிந்திடினும் சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய முறையில் எடுத்துச்சொன்னால்தான் விஷயங்கள் சிலருக்குப்புரிகிறது.இயேசு தன் சீடர்களுக்குத்தரும் பதில்களில் என்னைக்கவர்ந்த உள்கருத்து " சீடர்கள் இயேசுவோடு ஏற்படுத்திக்கொண்டிருந்த ஒன்றிணைப்புக்கு அடிப்படைத்தேவை நம்பிக்கை என்பதே" என்பதுதான்.அவரில் நம்பிக்கை கொள்வோம்; அவரின் சீடர்கள் நாம் என்பதை ஓங்கி உலகிற்கு எடுத்துரைப்போம்.....நம்பிக்கை விதைகளை நம்முள் தூவிய தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete