Tuesday, January 9, 2018

உமக்கு இங்கு என்ன வேலை?

நாளைய (9 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 1:21-28)

உமக்கு இங்கு என்ன வேலை?

திருவருகைக்காலம் மற்றும் கிறிஸ்து பிறப்பு காலம் முடிந்து திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றோம்.

மேற்காணும் இரண்டு காலங்களில் பெற்ற அருள்வரங்களை அசைபோடும் காலம் இது.

நாளைய நற்செய்தியில் மாற்கு நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசு தன் முதல் அறிகுறியை நிகழ்த்துகின்றார். இந்த அறிகுறியின் வழியாக (அ) இயேசு தீய ஆவியின் மேல் அதிகாரம் கொண்டுள்ளவர் என்றும், (ஆ) அவரின் போதனை மற்றவர்களின் போதனையைவிட மாறுபட்டது எனவும் கண்டுகொள்கின்றனர் மக்கள்.

நாளைய நற்செய்தியில் இயேசு சந்திக்கும் தீய ஆவியின் கேள்வியை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை?'

'இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை?' என்று கேட்பது போல இருக்கிறது பேய்க்குட்டியின் இந்தக் கேள்வி.

இந்தக் கேள்வி இருபுறங்களைக் கொண்டது: ஒரு புறத்தில், நாம் மற்றவரை நோக்கி இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, ஒருவர் தான் இருக்கக் கூடாத இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்ட இது பயன்படுகிறது. மற்றொரு புறத்தில், நாம் நம்மை நோக்கியே கேட்கும்போது, நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேனா என்று தன்ஆய்வு செய்து பார்க்க நம்மை அழைக்கிறது.

ஆவியின் கேள்வி முதல் பொருளைக் கொண்டதாக இருக்கிறது. இயேசுவின் பிரசன்னம் ஆவியின் பிரசன்னத்துக்கு முரணாக இருக்கிறது. 'நாங்க எல்லாம் இங்க டிரஸ் இல்லாம இருக்கோம். நீங்க மட்டும் ஏன் டிரஸ் போட்றுக்கீங்க?' எனக் கேட்கிறது தீய ஆவி.

'வாயை மூடு. இவரை விட்டு வெளியே போ' என அதட்டுகின்றார் இயேசு.

'நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறேன். நீதான் இருக்கக் கூடாத இடத்தில் இருக்கிறாய்!' என்று சொல்லி ஆவியை விரட்டுகின்றார் இயேசு.

இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இல்லாமல் இருப்பதும்,
இருக்கக் கூடாத இடத்தில் இருக்கக் கூடாதது இருப்பதும் சால்பன்று.
நம் வாழ்வில்.

1 comment:

  1. " நசரேத்து இயேசுவே! உமக்கு இங்கென்ன வேலை?" இயேசுவை நோக்கி எழுப்பப்பட்ட இந்தக்கேள்விக்குத் தந்தை இரு முகங்கள் காட்டுகிறார். 1.இருக்கக் கூடாத இடத்தில் இருக்கிறேனா?2. இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேனா? இரண்டுமே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டதால் இரண்டுமே ஒரே ஆளை( என்னைக்) குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்." இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இல்லாமல் இருப்பதும்,இருக்கக்கூடாத இடத்தில் இருக்கக்கூடாத்து இருப்பதும் சால்பன்று நம் வாழ்வில்." என முடிக்கிறார் தந்தை. கொஞ்சம் குழப்புவது போல் வார்த்தைகள் இருப்பினும் புரிந்து செயல்படக்கூடிய விஷயமே. இதைத்தான் "யாரும் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே!" என்று கண்ணதாசனும் சுட்டிக்காட்டியிருப்பாரோ!இருக்கலாம். எளிமையாய்த் தோன்றிடினும் நம்மைப்பாதிக்கக்கூடிய ஒரு விஷயத்தை தனக்கே உரித்தான வார்த்தைகளில் தந்துள்ள தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete