Tuesday, March 24, 2015

தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?

நாளைய நற்செய்திப் பகுதியை வாசிக்கும் போது இரண்டு விஷயங்கள் என் மனதை நெருடுகின்றன.

ஒன்று இயேசுவின் பேச்சு.

மற்றொன்று பரிசேயர்கள் அல்லது யூதர்களின் பேச்சு.

'நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்!' என சபிக்கின்றார் இயேசு.

'இவர் தற்கொலை செய்துகொள்ளப்போகிறாரோ?' என்று கிண்டல் செய்கின்றனர் பரிசேயர்கள்.
ஒருவர் மற்றவரைப் பார்த்து சாபம் விட்டுக்கொண்டது போல இருக்கிறது.

பாவம் என்றால் என்ன? என்பதற்கு புதிய அர்த்தம் கொடுக்கிறது நாளைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இடத்திற்கு நாம் போகமுடியாமல் இருப்பதே பாவம்.

இன்று எங்கள் பங்கின் வீடுகள் மந்திரிப்பின் இறுதிநாள். இந்த இறுதி நாளில் இறுதி வீட்டை மந்திரித்தவுடன் ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து புறப்படும்போது என்னுடன் வந்தவரை வெளியே போகச்சொல்லிவிட்டு என்னை மட்டும் மீண்டும் அழைத்துக்கொண்டு சென்றார் அந்தப் பெண்மணி.

'உங்களிடம் ஒன்று கேட்கவா?' என்றார்.

'இரண்டு கூட கேளுங்கள்!' என்றேன்.

'என் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவரின் உடலை நாங்கள் எரித்துவிட்டோம். அந்தச் சாம்பலை ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன். அதை நீங்கள் மந்திரிப்பீர்களா?'

கீழே குனிந்து ஒரு டிராயரைத் திறந்து ஒரு நீல நிற ஒரு கனசதுரப் பெட்டியை எடுத்தார்.

பெட்டியின் வெளியே அலையடிக்கும் கடற்கரையின் படம். பெட்டியின் மேல் அவருடைய கணவரின்

பெயர், பிறப்பு, இறப்பு தியதி குறிப்பிடப்பட்டிருந்தது.

கண்களை மூடி செபம் சொன்னேன்.

'கைகளை வைத்து மந்திரியுங்கள்!' என்றார்.

கைகளை வைக்கக் கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் வைத்தேன். செபித்தேன். தீர்த்தம் தெளித்தேன்.

'நன்றி!' என்றார்.

கொஞ்ச நேரம் கண்ணீர் வடித்தார்.

'போய் வரட்டுமா?' என்றேன்.

'ஹேப்பி ஈஸ்டர்' என்றார்.

'ஹேப்பி ஈஸ்டர்' என்று சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

இறந்தவர்களின் சாம்பலை வீட்டில் வைத்திருப்பதை இன்றுதான் முதன்முதலில் கண்டேன்.

கிறிஸ்தவர்களில் உடலை எரிப்பது அல்லது தானம் செய்வது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நம் நாட்டில் புழக்கத்தில் வருகிறது. எரிப்பதா? புதைப்பதா? தானம் செய்வதா? என்ற கேள்வி இப்போது வேண்டாம்.

ஒருவேளை அந்தப் பெண்மணிக்கு சாம்பலின் உருவத்தில் அவரது கணவர் உடனிருக்கிறார் போல என்று நினைத்துக் கொள்வதுதான் சரி.

நம் உறவுகளை நாம் எந்த விதத்திலாவது அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம் ஆசையாக இருக்கிறது.

அப்படியிருக்க, 'நீ அழிந்து போ! இறந்து போ!' என்று சொல்வது வெறுப்பின் உச்சகட்டமாக மட்டும்தான் இருக்க முடியும்.

இயேசுவைக் கொலை செய்ய திட்டம் தீட்டிக்கொண்டிருந்த அவரின் எதிரிகள் ஒருவேளை அவராகவே தற்கொலை செய்துகொள்வாரோ என்று கூட எண்ணுகின்றனர். அதனால் தான் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கின்றனர்.

யாரையும் 'நீ வேண்டாம்!' என்று சொல்லாத மனம் பெற்றால் எத்துணை நலம்.

4 comments:

  1. எனக்கும் கூட மிக நெருடலாக இருந்தது இன்றையப் பதிவு. ஏதோ ஒரு துப்பறியும் புதினத்தைப் படிப்பதற்கான ஆவலைத் தூண்டி விட்டிருந்தீர்கள்.நம்மை நோக்கி வருபவர்களுக்கு நேசக்கரம் நீட்டப் பெரிய மனது வேண்டும்.'அன்பு' என்ற ஒன்று மறுக்கப்பட்டதால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட எத்துணையோ பேரை நான்றிவேன்.நம்மிடம் வரும் அனைவரையும் நம்மால் அணைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்; ஆனால் அவர்களை 'வேண்டாம்' என்று சொல்லிக் காயப்படுத்த வேண்டாமே! அதிலும் 'சபிப்பது' என்பது மிக்க் கொடூரமானதொரு செயல்.பிறரை வாழ்த்த மனதில்லையெனினும் கூட அவர்களுக்குக் கேடு நினையா நல் உள்ளத்தை இறைவனிடம் கேட்போம்......

    ReplyDelete
  2. யாரையும் 'நீ வேண்டாம்!' என்று சொல்லாத மனம் பெற்றால் எத்துணை நலம்.Thanks

    ReplyDelete
  3. யாரையும் 'நீ வேண்டாம்!' என்று சொல்லாத மனம் பெற்றால் எத்துணை நலம்.Thanks

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete