Monday, January 1, 2018

யோர்தான் ஆற்றுக்கு அக்கரை

நாளைய (2 ஜனவரி 2018) நற்செய்தி (யோவான் 1:19-28)

யோர்தான் ஆற்றுக்கு அக்கரை

மீட்பு வரலாற்றில் யோர்தான் ஆற்றுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று செங்கடலைக் கடந்து வந்த இஸ்ரயேல் மக்கள் மோசேயின் தலைமையிலிருந்து யோசுவாவின் வழிநடத்துதலுக்குட்பட்டு யோர்தான் ஆற்றைக் கடக்கின்றனர். யோர்தான் ஆறுதான் வாக்களிக்கப்பட்ட நாட்டின் எல்கை.

யோர்தான் நதி என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கை நிலையின் ஓர் உருவகமும் கூட.

இஸ்ரயேல் மக்களின் பழைய வாழ்க்கை நிலையை 'நதிக்கு' ஒப்பிடுகின்ற யோசுவா, 'இப்பொழுது ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள் ... ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்' (யோசு 24:14-15) என்கிறார்.

ஆக, யோர்தான் நதி என்பது ஒருவர் தீர்க்கமான முடிவை எடுக்கின்ற இடம்: 'நீ யார் பக்கம்? ஆண்டவர் பக்கமா? அல்லது மாற்றுத் தெய்வத்தின் பக்கமா?'

இவற்றில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தேர்வு செய்ய வேண்டும்.

இரண்டும் வேண்டும் என்று சொல்வதும், இரண்டிற்கும் ஊழியம் செய்கிறேன் என்று சொல்வதும் ஏற்புடைமை அன்று.

மேலும், எவ்வாறு முதல் ஏற்பாட்டு யோசுவா இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றாரோ, அப்படியே இரண்டாம் ஏற்பாட்டு யோசுவா ('இயேசு') மக்களை புதிய வாழ்விற்கு அழைத்துச் செல்கிறார். யோவான் அந்த மெசியா அல்லது யோசுவா அல்ல என்பதால் திருமுழுக்கு யோவானை ஆற்றின் அக்கரையிலே நிறுத்திவிடுகின்றார் நற்செய்தியாளர்.

நாம் இரண்டு கேள்விகள் கேட்போம் நம்மை:

அ. என் வாழ்வின் யோர்தானில் நான் எடுக்கும் முடிவு எது? நான் யாருக்கு ஊழியம் புரிகிறேன்? என் முடிவில் உறுதியாக இருக்கிறேனா?
ஆ. புதிய ஏற்பாட்டு யோசுவாவுடன் நான் ஆற்றுக்குள் இறங்க தயாரா?

3 comments:

  1. மீட்பின் வரலாற்றில் 'யோர்தான்' ஆற்றுக்கு மிக முக்கிய பங்கு உண்டென்பதும்,அதே நதி இஸ்ரேல் மக்களின் வாழ்க்கை நிலையில் ஒரு முக்கியமான உருவகம் என்பதும் தந்தை தரும் சுவாரஸ்யமான தகவல்.தீர்க்கமான முடிவு எடுத்தவர்கள் மட்டுமே ஆற்றுக்குள் இறங்கமுடியும் என்பதும்,அப்படியொரு முடிவு எடுக்க இயலாதவர்கள் அக்கரையிலேயே நிறுத்தப்படுவார்கள் என்பதும் தந்தை நமக்குச் சொல்லும் பாடம். திருமுழுக்கு யோவானே ஆற்றின் அக்கரையில் நிறுத்தப்பட்டாரெனில் என் கதி? ஆண்டின் முதல் நாளன்றே " என் வாழ்வின் யோர்தானில் முடிவுகள் எடுக்கவும்,எடுத்த முடிவில் தீர்க்கமாயிருக்கவும் தயாரா?" என்று கேட்கும் தந்தையின் குரலுக்குச் செவி மடுப்போம். புதிய ஏற்பாட்டு யோசுவாவுடன் ஆற்றில் இறங்கத் தயாராவோம்.யோசிக்க வைத்ததொரு பதிவுக்காகத் தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete