Tuesday, March 3, 2015

பூரியா, பொங்கலா

'நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' என்று நேற்றைய தினம் நற்செய்தியை வாசித்துவிட்டு, 'உலகமே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. நாம் எப்படி இருக்கிறோமோ அதையேதான் அது நமக்கு மறுபடியும் கொடுக்கும்!' என்று மறையுரை வைத்தேன்.

ஆனால், நாளைய முதல் வாசகத்தின் சாரம் இதற்கு எதிர்மறையாக இருக்கிறது.

எரேமியா 'நன்மை' என்னும் அளவையால் அளந்தாரென்றால், அவருக்கு மீண்டும் 'நன்மை' அல்லவா அளக்கப்பட வேண்டும்? எரேமியா முகம் பார்க்கும் கண்ணாடி அதைத்தானே திரும்பக் காட்ட வேண்டும். ஆனால் அவர் ஏன் 'நன்மைக்குக் கைம்மாறு தீமையா?' என இறைவனிடம் புலம்புகின்றார்?

வாழ்க்கை நமக்கு எல்லா நேரங்களிலுமே நீதியாக இருப்பதில்லை.

'நாம் பூரியா, பொங்கலா என்று காசைச் சுண்டிப்பார்த்துக் கொண்டு காத்திருக்கும் போது, வாழ்க்கை பழையசோற்றைப் பரிமாறிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறது!'

நாளைய முதல் வாசகத்தின் பின்புலம் என்ன? எதற்காக எரேமியாவுக்கு எதிரான சூழ்ச்சி தொடங்குகிறது?

எரேமியாவின் நூலில் 'குயவர் வீட்டு இறைவாக்கு' (18:1-17) மிகவும் முக்கியமானது. யூதர்களின் மிகப்பெரும் நாடுகடத்தல் நிகழ்வான பாபிலோனிய நாடுகடத்தலை இறைவாக்காக உரைக்கும் பகுதியே இது.

எரேமியாவின் இறைவாக்கைக் கேட்டு யாரும் பயப்பட்டது போலத் தெரியவில்லை.

'இதெல்லாம் சொல்லிப் பயனில்லை.
எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம்.
நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின்படியே செயல்படுவோம்!' (18:12)
என்று எதிர்த்துப் பேசுகின்றனர்.

எதற்காக எரேமியா சொன்னதை மக்கள் கேட்கவில்லை?

அ. ஒருவேளை எரேமியா மிகவும் சின்னப் பையனாக அல்லது வயது குறைவானவராக இருந்திருக்கலாம். நீ யாருடா பொடிப்பயல்? நீ சொல்லி நான் கேட்கவா? என்று நினைத்திருக்கலாம்.

ஆ. கடவுள் சொல்வார். ஆனால், செய்ய மாட்டார் என்று நினைத்திருக்கலாம். அவர் அப்படி, இப்படி பயம் காட்டுவார். ஆனா, கடைசியில் மன்னிச்சு வுட்றுவார்! என ஓய்ந்திருந்திருக்கலாம்.

இ. தங்கள் நாட்டின் படைகள் மற்றும் அரசன் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து கொண்டு, 'என்னை அழிக்க எவனடா வருவான்?' 'எங்கள் கப்பல் மூழ்கவே மூழ்காது!' என்று டைட்டானிக் வசனம் பேசிக்கொண்டிருக்கலாம்!

எரேமியாவை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது ஒருபுறம்.

மற்றொருபுறம் எரேமியாவின் புலம்பல்:

'குருக்களிடமிருந்து சட்டமும்,
ஞானிகளிடமிருந்து அறிவுரையும்,
இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது!'
என்று கடவுளே உமக்கு வேலையில்லை, 'உம் பருப்பு வேகாது!' என்று கடவுளையும் கட்டுப்படுத்த விழைகின்றார் எரேமியா.

மேலும், 'அன்று நான் அவர்களைப் பற்றி நல்லது சொன்னேன். ஆனால் இன்று அவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்?' என்றும் புலம்புகின்றார்.

நல்லவராய் இருந்தவர் கெட்டவராய் மாறிவிட்டார். ஆகவே, நன்மைக்குப் பதில் தீமையே செய்கிறார்!

இந்த நிலை இன்று எல்லா இடத்திலும் இருக்கிறது. நல்லது சொல்பவர் யாராக இருந்தாலும், அது அருட்பணியாளராகவே, பொதுநிர்வாகத்தினராகவோ, குடும்பத்தில் அம்மா, அப்பாவாகவோ, நண்பராகவோ யாராக இருந்தாலும் நமக்குக் கோபம் வந்துவிடுகிறது. 'நீ யாருடா எனக்கு அட்வைஸ் கொடுக்க?' (அட்வைஸ் என்றுதான் நம் நாட்டில் இலகுவாகவும், இலவசமாகவும் கிடைக்கக் கூடியது!) என்று கேட்பது. நாம் இப்படிக் கேட்பதற்கு மேற்சொன்ன மூன்று காரணங்கள் தான் இருக்க முடியும்.

நன்மைக்குப் பதில் நன்மை செய்ய முடியவில்லையென்றாலும், தீமை செய்யாமல் இருப்பதே சால்பு.


1 comment:

  1. நம் மண்ணில் பல நல்லவர் தீயவர்களாக மாறுவதற்குக் காரணம் ....எந்த நன்மைத்தனமுமே " கையாளாகாத்தனமாக" ...நல்லவர்கள் " இளிச்சவாயர்களாக" கருதப்படுவதுதான்.இந்த ஒருநிலை எரேமியாவுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.வியாபாரத்தனமான உலகில் எல்லாமே வியாபாரமாகத்தான் பார்க்கப்படுகிறது.இதையும் மீறிய நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று நம்புவோம்; அவர்களை நல்லவர்களாகவே வாழவிடுவோம்...

    ReplyDelete