Monday, January 15, 2018

ஓய்வுநாளில் செய்யக்கூடாதது

நாளைய (16 ஜனவரி 2018) நற்செய்தி (மாற்கு 2:23-28)

ஓய்வுநாளில் செய்யக்கூடாதது

சீடர் கதிர்களைக் கொய்துகொண்டு வருவதைப் பார்த்த பரிசேயர் இயேசுவிடம், 'பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?' என்று புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தில் தாவீது இறை அப்பத்தை எடுத்து உண்ணும் நிகழ்வை மேற்கோள் காட்டுகின்றார் இயேசு.

இயேசு தாவீதின் நிகழ்வைக் குறிப்பிடுவது இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

ஒன்று, ஒருவருக்காக சட்டத்தை வளைக்க முடியுமென்றால் எல்லாருக்காகவும் சட்டத்தை வளைக்க முடியும்.

இரண்டு, தாவீதுக்கு இது அனுமதிக்கப்பட்டதென்றால், தாவீதின் மகனாம் தனக்கும் அனுமதிக்கப்பட்டதே.

'பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்' என்பது பழமொழி. இங்கே பசி வந்தாலும் தங்கள் சட்டங்களைப் பிடித்துக்கொள்கின்றனர் பரிசேயர்கள். ஒருவேளை இயேசுவின் சீடர்கள் யூதர்கள் இல்லை என வைத்துக்கொள்வோம். அவர்களை இந்த ஓய்வுநாள் சட்டங்கள் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை. ஒருவர் பின்பற்றும் மதம், அதாவது பிறப்புக்குப் பின் ஒருவர் மேல் சுமத்துப்படும் ஒரு மத அடையாளமே, அவரை கட்டுப்படுத்துகிறது. அப்படியென்றால், நாமே விரும்பாமல் நம்மேல் சில கட்டுப்பாடுகள் புகுத்தப்படுகின்றன.

இந்த நிகழ்வின் வழியாக இயேசு இவ்வாறாக நாம் நம்மேல் சுமத்திக்கொள்ளும் கட்டுப்பாடுகள் பற்றிய சிந்தனையைத் தூண்டுகிறார்.

'கட்டின்மையோடு பிறக்கும் மனிதர் வாழ்க்கை முழுவதும் கட்டுக்களோடு வாழ்கின்றனர்' என்கிறார் வால்டேர்.

மதத்தின் நோக்கமே நம் கட்டுக்களை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்துக்கொள்வதே.

இன்று என்னைக் கட்டிக்கொண்டிருக்கும் கட்டுக்கள் எவை?


1 comment:

  1. " மனித நேயத்தை" மையப்படுத்தும் ஒரு பதிவு.ஓய்வு நாளில் கதிர்களைக்கொய்து பசியாற்றும் இயேசுவின் சீடர்களைப்பார்த்து முணுமுணுக்கின்றனர் பரிசேயர்.தாவீது மன்னன் இறை அப்பத்தை உண்டது சரியெனில் தன் சீடர்களின் செயலும் சரியே என்கிறார் இயேசு.மனித நேயத்தை முன்னிட்டு வளைந்து கொடுக்காத எந்த சட்டமும் நாளடைவில் காணாமல் போய்விடும் என்கின்றனர் ஆன்றோர். நாம் விரும்பியோ விரும்பாமலோ நாம் பிறக்கும் குடும்பத்தைச் சார்ந்த அத்தனை கட்டுப்பாடுகளும் நம்மையும் தொற்றிக்கொள்கின்றன. மதத்தின் மீது மட்டுமே பழி போடாமல் பிறர் மனங்களையும் புரிந்து கொள்ள முயல்வோம்; பிறரன்புக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தகர்தெறிவோம்;மனித நேயம் காப்போம்.வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete